ஆன்மிகம்

நம்முடன் கடவுள் இருக்கிறார்... + "||" + God is with us ...

நம்முடன் கடவுள் இருக்கிறார்...

நம்முடன் கடவுள் இருக்கிறார்...
‘வலிமைபெறு; துணிவுகொள்; அஞ்சாதே, அவர்கள் முன் நடுங்காதே; ஏனெனில் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குமுன் செல்பவர்.
‘வலிமைபெறு; துணிவுகொள்; அஞ்சாதே, அவர்கள் முன் நடுங்காதே; ஏனெனில் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குமுன் செல்பவர். அவர் உன்னை விட்டு விலக மாட்டார்; உன்னை கைவிடவும் மாட்டார்’. (இணைச்சட்டம் 31:6)

காலையில் வேதத்தை படித்த போது கிடைத்த வசனம் இது. மிகவும் ஆறுதலாக இருந்தது. இவ்வுலகில் நம்முடன் கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கை இருந்தால் போதும், எதையும் எதிர்கொள்ளலாம் என்ற மன உறுதி காலையிலேயே உள்ளத்தில் சூழ்ந்துகொள்கிறது.

ஜெபத்தை முடித்து விட்டு காலையில் பத்திரிக்கையை புரட்ட ஆரம்பித்தேன். அன்றயை தினத்தில் மட்டும் மூன்று தற்கொலைச் செய்திகள் இருந்தன. ஒரு மகன் தந்தை பைக் வாங்கி கொடுக்கவில்லை என்று தற்கொலை செய்து கொண்டான். வேறொருவன் வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் தற்கொலை, இன்னொருவன் படிப்பில் தேர்ச்சி பெறவில்லை என்று தற்கொலை.

கவலை மனதை சூழ்ந்தது, தலைகீழாக புரட்டி போட்டது. மனதுக்குள் பல கேள்விகள். எதற்கு இவர்கள் தற்கொலை செய்தார்கள்.

எப்பொழுதும் மகிழ்ச்சியாக கலகலப்பாக இருக்கும் எனது பால்ய கால நண்பன் அருகில் என்னை கவனித்து கொண்டிருந்தான். ‘என்னடா முகம் சுருங்கி போச்சு’ என்று என்னிடம் கேட்டான்.

பத்திரிக்கையை அவனிடம் நீட்டினேன். அதை படித்துவிட்டு பெருமூச்சு விட்டு, ‘டேய், நானும் இருபது வருடத்துக்கு முன்னாள் தற்கொலைக்கு முயன்றுள்ளேன்’ என்றான். ‘என்னடா சொல்ற?’ என்றேன் நடுக்கத்துடன். தண்ணீரை குடித்துக் கொண்டே, ‘சும்மா விளையாடாதே’ என்றேன். ‘உண்மையிலேயே நான் ஒரு நாள் தற்கொலைக்கு முயன்று தோல்வியுற்றவன்’ என்றான் அவன்.

‘ஒரு கண்டைனர் லாரி நடுவில் குதித்தேன் ஆனால் யாரோ என்னை பின்னிருந்து இழுத்தார். அவர் இயேசு தான் என்று நான் நம்புகிறேன்’ என்றான்.

‘தோல்வியுற்ற தற்கொலை முயற்சி என் வாழ்க்கையின் வெற்றியாக மாறியது. இப்போது நினைத்தால் அன்று எடுத்தது எவ்வளவு முட்டாள்தனமான முடிவு என்று தோன்றுகின்றது. இன்று கடவுள் என்னை பலருக்கு ஆசீர்வாதமாக வைத்திருக்கிறார்’ என்றான்.

“தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார். தாழ்த்தப்பட்ட யாவரையும் தூக்கி விடுகின்றார்”. (சங்கீதம் 145:14).

இவ்வுலகில் வருஷத்துக்கு பத்து லட்சம் பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்று ஒரு ஆய்வு சொல்கிறது. இந்த எண்ணிக்கை, கொலை செய்யப்படுபவர்களை காட்டிலும் இரண்டு மடங்கு அதிகம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?. எப்படி இரவு இருந்தால் பகல் உண்டோ அதைப்போல வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் வருவது இயல்பு.

துயரங்களை எதிர்கொள்ள வேதம் சொல்லும் வசனங்கள் ஏராளம். அதை தினமும் படித்து துணிவு கொள்ள வேண்டும்.

நீங்கள் மருத்துவமனையில் மரண படுக்கையில் இருப்பவர்களை பார்த்திருப்பீர்கள். மறுபடியும் உயிரை மீட்க பல முயற்சி எடுப்பார்கள். பல லட்சம் செலவு செய்வார்கள். அப்படியிருக்கும் போது கடவுள் கொடுத்த உயிரை தானாக எடுக்க முயற்சிப்பது எவ்வளவு முட்டாள்தனம். அதைவிட கடவுளை அவமதிக்கும் செயல் பூமியில் உண்டோ?.

ஒரு முறை உயிர் போனால் திரும்ப வருமா?. உறவினர்கள் எவ்வளவு வருத்தம் அடைவார்கள்?. நீங்கா துயரத்தை அல்லவா பூமியில் தற்கொலை விதைத்து விட்டு செல்லும்.

நாம் யாரை பின்பற்றுகிறோம்?. துயரம் வரும் போது தற்கொலை செய்து கொண்ட யூதாசையா?, அல்லது வாழ்க்கையில் கடைசி வரை போராடி இயேசுவின் ராஜ்யத்தை கட்டின பவுலையா?.

வாழ்க்கையில் சோதனைகள், வேதனைகள், தோல்விகள், வருத்தங்கள், துன்பங்கள் வரும்போது தேவனை தேடுவோம். அவர் சரியான பாதையை நொறுங்குண்டவர்களுக்கு காட்டுவார்.

இயேசுவின் வழிகளில் பயணித்த அன்னை தெரசா இப்படிக் குறிப்பிடுகிறார்:

வாழ்க்கை என்பது சவால்; எதிர்கொள்.
வாழ்க்கை கவலைகளால் ஆனது; கடந்து வா.
வாழ்க்கை தடைகளால் ஆனது; ஒத்துக்கொள்.
வாழ்க்கை ஒரு சோதனை; தைரியம் கொள்.
வாழ்க்கை ஒரு துயரம்; தயங்காதே.
வாழ்க்கை ஒரு சொர்க்கம்; சுவைத்துப்பார்.
வாழ்க்கை என்பது அன்பு; மகிழ்.
வாழ்க்கை விலை உயர்ந்தது; கவனித்துக்கொள்
வாழ்க்கை மிகவும் விலைமதிப்பற்றது; அழித்து விடாதே.

நம் வாழ்வின் நோக்கம் என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம். அது நம் குடும்பம், வேலை, குறிக்கோள், செல்வம், சந்தோசம் என்று நம் சுயநலத்தை மட்டும் சார்ந்தது அல்ல.

நாம் இவ்வுலகில் வாழ்வதற்கு இயேசுவுக்கு ஒரு நோக்கம் உண்டு. அவரால் உருவாக்கப்பட்டு அவருடைய சித்தத்தை நிறைவேற்ற இவ்வுலகில் வாழ்கிறாய் என்ற புரிதல் இருந்தால் வாழ்க்கை மிகவும் பயனுள்ளதாக அமையும்.

கொலோசியரில் இப்படி படிக்கிறோம்: “அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது. நீங்கள் கடவுளிடத்தில் தொடங்கவேண்டும். அவரே உங்களை உருவாக்கினவர். உயிரின் படைப்பாளி அவரே. நம்மை நாம் அழிக்காமல் இயேசுவின் பாதையில் வாழ்வோம்.

துலீப் தாமஸ், சென்னை.