யோகம் தரும் யோகீஸ்வரர்


யோகம் தரும் யோகீஸ்வரர்
x
தினத்தந்தி 26 Nov 2019 9:49 AM GMT (Updated: 26 Nov 2019 9:49 AM GMT)

நாகப்பட்டினம் மாவட்டத்தின் ஒரு பகுதியை தஞ்சையைப் போல் நெற்களஞ்சியமாக ஆக்கிக் கொண்டிருப்பது காவிரி நதி. இதன் கிளை நதி மணிகர்ணிகை.

நாகப்பட்டினம் மாவட்டத்தின் ஒரு பகுதியை தஞ்சையைப் போல் நெற்களஞ்சியமாக ஆக்கிக் கொண்டிருப்பது காவிரி நதி. இதன் கிளை நதி மணிகர்ணிகை. இந்த நதி காவிரியில் உள்ள புனித நதியான கங்கை நதிக்கு சமமான நதி என புராணங்கள் குறிப்பிடப்படுகின்றன. இந்த புனித நதியின் தென் பகுதியில் திருவெண்காடும், வடபகுதியில் மங்கைமடமும் அமைந்துள்ளன.

12 ரிஷிகள் மங்கைமடத்தில் சிவபெருமானை நோக்கி தவமிருந்தனர். இதையடுத்து இறைவன் சுயம்புவாகத் தோன்றி அவர்களுக்கு அருள்பாலித்தாராம். அந்த புராணத்தின் படி உருவானதே இங்குள்ள யோகீஸ்வரர் ஆலயம். இங்குள்ள இறைவன் ‘யோகநாதசுவாமி’ என்றும், இறைவி ‘யோகாம்பாள்’ என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. மேற்கு திசையில் இருந்து ஆலயத்திற்குள் வரவும் ஒரு வாசல் உள்ளது. ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும் விசாலமான பிரகாரம் காணப்படுகிறது. அடுத்துள்ள மகா மண்டபத்தில் பலிபீடம் இருக்க, அடுத்து நந்தியம் பெருமான் அருள் பாலிக்கிறார். மகாமண்டபத்தின் வலது புறம் அன்னை யோகம்பாள் நின்ற கோலத்தில் தென்திசை நோக்கி இன்முகம் மலர வீற்றிருக்கிறாள்.

அவருக்கு எதிரே உள்ள கருவறையில் யோகநாத சுவாமி, லிங்கத் திருமேனியில் பத்ம பீடத்தில் மேற்குத் திசை நோக்கி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். மகா மண்டபத்தின் மேல் திசையில் பெருமாளின் திருமேனி உள்ளது. திருச்சுற்றில் விநாயகர், ஞான பூங்கோதை, சுப்ரமணியர், வள்ளி, தெய்வானை, கஜலட்சுமி, பைரவர், நவக்கிரக நாயகர்கள், சூரியன், விஷ்ணு, துர்க்கை அம்மன் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். தேவ கோட்டத்தின் தென் திசையில் தட்சிணாமூர்த்தி அருள்புாி கிறார்.

கருங்கல் திருப்பணியுடன் கூடிய இந்த ஆலயம் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்கின்றனர் பக்தர்கள். ஆலயத்தின் மேற்கு திசையில் ஆலய தீர்த்தமான திருக்குளம் உள்ளது. ஆலய தல விருட்சம் பால மரம்.

பொதுவாக துர்க்கை அம்மன் தென்திசை நோக்கி அருள்பாலிப்பார். ஆனால் இங்கு கிழக்கு பிரகாரத்தில் அருள்பாலிக்கும் விஷ்ணு துர்க்கை, மேற்கு நோக்கி அமைந்திருப்பது விஷேச அமைப்பாகக் கருதப்படுகிறது.

ராஜ குருவான பிரகஸ்பதிக்கும், அசுர குருவான சுக்ரனுக்கும் கிரக தோஷம் பற்றியது. அவர்கள் இருவரும் தங்களை பற்றியுள்ள தோஷம் விலக, குருவின் குருவாய் இங்கு அமர்ந்து அருள்பாலிக்கும் யோக தட்சிணாமூர்த்தியை வழிபட்டனர். இதையடுத்து அவர்களது தோஷம் விலகியதாம்.

ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் என ஐந்து முகங்களைக் கொண்ட அகோரமூர்த்தியான சிவபெருமான், மருத்துவாசுரனை சம்ஹாரம் செய்தார். எனவே அவரை பிரம்மஹத்தி தோஷம் பற்றியது. அந்த தோஷம் நீங்கவும் தன்னிடம் இயல்பாக உள்ள உக்கிரத்தை குறைக் கவும் இத்தலம் அருகே உள்ள நிகரான மணி கர்ணிகை ஆற்றில் நீராடினார். பின் தன் ஐம்புலன்களையும் அடக்கி சாந்தம் ஏற்பட தவம் இருந்து யோகம் செய்தார். எனவே இத்தல இறைவன் யோநாத சுவாமி என்றும், யோகீஸ்வரர் என்றும் அழைக்கப்படலானார். மங்கைமடம் என்ற இத்தலத்திற்கு இதனால் யோகீஸ்வரம் என்ற பெயரும் உண்டு.

ஐப்பசி அமாவாசையின் போது இறைவன், இறைவி எழுந்தருளி தீர்த்தவாரி தருவதுண்டு. இது குருதலம். குரு பெயர்ச்சி நாட்களில் இங்குள்ள யோக தட்சிணாமூர்த்திக்கு விசேஷ அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுவதுண்டு. நூற்றுக்கணக்கான பக்தர்கள் இதில் பங்கு கொண்டு பயன் பெறுவது உண்டு.

சுற்றிலும் அழகிய மதில் சுவர்களைக் கொண்ட இந்த ஆலயம் இந்து அறநிலையத் துறையின் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

யோககுரு பகவானின் அருளைப் பெற்று மேன்மை பெறவும் இறைவன் யோகீஸ்வரர் அருளால் வாழ்வில் யோகம் பெறவும் ஒரு முறை நாமும் இத்தலத்தை தரிசித்து வரலாமே!

இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 9 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.

அமைவிடம்

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி திருவெண்காடு பேருந்து சாலையில் சீர்காழியில் இருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது மங்கை மடம் திருத்தலம்.

மல்லிகா சுந்தர்

Next Story
  • chat