குற்றப் பரிகாரங்களை நிறைவேற்றுவது


குற்றப் பரிகாரங்களை நிறைவேற்றுவது
x
தினத்தந்தி 3 Dec 2019 12:09 PM GMT (Updated: 3 Dec 2019 12:09 PM GMT)

இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70 -க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘குற்றப்பரிகாரங்களை நிறைவேற்றுவது’ குறித்த தகவல்களை காண்போம்.

குற்றப்பரிகாரம் என்பது பாவம் செய்த ஒருவரின் பாவத்தை போக்க ஏதேனும் பரிகாரம் தேடுவதாகும்.

ஒருவர் குற்றம் புரிந்துவிட்டால், முதலில் அவர் இறைவனிடம் உண்மையான முறையில் பாவமன்னிப்புத் தேட வேண்டும். மேலும் சில வகையான குற்றங்களுக்கு பரிகாரங்கள் தேடவேண்டியது இருப்பதால் அந்தந்த குற்றங்களுக்கு இஸ்லாம் அறிவுறுத்தும் குற்றப்பரிகாரங்களையும் நிறைவேற்றுவது அவசியமாக உள்ளது.

இதுவும் இறைநம்பிக்கையின் உடல் சார்ந்த பகுதியாக உள்ளது. இதைப் பற்றியும் நாம் தெரிந்து கொள்வது கட்டாயமாக உள்ளது.

மூடநம்பிக்கை

மனைவியைத் தாயுடன் ஒப்பிடுவது அன்றைய அறியாமைக்கால மக்களின் மூடநம்பிக்கையாக இருந்து வந்தது. தம் மனைவியைப் பிடிக்காத போது ‘உன்னை என் தாயைப்போல கருதிவிட்டேன்’ என்று கோபத்தில் சத்தியம் செய்து கூறிவிட்டு மனைவியோடு குடும்ப வாழ்க்கை நடத்தமாட்டார்கள்.

இதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிப்பதுடன், அந்த சத்தியத்தை முறித்துவிட்டு நான்கு மாதங்களுக்குள் மனைவியுடன் சேர்ந்து வாழ வேண்டும். மேலும் பின்வரும் பரிகாரத்தையும் நிறைவேற்ற வேண்டும் எனக்கூறி இந்த மூடநம்பிக்கையை இஸ்லாம் தகர்த்து விடுகிறது.

‘உங்களில் தமது மனைவியரை கோபத்தில் தாய் எனக் கூறுவோருக்கு அவர்கள் தாயாக இல்லை. அவர்களைப் பெற்றவர்கள் தவிர மற்றவர் அவர்களின் தாய்களாக முடியாது. வெறுக்கத்தக்க சொல்லையும், பொய்யையும் அவர்கள் கூறுகின்றனர். இறைவன் குற்றங்களை அலட்சியம் செய்பவன்; மன்னிப்பவன். தமது மனைவியரைக் கோபத்தில் தாய் எனக் கூறிவிட்டு, தாம் கூறியதைத் திரும்பப் பெறுகிறவர், ஒருவரையொருவர் தீண்டுவதற்கு முன் ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். இதுவே உங்களுக்கு கூறப்படும் அறிவுரை. நீங்கள் செய்வதை இறைவன் நன்கறிந்தவன். (அடிமை) கிடைக்காதவர் ஒருவரையொருவர் தீண்டுவதற்கு முன் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும். யாருக்குச் சக்தியில்லையோ அவர் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். இது இறைவனையும், இறைத்தூதரையும் நீங்கள் நம்புவதற்கு ஏற்றது. இவை இறைவனின் வரம்புகள். (அவனை) மறுப்பவருக்குத் துன்புறுத்தும் வேதனை இருக்கிறது.’ (திருக்குர்ஆன் 58:2,3,4)

அதுபோல, ‘தமது மனைவியுடன் இனி கூடுவதில்லை’ என்று சத்தியம் செய்தவர், அந்த சத்தியத்தை முறிக்கும் போது அதற்குரிய பரிகாரத்தையும் நிறைவேற்றிட வேண்டும்.

‘தங்கள் மனைவியருடன் கூடுவதில்லையென்று சத்தியம் செய்து கொண்டு (விலகி) இருப்பவர்களுக்கு நான்கு மாதத் தவணையுள்ளது; எனவே (அதற்குள்) அவர்கள் மீண்டு(ம் சேர்ந்துக்) கொண்டால் நிச்சயமாக இறைவன் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையாளனாகவும் இருக்கின்றான்.’ (திருக்குர்ஆன் 2:226)

ரமலான் நோன்பு

ரமலான் மாத கடமையான நோன்பு நோற்பவர் நோன்பின் இடையில் தமது மனைவியுடன் உறவுகொண்டால், அவர் தமது குற்றப்பரிகாரமாக மேற்கூறப்பட்டதையே நிறைவேற்ற வேண்டும்.

‘தவறாக அன்றி, ஒரு இறைநம்பிக்கையாளர் பிறிதொரு இறைநம்பிக்கையாளரை கொலை செய்வது ஆகுமானதல்ல; உங்களில் எவரேனும் ஒரு இறைநம்பிக்கையாளரை தவறாக கொலை செய்துவிட்டால், அதற்குப் பரிகாரமாக இறைநம்பிக்கை உடைய ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்; அவனுடைய குடும்பத்தாருக்கு நஷ்டஈடு கொடுக்க வேண்டும். அவனது குடும்பத்தார் (நஷ்ட ஈட்டுத் தொகையை மன்னித்து) அதை தர்மமாக விட்டாலே தவிர; கொல்லப்பட்ட அவன் உங்கள் பகை இனத்தைச்சார்ந்த இறைநம்பிக்கையாளராக இருந்தால், இறைநம்பிக்கை உடைய ஓர் அடிமையை விடுதலை செய்தால் போதும் (நஷ்ட ஈடில்லை; இறந்த) அவன் உங்களுடன் சமாதான (உடன்படிக்கை) செய்து கொண்ட வகுப்பாரைச் சேர்ந்தவனாக இருந்தால், அவன் சொந்தக்காரருக்கு நஷ்டஈடு கொடுப்பதுடன், இறைநம்பிக்கை உடைய ஓர் அடிமையை விடுதலை செய்யவும் வேண்டும்; இவ்வாறு (பரிகாரம்) செய்வதற்கு சக்தியில்லாதவனாக இருந்தால், இறைவனிடம் மன்னிப்புப் பெறுவதற்காகத் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு வைக்க வேண்டும். இறைவன் நன்கறிந்தவன்; பூரண ஞானமுடையவன்.’ (திருக்குர்ஆன் 4:92)

ஹஜ் கடமையில் தவறு நேர்ந்தால்...

‘ஹஜ்ஜையும், உம்ராவையும் இறைவனுக்காகப் பூர்த்தி செய்யுங்கள்; (அப்படிப் பூர்த்தி செய்ய முடியாதவாறு) நீங்கள் தடுக்கப்படுவீர்களாயின் உங்களுக்கு சாத்தியமான (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) தியாகப் பிராணியை அனுப்பிவிடுங்கள்; அவை அந்த (குர்பான் செய்யப்படும்) இடம் அடைவதற்கு முன் உங்கள் தலைமுடிகளைக் களையாதீர்கள்; ஆயினும் உங்களில் எவரேனும் நோயாளியாக இருப்பதினாலோ, அல்லது தலையில் ஏதேனும் தொந்தரவு தரக்கூடிய பிணியின் காரணமாகவோ (தலைமுடியை இறக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால்) அதற்குப் பரிகாரமாக நோன்பு இருத்தல் வேண்டும், அல்லது தர்மம் செய்தல் வேண்டும், அல்லது குர்பானி கொடுத்தல் வேண்டும். பின்னர் நெருக்கடி நீங்கி, நீங்கள் சமாதான நிலையைப் பெற்றால் ஹஜ் வரை உம்ரா செய்வதின் சவுகரியங்களை அடைந்தோர் தனக்கு எது இயலுமோ அந்த அளவுக்கு குர்பானி கொடுத்தல் வேண்டும். அவ்வாறு இயலாதபட்சத்தில் ஹஜ் செய்யும் காலத்தில் மூன்று நாட்களும், பின்னர் தமது ஊர் திரும்பியதும் ஏழு நாட்களும் ஆகப் பூரணமாகப் பத்து நாட்கள் நோன்பு நோற்க வேண்டும்.’ (திருக்குர்ஆன் 2:196)

ஒருவர் ஹஜ் செய்யும் போது, அதன் கடமையை முழுமையாக நிறைவேற்றும் முன்பு, ஆசையுடன் தமது மனைவியுடன் உறவுகொண்டால், அவரின் ஹஜ் முறிந்துவிடும். என்றாலும் தொடர்ந்து ஹஜ்ஜின் கிரியைகளைச் செய்து முடிக்க வேண்டும். அடுத்த வருடத்தில் ஹஜ்ஜை திரும்ப நிறைவேற்ற வேண்டும். மேலும், செய்த குற்றத்திற்கு குற்றப் பரிகாரமும் நிறைவேற்ற வேண்டும். அது என்னவெனில் ஒரு ஒட்டகத்தை அறுத்து பலியிட வேண்டும். அது முடியாத போது ஹஜ் காலத்தில் மூன்று நோன்பும், ஊர் திரும்பியதும் ஏழு நோன்பும் நோற்க வேண்டும்.

சிறுபாவங்கள்

நாம் நமது வாழ்வில் பெரும் பாவங்கள் செய்யும்போது, அதற்காக இறைவனிடம் மன்னிப்புக் கோருகிறோம். அந்த குற்றங்களுக்காக தகுந்த குற்றப்பரிகாரங்களை நிறைவேற்றுகிறோம். இது ஒருபுறம் இருந்தாலும், நமது வாழ்வில் சிறு சிறு பாவங்கள் நிகழத்தான் செய்கிறது. இந்த பாவங்களுக்கு, நாம் நிறைவேற்றும் வணக்க வழிபாடுகள் குற்றப்பரிகாரங்களாக அமைந்து விடுகிறது.

‘ஐங்காலத் தொழுகைகள், ஒரு வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகையிலிருந்து, மறு வெள்ளிக்கிழமை வரை, ஒரு வருட ரமலானிலிருந்து மறுவருட ரமலான் வரை இவற்றுக்கு மத்தியில் பெரும் பாவங்களை தவிர்ந்திருந்தால், இவைகள் சிறுபாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு பரிகாரங்களாக அமைந்து விடுகிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)

‘அரபா நாளின் நோன்பு கடந்த வருடம், மற்றும் எதிர் வரும் வருடம் ஆகிய இரு வருடங்களின் (சிறு) பாவங்களுக்கு பரிகாரமாக அமையும். மேலும், முஹர்ரம் மாதம் பத்தாம் (ஆஷூரா) தினம் நோன்பு நோற்பது ஒரு வருட (சிறு) பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: அபூகதாதா (ரலி), நூல்: முஸ்லிம்)

இவ்வாறு சில பெரும் பாவங்களுக்கும், சிறு பாவங் களுக்கும் பரிகாரங்கள் இஸ்லாத்தில் உண்டு. அவைகளை முறையாக நிறைவேற்றும்போது நமது பாவங்கள் மன்னிக்கப்படுகிறது. எனவே இறைநம்பிக்கையை பாதுகாக்க குற்றப்பரிகாரங்களை நிறைவேற்றுவோம். பாவங் களிலிருந்து விடுதலை பெறுவோம்.

Next Story