ஆன்மிகம்

மனிதர்களை புனிதர்களாக மாற்றும் கர்த்தர் + "||" + The Lord makes men saints

மனிதர்களை புனிதர்களாக மாற்றும் கர்த்தர்

மனிதர்களை புனிதர்களாக மாற்றும் கர்த்தர்
நம் உடம்பில் உள்ள உறுப்புகள் அனைத்துமே முக்கியமானதுதான். அந்த உறுப்புகளில் மிக முக்கியமானது இருதயம் ஆகும்.
இறைவன் மனிதனைப் படைக்கும்போது அவனது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளும் ஒவ்வொரு பணியை செய்யத்தக்கதாக படைத்தார். ஆனாலும் இவைகள்  எல்லாவற்றிலும் இதயத்திற்கு ஒரு விசேஷப் பணி உண்டு, இந்த இருதயம் 24 மணி நேரமும் இயங்கி கொண்டேயிருக்கும்.

நாம் கண்களை மூடி நித்திரை செய்யும்போது கூட இருதயம் மட்டும் உறங்காமல் ஓய்வெடுக்காமல் துடித்துக்கொண்டே இருக்கும். இருதயம் ஒரு வினாடி ஓய்வெடுத்தால் கூட மரணம் நிச்சயம்.

இப்படிப்பட்ட இருதயத்தைக் குறித்து அதாவது மிக மிக முக்கியமான இருதயத்தைக் குறித்து எரேமியா என்கிற தீர்க்கதரிசி இப்படியாக கூறுகிறார்:

“எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?” (எரேமியா 17:9).

ஆம் இருதயம் மிக முக்கியமானது மட்டுமல்ல, மிக கேடுள்ளதாகவும் இருக்கிறது என்று வேதம் கூறுகிறது. இப்படிப்பட்ட இருதயத்தை புதுப்பித்து ஆசீர்வதித்து ஒவ்வொரு கேடான இருதயத்தையும் நல்ல இருதயமாக, அன்பும், பண்பும், பாசமும் நிறைந்த இருதயமாக மாற்றவே இறைமகனாய் இயேசு பூமியில் அவதரித்தார்.

அவருடைய போதனைகளில் கூட இருதயத்தைக் குறித்து இப்படியாக குறிப்பிடுகிறார். “இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும். இவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்” (மத்தேயு 15:19,20).

இப்படி வாழ்ந்த மனிதர்களை மீட்டெடுத்து புனிதர்களாய் மாற்றவே ஆண்டவர் பூமியில் இறைமகன் இயேசுவாய் வெளிப்பட்டார். அவர் பூமியில் பிறந்த பொழுது இருளில் இருக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள் என்று வேதம் கூறுகிறது.

“உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி” என்று இயேசு கிறிஸ்துவைக் குறித்து வேதம் கூறுகிறது.

“நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான்” என்று இயேசு கிறிஸ்துவும் திருவுளம்பற்றினார்.

இந்த இயேசுபிரானை யார் இருதயத்தில் விசுவாசிக்கிறார்களோ அவர்கள் வாழ்க்கை அப்படியே முற்றிலும் மாறுகிறது. எத்தனையோ மோசமான மனிதர்களை புனிதர்களாக மாற்றியது அருள் நாதர் இயேசுவின் போதனைகள் புனித பேதுரு, புனித தோமா, புனித அந்தோனியார், புனித பவுல் என்று அநேகரை புனிதர்களாய் மாற்றியது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளே.

இன்றைக்கு உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது?, உங்கள் உள்ளம் எப்படி இருக்கிறது?, உங்கள் உள்ளத்தில் உள்ள இருதயத்தில் இயேசு கிறிஸ்துவின் போதனைகளுக்கு இடம் கொடுக்கும் போது உங்கள் வாழ்க்கையிலும் ஒரு பேரொளி வீசும், ஒரு மெய்யான ஜோதி, மெய்யான தீபம் உங்கள் வாழ்க்கையின் இருளை வெளிச்சமாக்கும். நீங்களும் உலகத்திற்கு வெளிச்சமாய் மாறுவீர்கள்.

எத்தனையோ கொலைகாரர்கள், குடிகாரர்கள், மிக மோசமான வாழ்க்கை வாழ்ந்தவர்களுடைய வாழ்க்கைகள் இயேசு கிறிஸ்து சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டதால் முற்றிலும் மாறி இருக்கிறது. அந்த தெய்வம் உங்கள் வாழ்வையும் மாற்ற விரும்புகிறார்.

‘ஆண்டவரே, என் உள்ளத்திற்குள்ள வாரும், என் வாழ்க்கையை மாற்றும்’ என்று நீங்கள் இப்பொழுதே ஆண்டவரை நோக்கி உண்மையான நம்பிக்கையோடு ஒரு சிறிய பிரார்த்தனையை செய்யுங்கள். நிச்சயமாய் இயேசு கிறிஸ்து உங்கள் வாழ்க்கையும் ஆசீர்வதிப்பார்.

காரணம், பாவிகளை இரட்சிக்கவே கிறிஸ்து இயேசு உலகத்திற்கு வந்தார். ஆம், அவர் உங்களை புனிதர்களாய் மாற்றி உங்கள் மரணத்திற்குப் பின்னர் புனிதர்கள் வாழும் புண்ணிய ஸ்தலத்திலும் சேர்த்து உங்களை மகிழ்விப்பது நிச்சயம்.

கர்த்தர்தாமே உங்களை புனிதர்களாய் மாற்றி புண்ணிய ஸ்தலத்தில் அதாவது பரலோகத்தில் சேர்ப்பராக, ஆமென்.


சகோ சி. சதீஷ், டைனமிக் பவர் மினிஸ்ட்ரி, வால்பாறை.