யோகி கிரிபாலா


யோகி கிரிபாலா
x
தினத்தந்தி 21 Nov 2019 3:51 PM GMT (Updated: 21 Nov 2019 3:51 PM GMT)

வங்காளத்தில் ஒரு நடுத்தரமான கிராமத்து வீடு. அதனுள் இருந்து வெளியே வந்தார் ஒரு தாய். கையை கண்ணுக்கு மேல் வைத்து வானத்தை நோக்கினார்.

சூரியன் உச்சியில் சுட்டெரித்துக் கொண்டு இருந்தான்.

“ஐயோ.. உச்சிப் பொழுதாகி விட்டதே. வந்து விடுவாளே! சமைத்ததில் ஒரு பாகத்தை மட்டும் சட்டியில் மூடி வைத்து விட்டு, மீதி சாப்பாட்டை மறைத்து வைத்தார்.

மறைக்கும் போதே மனதில் வேதனை தோன்றாமல் இல்லை. தன் பிள்ளைதான் சாப்பிடுகிறது என்றாலும், வறுமை தாண்டவமாடும் வீட்டில், மற்ற குடும்ப உறுப்பினர்களையும் அந்த தாய் கவனித்தாக வேண்டுமே.. ‘எல்லோரையும் போலதானே இந்தப் பெண்ணும் பிறந்தாள். இவளுக்கு மட்டும் எப்படி இரண்டு வயிறு போல எப்போதும் “பசி.. பசி..” என்று பறக்கிறாள். எவ்வளவு செய்து வைத்தாலும் எதையும் மிச்சம் வைக்காமல் தின்று விடுகிறாள். நாளைக்கு பிறர் வீட்டுக்கு வாழ்க்கைப்பட்டுப் போகும் பெண்.’ மனம் வெதும்பி பெருமூச்சு விட்டார் அந்த தாய்.

அப்போது வீட்டிற்கு வெளியே “அம்மா..” என்ற குரலும்., அதைத் தொடர்ந்து “பசிக்கிறது.. சாப்பாடு ஆகி விட்டதா?” என்ற குரலும் கேட்டது.

வந்தது அந்த தாயின் மகள்தான். அவள் பெயர் பாலா.

மகளின் குரலைக் கேட்டதும், “எல்லாம் ஆகி விட்டது. வந்து சாப்பிடு. அதென்ன கொஞ்சம் கூட பொறுக்க முடியாத பசி? நாளைக்கு கல்யாணம் ஆகி புகுந்த வீடு போனால் எப்படி கேலி செய்து சிரிக்கப் போகிறார்களோ!” என்றார்.

“போம்மா.. அதெல்லாம் அப்போது பார்த்துக்கலாம். முதல்ல நீ சாப்பாட்டப் போட்டு சாம்பார ஊற்று” என்று விளையாட்டாகவே பதில் சொன்ன பாலாவைப் பார்த்து, மீண்டும் பெருமூச்சு விடத்தான் முடிந்தது, அவளது அம்மாவால்.

அடுத்த வருடமே பாலாவிற்கு திருமணம் செய்து வைத்தனர். எல்லா இடங்களிலும் இருக்கும் மாமியார் - மருமகள் சண்டை அங்கேயும் நடந்தது.

பாலாவின் பெரும் உணவுப் பழக்கத்தை அசிங்கமாக கிண்டல் செய்தார் மாமியார்.

அவரின் கேலி பொறுக்க முடியாமல் இனிமேல், “உணவையும், நீரையும் தொடேன்” என்று சபதம் செய்தாள், பாலா.

அதற்கும் அவரது மாமியார், “உன்னால் சாப்பிடாமல் இருக்க முடியுமா? என்று கிண்டல் செய்யவே வீட்டை விட்டு வெளியேறினார்.

அவரின் புகுந்த வீட்டுக்கு காசியில் பரம்பரை பரம்பரையாக ஒரு குருவின் ஆசிரமத்துடன் தொடர்பு இருந்திருக்கிறது. பாலாவின் பயணத்தையும் இறைவன் அதை நோக்கியே அமைத்திருந்தார்.

காசியில் கங்கை ஆற்றில் இறங்கிக் குளித்து விட்டு மேலேறி வந்த பாலாவின் முன்பு, அந்த குரு நின்று கொண்டிருந்தார்.

“அன்புள்ள சிறிய அன்பே! உங்கள் வேண்டுதலை நிறைவேற்ற கடவுளால் அனுப்பப்பட்ட குரு நான்.

இன்றைய தினத்தில் இருந்து நீங்கள் நிழலிடப்பட்ட வெளிச்சத்தில் வாழ்கிறீர்கள்” என்று ஆசீர்வாதம் செய்தார்.

அதன்பிறகு, அந்த குருவே பாலாவிற்கு, கிரியா யோகாவையும் கற்றுக்கொடுத்தார். ‘கிரியா யோகா’ என்பது, சுவாசப் பயிற்சி மற்றும் மந்திரம் மூலமாக சாப்பாடு இல்லாமல் உயிர் வாழும் முறை.

அங்கே தான் சாதாரண பாலா ‘கிரிபாலா’வாக ஆனார்.

அன்றில் இருந்து அன்னைக்கு இரவும், பகலும் ஒன்றானது. இரவு முழுவதும் தியானத்தில் இருந்தாலும், பகலில் எப்போதும் போல வெளி வேலைகளைச் செய்வார். இப்படி ஒரு பெண் உணவும், நீரும் இல்லாமல் உயிர் வாழ்கிறார் என்ற தகவல் அந்தப் பகுதியை ஆட்சி செய்த மன்னனுக்கு தெரிவிக்கப்பட்டது. (மாகாணத் தலைவர் என்றும் சொல்கிறார்கள்)

அவர், கிரிபாலாவை அழைத்து வரச் செய்து, ஒரு தனி அறையில், இரவும்- பகலும் வைத்து கண்காணித்திருக்கிறார். சில நாள் கண்காணிப்பிற்குப் பிறகு, அவரது உன்னதமான சக்தியைக் கண்டு அவரை ‘லைட்’ என்று கூறி விடுவிக்கிறார்கள். அதாவது ‘லைட்’ என்பதற்கு, ‘ஈத்தர்’, ‘சூரியன்’ மற்றும் ‘காற்றில் இருந்து ஒரு குறிப்பிட்ட யோக உயிர் சக்தியைப் பெறுபவர்’ என்று பொருள்.

கிரிபாலா அம்மையாரே, தான் வாழ்ந்தது பற்றிய வாழ்க்கைக் குறிப்பை, தனது சொந்த வாக்குமூலமாகக் கொடுத்திருக்கிறார்.

தான் சிறுவயதில் உணவின் மீது மிகவும் விருப்பம் கொண்டவராக இருந்ததாகவும், தன் மாமியாரால் இந்தப் பழக்கம் மிகவும் கேலி செய்யப்பட்டதால் உணவையும், நீரையும் விட்டொழித்ததாகவும் கூறுகிறார். மேலும் தனது பன்னிரண்டு வயது நான்கு மாதங்களில் இருந்து தற்போதைய 68 வயது வரை, கிட்டத்தட்ட 56 ஆண்டுகள் சாப்பாடும் நீரும் எடுத்துக் கொண்டதில்லை. யார் கேட்டும் இந்த யோகா முறையை கற்றுக் கொடுத்ததில்லை” என்றும் அன்னை தன் வாய் மொழியாகவே கூறி உள்ளார்.

இன்னும் சிலர் அன்னை கிரிபாலா “கேசரி முத்திரை” மூலமாக உயிர் வாழ்ந்திருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.

கேசரி முத்திரை என்பது முறையாக குருவின் மூலமாக செய்யப்பட வேண்டும். அதாவது நாக்கை உள்பக்கமாக மடித்து, அண்ணாக்கு என்று சொல்லப்படும் மேல்நாக்கை தொட வேண்டும். நமது மண்டையில் இருந்து ஒரு திரவம் இந்த அண்ணாக்கு வழியாக இறங்கி சொட்டுச் சொட்டாக வந்து கொண்டே இருக்கும்.

இதை முறையாக ஒருவர் பயிற்சி செய்தால் பசி, தாகம், தூக்கம் போன்றவையே இருக்காது. இந்த யோகப் பயிற்சியின் மூலம் உயர்ந்த ஆன்மிக நிலையை அடையலாம். விஷம் போன்ற நஞ்சுப் பொருட்களால் மரணம் தாக்காது. இதையும் அன்னை பயிற்சி செய்து இருக்கலாம் என்று சொல்கிறார்கள்.

‘எது எப்படியோ ஒரு பெண் வைராக்கியம் வைத்தால் நடவாத காரியம் இல்லை’ என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டி, உணவையும், நீரையும், விட்டொழித்து நூற்றி இருபது வருடங்கள் வரை யோக வாழ்க்கை வாழ்ந்த அன்னை கிரிபாலா என்றும் போற்றுதலுக்கு உரியவரே.

-தொடரும்.

Next Story