காலத்தால் அழியாத ராவண மருத்துவம்


காலத்தால் அழியாத ராவண மருத்துவம்
x
தினத்தந்தி 7 Jan 2020 1:32 PM IST (Updated: 7 Jan 2020 1:32 PM IST)
t-max-icont-min-icon

“ஆயிரம் வேரைக் கொண்டவன் அரை வைத்தியன்” என்றொரு பழமொழி உண்டு. அதாவது ‘ஆயிரம் வேர்களை கொண்டவனும், அதன் தன்மை, அவற்றால் மனிதர்களுக்கு ஏற்படும் மாற்றங்கள், விளைவுகள், சக்திகளை ஆராய்ந்து அறிந்தவனால் மட்டுமே மருத்துவனாக இருக்க முடியும்’ என்ற நமது முன்னோர்கள் தமிழ் மருத்துவ முறையில் சிறந்து விளங்கினர்.

சித்த மருத்துவத்திற்கு மிகவும் முந்தைய காலத்தில், தமிழர்களின் மருத்துவ முறையாக இருந்தது ‘சிந்தாமணி மருத்துவம்’ தான். இந்த சிந்தாமணி மருத்துவம், ராவணன் உருவாக்கிய மருத்துவ முறையாகும். அவர் ஒரு தலைசிறந்த மருத்துவ ஆராய்ச்சியாளர் ஆவார்.

பெரும் சிவ பக்தரான ராவணன், இலங்கையை சிறப்பாக ஆட்சி செய்த அரசர். இசை, வான சாஸ்திரம், அரசியல், மனோ தத்துவம், மந்திரம், மருத்துவம், ஜோதிடம், விஞ்ஞானம், ஓவியம், இலக்கியம் முதலான பத்து கலைகளில் நிகரற்று விளங்கினார். 27 நூல்களை படைத்துள்ளார். அவற்றுள் மருத்துவ நூல்களும் முக்கியமானவை. மிகச்சிறந்த மருத்துவராகவும் நமக்கு பல மருத்துவ குறிப்பு களையும் அவர் தந்துள்ளார்.

ராவணன் வைத்திய முறையை இரண்டாக பிரித்துப் பார்க்கலாம்.

1. மக்கள் இன்றைக்கும் பயன்படுத்திக்கொண்டிருக்கும் நடைமுறை (பாட்டி) வைத்தியம்.

2. சித்த மருத்துவம்.

தற்போதுள்ள சித்த மருத்துவத்தில் ‘அக மருத்துவம்-32’, ‘புற மருத்துவம்-32’ என்றுதான் கூறப்பட்டுள்ளது. ஆனால் ராவணனின் சிந்தாமணி மருத்துவத்தில் ‘அக மருத்துவம்-50’, ‘புற மருத்துவம்- 608 என கூறப்பட்டுள்ளது. கோமாவில், அதாவது ஆழ்நிலை மயக்கத்தில் இருப்பவர்களை சுயநினைவுக்கு கொண்டுவரும் சிகிச்சை முறையும் அதில் கூறப்பட்டுள்ளது.

விபத்துகளின் போது ஏற்படும் காயங்களுக்கு சித்த மருத்துவ முறையில் சிகிச்சைகள் இல்லை. ஆனால் ராவணனின் மருத்துவதில் அதற்கு தீர்வுகள் உண்டு. முதுகெலும்பு வளைவு, இடுப்பு எலும்பு தேய்மானம், எலும்பு முறிவு, மூளையில் ரத்தக் கசிவு போன்ற நோய்களுக்கும் இவரின் மருத்துவ முறையில் சிகிச்சை உண்டு.

ராவணன் தன் மனைவி மண்டோதரி கருவுற்றிருக்கும் சமயத்தில், ‘பெண்கள் கருவுற்றிருக்கும் போது கருவில் இருக்கும் குழந்தைக்கு ஏற்படும் நோய் தாக்கம், அதற்குண்டான மருத்துவம், குழந்தை பிறந்த பிறகு குறிப்பிட்ட காலம் வரை ஏற்படும் நோய் தாக்கம், அதற்குண்டான மருத்துவம்’ ஆகியவற்றைக் கண்டறிந்து அதனை நூலாக இயற்றியுள்ளார்.

பதினோறாம் நூற்றாண்டில் வடஇந்தியாவில் குழந்தை களுக்கு ஏற்பட்ட பெரும் நோயினால், பல குழந்தைகள் இறந்து போயின. பல மருத்துவ சிகிச்சை செய்தும் பலனில்லாமல் போனது. அதனால், குழந்தை மருத்துவம் தொடர்பான பல மருத்துவ நூல்களை ஆராய்ந்தனர். அப்போது ‘ராவண குமார தந்த்ரா’ என்ற நூலில் கிடைத்த மிகப்பழைய மருத்துவ சிகிச்சையை கையாண்டனர். அம்மருத்துவ முறையில் கூறப்பட்டபடி மருந்துகளை அரைத்துக் கொடுத்தனர். அம்மருந்துகளை உண்ட குழந்தைகளும் முழுமையாக குணமடைந்தனர்.

இம் மருத்துவநூல் குழந்தை களுக்காக, ராவணனால் எழுதப் பட்டதால் அவரது பெயரிலேயே ‘ராவண குமார தந்த்ரா’ என்று அழைத் தனர். இதற்கு “ராவண பிரக்தவல சூத்திரா” என்ற மற்றொரு பெயரும் உண்டு. இந்நிகழ்வினை ‘David Gordon White’ என்பவர், தன்னுடைய ‘The Alchemical Body Siddha Traditions in india’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

ஆண்கள் மற்றும் பெண்களின் உடல் ரீதியான வெளிப்படையான நோய்களும், பிறப்புறுப்பில் ஏற்படும் புண்களும், அதற்குண்டான மருத்துவ முறைகளைக் கூறும் ‘அர்க்க பரிக் ஷா’ என்ற நூல், மனித உடம்பிலுள்ள நரம்புகளை (துடிப்பு பரிசோதனை விவரம்) பற்றிய சிகிச்சை முறைகளை கூறும் ‘நாடி பரிக் ஷா’, ‘நாடி விஜன்னா’ ஆகிய நூல்கள், மூலிகை வேர்களின் சக்திகளையும், அவற்றின் மூலம் குணப்படுத்தும் நோய் சிகிச்சை முறைகளையும் (சிக்கலான நோய்களுக்கான ஒவ்வொரு மூலிகையின் பயன்பாடு மற்றும் அளவு மற்றும் குணப்படுத்துதல்) கூறும் “அர்க்க சாஸ்திரா” என்ற நூல், காயங்களை உடனடியாக குணப்படுத்தக்கூடிய சிந்துரம் மருத்துவம், அத்தியாவசிய எண்ணெய்களின் பல்வேறு சிகிச்சைகள், உட்புற பயன்பாட்டிற்காக நறுமண தாவரங்களில் இருந்து வடிகட்டிகளைப் பிரித்தெடுப்பதற்கான நிலையான இயக்க முறைகள் பற்றிய “அர்க்க பிரகாஷா” என்ற நூல் என பல மருத்துவ நூல்களையும் ராவணன் படைத்துள்ளார்.

அவர் தனது அறிவார்ந்த படைப்பு களின் சிறந்த தொகுப்பான ‘ராவண சம்ஹிதா’ என்ற மருத்துவ நூலை எழுதியுள்ளார். இது ஆயுர்வேத அறிவியலைப் பற்றி பேசுகிறது.

மேலும், மனிதர்கள் தங்களது உடம்பை எப்போதும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஒருசில மருந்துகளை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் ராவணன் தன் மருத்துவ முறையில் கூறியுள்ளார். அவற்றை நேரிடையாக எடுத்துக்கொண்டால் அம்மருந்தின் தன்மையால் அவற்றின் மீது வெறுப்பும், குழந்தைகள் சாப்பிடாமல் இருக்கும் என்பதால் அம்மருந்துகளை உணவில் சேர்த்து உண்ண விழைகிறார். மூன்று பொருட்களையும், அவற்றுடன் ஐந்து வேர்களையும் நாம் உண்ணும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கிறார்.

இதனை “தூணபகா” என்பர். அதாவது “து” என்றால் மூன்று, “பகா” என்றால் ஐந்து. அம்மருந்து பொருள் வேறொன்றுமல்ல தமிழர்களின் உணவுப் பொருட்களில் முக்கிய பங்கு வகிக்கும் குறுமிளகு, இஞ்சி, பூண்டு இம்மூன்றும்தான். ஐந்து வேர்கள் ‘கண்டங்கத்திரி, சிறுநெருஞ்சி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி’ ஆகும். இதனை ‘சிறுபஞ்சமூலம்’ என்பர். இலங்கையில் இன்றும் இந்த உணவுப்பழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும், கொத்தமல்லி, சீரகம், கருஞ்சீரகம், கருவாப்பட்டை (லவங்கப்பட்டை), மிளகு என இந்த ஐந்து பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் ராவணன் கூறுகிறார்.

எடுத்துக்காட்டாக, நம் உணவில் சேர்க்கப்படும் சீரகம். (சீர்+அகம்) அகத்தை சீராக வைப்பதற்கு சீரகம் உணவில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. பொதுவாக அஜீரண கோளாறுகள், செரிமானத் தடை போன்ற பிரச்சினைகளுக்கு சீரகத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கும் பழக்கம் இன்றளவிலும் உள்ளது.

வடமாநிலங்களில் தற்போதும் ‘சீதாஹோலி’ என்ற உணவுப் பண்டத்தை குழந்தைகளுக்கு கொடுப்பது வழக்கம். குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும்போது, சத்து குறைபாட்டை போக்க இந்த சீதாஹோலியை உண்ணக் கொடுப்பர். இதுவும் ராவணன் தயாரித்ததே.

சீதா பிராட்டியை தன்னுடைய புஷ்பக விமானத்தில் தூக்கிச் செல்கையில், சீதை மிகவும் மயக்கமாக சோர்வுடன் காணப்பட்டாள். அதனால் இந்த அரிசியால் செய்யப்பட்ட ஒரு உணவுப்பொருளை உருண்டையாக்கி சீதைக்கு கொடுத்து, “இதை உண்டால் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறும்” என்றார். ஆனால் ராவணன் மீது கோபம் கொண்டிருந்த சீதா பிராட்டியார், அதனை வாங்க மறுத்துவிட்டார். இது முதன்முதலாக சீதைக்கு கொடுக்கப்பட்டதால் இதற்கு ‘சீதாஹோலி’ என்று பெயர் வந்தது.

மேலும், ராவணன் தன் கோட்டையைச் சுற்றி மூலிகை அரணை அமைத்திருப்பாராம். அந்த மூலிகை அரண் சாதாரணமானது அல்ல. மதி மயக்கி மூலிகை அரண். அதாவது தன் கோட்டைக்குள் நுழைய மூலிகை அரணை கடக்கும் போது, எதிரியின் மனம் மயங்கி, புத்தி மாறி, தான் எங்கு, எதற்கு வந்தோம் என்ற சுயநினைவை இழப்பானாம். அந்த அளவிற்கு ராவணன், மூலிகையை கண்டறிந்து கையாண்டுள்ளார்.

பெரியகுளம் பேச்சிமுத்து

Next Story