பெண்களைப் போற்றுவோம்...


பெண்களைப் போற்றுவோம்...
x
தினத்தந்தி 10 Jan 2020 9:43 AM GMT (Updated: 2020-01-10T15:13:33+05:30)

இறைவனின் படைப்பில் ஆண், பெண் என பாலின வேறுபாடுகள் இல்லை. அவன் பார்வையில் அனைவரும் சமமே.

றைவனின் படைப்பில் ஆண், பெண் என பாலின வேறுபாடுகள் இல்லை. அவன் பார்வையில் அனைவரும் சமமே. இஸ்லாமும் இவர்களை ஒரே கண் கொண்டு தான் பார்க்கிறது.

‘மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். அவனைக் கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக் கொள்கின்றீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்தக் கலப்பு உறவினர்களிடமும் அன்பாக நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கின்றான்’. (திருக்குர்ஆன் 4:1)

‘மனிதர்களே! உங்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் ஒரே ஆண், ஒரே பெண்ணிலிருந்துதான் படைத்தோம். பின்னர், ஒருவர் மற்றவரை அறிந்துகொள்ளும் பொருட்டு, உங்களைக் கிளை களாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆதலால், உங்களில் ஒருவர் மற்றவரைவிட மேலென்று பெருமை பாராட்டிக் கொள்வதற்கில்லை.) எனினும், உங்களில் எவர் இறையச்சம் உடையவராக இருக்கின்றாரோ, அவர் தான் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிக கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவனும் நன்கு தெரிந்தவனாகவும் இருக்கின்றான்’. (திருக்குர்ஆன் 49:13)

மேற்கண்ட இரு வசனங்களும் மனிதப்படைப்பின் ஆரம்ப நிலையை அழகாக சுட்டிக்காட்டுகின்றன. கூடவே பெண்ணின்றி ஆணும் இல்லை, அகிலமும் இல்லை என்றறிய முடிகிறது. ஆணை விட சற்று தாழ்ந்தவள் பெண் என்று இஸ்லாம் எங்குமே சொல்லவில்லை. இருவரையும் சமப்படுத்தித்தான் திருக்குர்ஆனும், நபிமொழியும் பேசுகின்றன. பின்வரும் திருக்குர்ஆன் வசனத்தை வாசித்துப் பாருங்கள் உண்மைகள் பல உங்களுக்குப் புரியும்:

‘நிச்சயமாக முஸ்லிமாகிய ஆண்களும் பெண்களும், நம்பிக்கையாளரான ஆண்களும் பெண்களும், இறைவனை வழிபடும் ஆண்களும் பெண்களும், உண்மையே கூறும் ஆண்களும் பெண்களும், பொறுமையுள்ள ஆண்களும் பெண்களும், அல்லாஹ்வுக்குப் பயந்து நடக்கும் ஆண்களும் பெண்களும், தானம் செய்யும் ஆண்களும் பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும் பெண்களும், கற்புள்ள ஆண்களும் பெண்களும், அல்லாஹ்வுடைய திருப்பெயரை அதிகமாக நினைவுகூரும் ஆண்களும் பெண்களும் ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயார்படுத்தி வைத்திருக்கின்றான்’. (திருக்குர்ஆன் 33:35)

இவ்வசனம் முழுவதும் ஒன்றுக்குப் பலமுறை ‘பெண்கள்’ என்ற சொல் இடம் பெற்றிருப்பதில் இருந்தே பெண்கள் குறித்த மகத்துவத்தை புரிந்துகொள்ளலாம். பெண்களை பற்றி அல்லாஹ் தனியாக ஒன்றுமே கூறவில்லையே, என்று அன்னை உம்மு சல்மா (ரலி) கூறிய போது தான் இவ்வசனமே இறங்கத் தொடங்கிற்று.

பெண்களை மதிக்காத காலம் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு அரபு நாட்டில் இருந்தது. அந்த நிலையை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிய பெருமை புனித இஸ்லாமிய மார்க்கத்திற்கு உண்டு. நபிகள் நாயகம் தமது இறுதி உயிர்மூச்சை விடும் முன் தமது அன்புத்தோழர்களிடம் “நீங்கள் பெண்கள் விஷயத்தில் மென்மையாக நடந்து கொள்ளுங்கள். அவர்களின் கன்னத்தில் அறையாதீர்கள், அவர்கள் உங்களிடம் அமானிதமாக ஒப்படைக்கப்பட்டவர்கள். எனவே நீங்கள் பெண்கள் விஷயத்தில் கவனமாக இருங்கள்” என்று கூறினர்கள் என்பது அவர்களது வாழ்வியல் காட்டும் வரலாறு.

பெண்களைக் குறித்து நபிகள் நாயகம் கூறிய ஒவ்வொரு சொற்களும் கூர்ந்து கவனிக்கத்தக்கவை. குறிப்பாக பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்துப் பேசும் இறைமறை வசனம் ஒன்றும் மிகவும் கவனிக்கத்தக்கதே.

‘(நபியே!) நம்பிக்கையுள்ள பெண்களுக்கும் நீங்கள் கூறுங்கள்: அவர்களும் தங்கள் பார்வையைக் கீழ் நோக்கியே வைத்துத் தங்கள் கற்பையும் பாதுகாத்துக்கொள்ளவும். தவிர, தங்கள் தேகத்தில் (பெரும்பாலும்) வெளியில் இருக்கக் கூடியவைகளைத் தவிர தங்கள் (ஆடை ஆபரணம் போன்ற) அலங்காரத்தை வெளிக்காட்டாது மறைத்துக்கொள்ளவும். தங்கள் முந்தானைகளால் மார்பையும் மறைத்துக்கொள்ளவும். பெண்கள் தங்களுடைய கணவர்கள், தங்களுடைய தந்தைகள், தங்களுடைய கணவர்களின் தந்தைகள், தங்களுடைய பிள்ளைகள், தங்களுடைய கணவர்களின் பிள்ளைகள், தங்களுடைய சகோதரர்கள், தங்களுடைய சகோதரர்களின் பிள்ளைகள், தங்களுடைய சகோதரிகளின் பிள்ளைகள், அல்லது (முஸ்லிமாகிய) தங்களுடைய இனத்தாரின் பெண்கள், தங்களுடைய அடிமைகள் அல்லது பெண்களின் விருப்பமற்ற தங்களை அண்டி வாழும் ஆண்கள், பெண்களின் மறைவான அவயங்களை அறிந்து கொள்ளாத சிறுவயதையுடைய (ஆண்) குழந்தைகள் ஆகிய இவர்களைத் தவிர மற்றெவர் முன்பும் தங்களின் அலங்காரத்தை அறவே வெளிப்படுத்த வேண்டாம். இன்னும் (தாங்கள் அணிந்திருக்கும் ஆடை ஆபரணங்களை போன்ற) மறைந்திருக்கும் தங்களுடைய அலங்காரத்தை அறிவிக்கும் நோக்கத்துடன் தங்களுடைய கால்களை (பூமியில்) தட்டித்தட்டி நடக்க வேண்டாம். நம்பிக்கையாளர்களே! (இதில் எதிலும் உங்களால் தவறு ஏற்பட்டு விட்டால்) நீங்கள் வெற்றிபெறும் பொருட்டு அல்லாஹ்வின் பக்கமே பாவ மன்னிப்பைக் கோரி (உங்கள் மனதைத்) திருப்புங்கள். (திருக்குர்ஆன் 24:31)

பெண்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்தில்லை. அவர்கள் தங்கள் அழகை, அலங்காரத்தை எப்படி காட்டிக்கொள்ள வேண்டும் என்பதில் தான் பிரச்சினையே எழுகிறது. அவை சரியாக, முறையாக இருந்தால் போதும் நகை பறிப்பு, பலாத்காரம் போன்ற எந்தப் பிரச் சினையும் ஏற்படுவதற்கு வழியில்லை.

எனவே பெண்கள் ரொம்பவும் கவனமாக இருக்க வேண்டிய காலமிது. அவர்களது சுய அழகையும், புற அழகையும் காட்டும் செயலே அவர்களுக்கு பெரும்பாதிப்பாக அமைந்து விடக்கூடும் என்பதில் பெண்கள் என்றைக்கும் வெகு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

தற்கால நடைமுறை வாழ்க்கை குறித்த தௌிவும், புரிந்துணர்வும், சுயக்கட்டுப்பாடும் நம்மிடம் வராதவரை நமது இலக்குகள் வெகு தூரம் தான்.

பெண்களின் பெருமைகளைப் போற்றுவோம், பெண்கள் மீதான கொடுமைகளை தடுப்போம்.

மவுலவி எஸ்.என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3.

Next Story