கொரிந்தியர்


கொரிந்தியர்
x
தினத்தந்தி 10 Dec 2019 5:59 PM IST (Updated: 10 Dec 2019 5:59 PM IST)
t-max-icont-min-icon

கொரிந்திய திருச்சபைக்கு பவுல் குறைந்தபட்சம் 4 மடல்களை எழுதினார். அவற்றில் இரண்டு மடல்கள் பைபிளில் இடம்பெற்றுள்ளன. அவற்றில் இரண்டாவது மடல் இது.

கி.பி. 55-57-ம் ஆண்டுகளுக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த மடல் எபேசுவிலிருந்து எழுதப்பட்டிருக்கிறது. தீத்துவும் இன்னொரு சகோதரரும் இணைந்து இந்த மடலை கொரிந்துக்கு எடுத்துச் சென்றனர்.

மொத்தம் 13 அதிகாரங்கள் கொண்டது இந்த மடல். இது ஒரே மடல் என்பது பொதுவான நம்பிக்கை. எனினும் விவிலிய அறிஞர்கள் மத்தியில் மாறுபட்ட கருத்துகள் உண்டு. சிலர் இதை இரண்டு மடல்களின் தொகுப்பு என்கின்றனர். முதல் ஒன்பது அதிகாரங்கள் ஒரு மடல் என்றும், அடுத்த நான்கு அதிகாரங்கள் இரண்டாவது மடல் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.

சிலரோ, இது ஐந்து மடல்களின் தொகுப்பு என்கின்றனர். ஒப்புரவு மடல், பவுல் தருகின்ற தன்னிலை விளக்க மடல், கண்ணீர் மடல், நன்கொடை பற்றி கொரிந்தியருக்கு ஒரு மடல், நன்கொடை குறித்து அக்காயாவினருக்கு ஒரு மடல் என இவர்கள் இந்த நூலைப் பிரிக்கின்றனர்.

எது எப்படியோ, முதல் மடல் கொரிந்து நகர மக்களை நோக்கி எழுதப்பட்ட மடல் என்றால், இது கொரிந்து நகர தலைவர்களை நோக்கி எழுதப்பட்ட மடல் எனலாம். பவுலின் பார்வையில் கொரிந்து திருச்சபை எப்படி இருந்தது என்பதைப் பேசுகிறது முதல் மடல். திருச்சபை தன்னை எப்படிப் பார்க்கிறது என்பதை மையமாய் வைத்து எழுதப்பட்டிருக்கிறது இரண்டாவது மடல்.

கொரிந்து திருச்சபையில் புதிய தலைவர்கள் வருகின்றனர். அவர்கள் பவுல் மீது தவறான அபிப்பிராயம் வைத்திருக்கின்றனர். எனவே சரமாரியான குற்றச்சாட்டுகளை அவர்கள் முன் வைக்கின்றனர். தங்களை முதன்மைப்படுத்த வேண்டும் என அவர்கள் முனைகின்றனர்.

இந்த மடலின் மூலம், தன்னை கேள்விக்குள்ளாக்கிய மக்களுக்கு பவுல் பதிலளிக்கிறார். அப்படி என்னதான் குற்றச்சாட்டுகள் வைத்தார்கள்?

பவுல் தனது திட்டத்தை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருக்கிறார். கொரிந்து மக்களை நேரில் சந்திக்க அவருக்கு துணிச்சல் இல்லை, அதனால் தான் கடிதம் மூலம் சந்திக்கிறார். அவர் தன்னம்பிக்கைக் குறைவான மனிதர். தலைமைத்துவம் இல்லாதவர். இலவசமாக பணிசெய்கிறார், வெளிப்படையாக இருக்கவில்லை, கரிசனையுடையவரல்ல. இவையெல்லாம் கொரிந்து நகர மக்கள் வைத்த குற்றச்சாட்டுகளில் சில.

தன்னைப்பற்றிய குற்றச்சாட்டுகளை பவுல் இறைவெளிச்சத்தில் விளக்குகிறார். அவருடைய நோக்கம் பிறருடைய அங்கீகாரத்தைப் பெறவேண்டுமென்பதல்ல. மாறாக, தன்மீதான குற்றச்சாட்டுகளினால் இறைவார்த்தையை மக்கள் புறக்கணிக்கக் கூடாது என்பது தான்.

தன்னிலை விளக்கத்தைக் கொடுத்த பவுல், பத்து முதல் பதின்மூன்று வரையிலான அதிகாரங்களில் தனது தொனியை மாற்றுகிறார். போலித்தலைவர்களுக்கு எதிராக அவருடைய கண்டனம் அழுத்தமாகப் பதிவாகிறது.

இடைப்பட்ட அதிகாரங்களில் பஞ்சத்தால் தவிக்கின்ற மக்களுக்கு உதவ வேண்டுமென பவுல் வேண்டுகோள் விடுக்கிறார். “ஆர்வத்தோடு கொடுத்தால், தம் நிலைக்கேற்றவாறு எவ்வளவு கொடுத்தாலும் அது இறைவனுக்கு ஏற்புடையதாகும். தம்மிடம் இருப்பதற்குக் கூடுதலாக யாரும் கொடுக்க வேண்டியதில்லை” என அவர் தெளிவான வரையறையையும் கொடுக்கிறார்.

இந்த நூலை சுருக்கமாகப் பார்க்கவேண்டு மெனில், கடவுள் தன்னை பல்வேறு இன்னல்களிலிருந்து எப்படி அதிசயமாய்க் காக்கிறார் எனும் நன்றியுடன் கடிதத்தைத் ெதாடங்குகிறார். மன்னிப்பின் தேவையை அடுத்த அதிகாரத்தில் பதிவு செய்கிறார். “நாங்கள் காணாதவற்றை நோக்கியே வாழ்கிறோம். காண்பவை நிலையற்றவை; காணாதவை என்றென்றும் நிலைத்திருப்பவை” என விண்ணக வாழ்க்கையை நோக்கிய பயணத்தை அடுத்து பேசுகிறார்.

“எனவே ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார்” என புதிய மனிதனின் இயல்பைப் பேசுகிறார். தனது பணியின் நேர்மையைப் பற்றி தொடர்கிறார். மனம் திருந்திய மனிதருக்கான மகிழ்ச்சியைப் பதிவு செய்கிறார்.

எப்படிக் கொடுக்க வேண்டும் எனும் அற்புதமான இறை சிந்தனைகளை இரண்டு அதிகாரங்களில் தருகிறார். சாத்தானின் பிரிவினை தந்திரங்களுக்குத் தப்ப வேண்டும் என இரண்டு அதிகாரங்களில் தலைவர்களை எச்சரிக்கிறார். தனக்குக் கிடைத்த வெளிப்பாடுகளைப் பற்றியும், திருச்சபை மீது தனக்கிருக்கும் அக்கறையைப் பற்றியும் எழுதுகிறார்.

கடைசியில் மீண்டும் ஒருமுறை தங்கள் பணியைப் பற்றியும், பிறர் செய்ய வேண்டியதைப் பற்றியும் சொல்கிறார். இறைமகன் இயேசுவின் சிலுவை எப்படி நம்மை இணைக்கும், நமது வாழ்க்கையை சீர்படுத்தும் என்பதை அவர் தனது நூலில் தெளிவாகப் பதிவு செய்கிறார்.

“மகிழ்ச்சியாயிருங்கள்; உங்கள் நடத்தையைச் சீர்ப்படுத்துங்கள்; என் அறிவுரைக்குச் செவி சாயுங்கள்; மன ஒற்றுமை கொண்டிருங்கள்; அமைதியுடன் வாழுங்கள்; அப்போது அன்பும் அமைதியும் அளிக்கும் கடவுள் உங்களோடு இருப்பார்” எனும் நம்பிக்கை வசனத்தோடு பவுல் தனது கடிதத்தை முடிக்கிறார்.

பவுலுடைய மிக முக்கியமான கடிதங்களில் இதுவும் ஒன்று. கொரிந்திய திருச்சபைக்காக பவுல் எழுதிய இந்தக் கடிதம் இன்றைய திருச்சபைக்கும் பல்வேறு படிப்பினைகளைத் தருகிறது.

(தொடரும்)

Next Story