முன்னேற்றம் வழங்கும் முன்னோர் வழிபாடு


முன்னேற்றம் வழங்கும் முன்னோர் வழிபாடு
x
தினத்தந்தி 23 Jan 2020 10:33 AM GMT (Updated: 23 Jan 2020 10:33 AM GMT)

24-1-2020 அன்று தை அமாவாசை - தை மாதத்தில் வருகின்ற அமாவாசை, ‘தை அமாவாசை’ என்ற சிறப்பைப் பெறுகிறது.

பொதுவாக அமாவாசை தினத்தில் மறைந்த தாய்- தந்தை மற்றும் முன்னோர்களை நினைத்து, அவர்களுக்கு தா்ப்பணம் அளித்து, விரதம் கடைப்பிடிப்பது இந்து சமயத்தவா்களின் நம்பிக்கை. மாதம் தோறும் அமாவாசை திதி வந்தாலும், ஆடி அமாவாசை, தை அமாவாசை ஆகியவை முக்கிய இடத்தைப் பெறுகின்றன. அந்த வகையில் அமாவாசை முன்னோர்களை வழிபாடு செய்வதில் சிறப்புக்குரியதாக இருக்கிறது.

இந்து சமயத்தில் ஒரு வருடத்தை இரண்டு அயனங்களாக பிரித்துள்ளனா். தை முதல் ஆனி வரையிலான மாதத்தை உத்ராயன புண்ணிய காலம் என்றும், ஆடி முதல் மாா்கழி வரையிலானதை தட்சணாயன புண்ணிய காலம் என்றும் கூறுவாா்கள். இரண்டு அயனங்களும் தொடங்கும் காலம் என்பதால்தான், ஆடி அமாவாசையும், தை அமாவாசையும் முன்னோர் வழிபாட்டில் சிறப்பிடத்தை பிடித்துள்ளன.

ஆண்டு முழுவதும் அமாவாசை திதிகளில் பித்ருக்கள் எனப்படும் மூதாதையர்களுக்கு நாம் தர்ப்பணம் அளித்து, விரதம் கடைப்பிடிக்க வேண்டும். அப்படி செய்யத் தவறியவர்கள், தை அமாவாசை அன்று மட்டுமாவது இந்த விரதத்தை கடைப்பிடித்தால், ஆண்டு முழுவதும் அமாவாசை திதியை கடைப்பிடித்த பலன் கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. அன்றைய தினம் ஆறு, கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீராடி, முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை படையல் வைத்து, தர்ப்பணம் செய்து விரதம் கடைப்பிடிக்க வேண்டும்.

மறைந்த நம் முன்னோர்களுக்குச் சிரத்தையுடன் செய்யும் காரியம் என்பதால் இது ‘சிரார்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. சாதத்தைப் பிடித்து ஆறு பிண்டங்கள் வைத்து, எள், தண்ணீா், தர்ப்பை கொண்டு அவர்களை ஆராதிக்க வேண்டும். தந்தை, தாத்தா, முப்பாட்டன்கள், தாய், பாட்டி, கொள்ளுப் பாட்டி ஆகியோருக்கு நாம் ஒவ்வொருவரும் செய்யவேண்டிய, மிக முக்கிய கடமையாக இது இருக்கிறது. இந்த ஆறு பிண்டங்களையும் ஒன்றாக இணைத்து காகத்துக்கு வைக்கும்போது, அது உண்ணுவதன் மூலம் நம் முன்னோர்களுக்கு அந்த ஆகாரம் செல்வதாக ஐதீகம்.

ஆடி அமாவாசை அன்று பூலோகத்திற்கு வரும் முன்னோா்கள், தை அமாவாசை நாளில் மீண்டும் பிதுா்லோகம் செல்வதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவும் தை அமாவாசை முக்கியத்துவம் பெறுகிறது. எனவே அன்றைய தினம் புனித நீராடி, முன்னோா்களுக்கு எள்ளும், நீரும் அளித்தால் எண்ணற்ற பலன்களும், தலைமுறை கடந்து புண்ணியமும் வந்துசேரும்.

பூமியில் பிறந்தவர்கள் பாவ புண்ணியத்தில் இருந்து தப்பமுடியாது. பாவங்களிலேயே பெரிய பாவமாக, பித்ரு தோஷம் சொல்லப்படுகிறது. இந்த தோஷம், நாம் நம் முன்னோர்களுக்கு உரிய கடமைகளை முறையாகச் செய்யாமல் இருப்பதால் வருகிறது. உயிருடன் இருக்கும் பெரியவர்களை மதிக்காமல் பலர் உள்ளனர். அந்த உயிர்கள் படும் துன்பங்கள் அனைத்தும், நமக்கு பாவத்தின் உருவத்தில் வந்து சேர்கின்றன. நாம் எங்கு சென்றாலும் உடன் வருவது பாவ- புண்ணியங்கள் மட்டுமே. பித்ரு பாவங்களுக்கு பிராயச்சித்தம் செய்ய ஏற்படுத்தப்பட்டதுதான், முன்னோா் வழிபாடு. அதை நாம் தவறாமல் செய்து வந்தால், முன்னோா்களின் அன்பைப் பெற்று, அவர்களின் ஆசியைப் பெறலாம்.

அமாவாசை நாளில் காகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். தர்ப்பணம் செய்த பிறகு காகத்திற்கு சாதம் வைத்தால், எமலோகத்தில் வாழும் நம் முன்னோர் அமைதி அடைந்து நமக்கு ஆசியளிப்பர் என்பதும் ஒரு ஐதீகம். கிட்டத்தட்ட, நம் மூன்று தலைமுறையில் உள்ள முன்னோருக்குச் செய்கிற ஆராதனை, நம்மையும் நம் சந்ததியையும் இனிதே வாழவைக்கும் என்கிறது கருடபுராணம்.

அமாவாசை நன்னாளில் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, நம் வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெற, அவா்களின் ஆசியைப் பெறுவோம்.

- பொ.பாலாஜி கணேஷ்

தர்ப்பணம் அளிப்பது முக்கியம்                                       

சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணைந்திருக்கும் நாளான அமாவாசை அன்று, பித்ருக் களுக்கு பசியும் தாகமும் அதிகமாக ஏற்படும் என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன.

அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும், அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு, தங்களுக்குத் தரப்படும் எள் கலந்த தண்ணீரை பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருப்பதாக கூறுகிறார்கள். அவ்வாறு எள் கலந்த தண்ணீா் தரப்படவில்லை என்றால், அவர்கள் ஏமாற்றமடைந்து வருத்தப்பட்டு கோபத்தோடு செல்வாா்கள் என்றும், ஒரு சில பித்ருக்கள் சாபம் கூட தந்து விட்டுச் செல்வாா்கள் என்றும் நம்பப்படுகிறது.

ஒருவன் தனது தாய் தந்தைக்கு சிரார்த்தம் செய்யாமல் எனக்குச் செய்யும் பூஜைகளை நான் ஏற்றுக் கொள்வதில்லை என்று விஷ்ணுவும் சிவனும் கூறியிருப்பதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

நமது முன்னோர்களிடம் சிரார்த்தத்தை சிரத்தையுடன் செய்வதாகவும், நல்ல உயர்ந்த ஆடை, தீர்த்த பாத்திரம் சிரார்த்தத்தில் வாங்கித் தருவதாகவும், பிரார்த்தனை செய்து கொண்டு அவ்வாறே செய்தால், நிச்சயம் உங்கள் விருப்பம் நிறைவேறும். விரும்பிய பலன் கைகூடும்.

ஒரே நாளில் ஏராளமான பித்ருக்களுக்கு தனித்தனியாக பல பேர் சிராத்தம் செய்யும்போது சிரார்த்த உணவு அவரவர்களின் பித்ருக்களுக்கு எவ்வாறு சரியான முறையில் சென்றடைகிறது என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படும். இதை கருத்தில் கொண்டுதான் மறைந்த முன்னோர்களின் கோத்ரத்தையும், பெயரையும் தர்ப்பணம் செய்யும்போது சொல்கிறார்கள். இதனால் ஒருவர் கொடுக்கும் தர்ப்பணம் அவரவர்களுக்கு சரியாக சென்றடையும்.

தர்ப்பணம் செய்யும் நாளன்று, அதை செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை செய்யக்கூடாது. தர்ப்பணம் செய்து முடிந்த பிறகே, தினமும் செய்ய வேண்டிய தெய்வ சம்பந்தமான பூஜைகளைச் செய்யவேண்டும்.

பித்ரு வர்க்கம், மாத்ரு வர்க்கம், பித்ரு காருணீக வர்க்கம் என்று பித்ருக்களை மூன்று வகைப்படுத்தலாம். அப்பா வகையைச் சார்ந்த பித்ருக்கள் ‘பித்ருவர்க்கம்’ எனப்படுவார்கள். அம்மா வகையைச் சார்ந்த பித்ருக்கள் ‘மாத்ருவர்க்கம்’ எனப்படுவார்கள். சித்தப்பா, மாமா, குரு, நண்பர்கள் ‘காருணீகவர்க்கம்’ எனப்படுவார்கள்.

தர்ப்பணத்தில் பயன்படுத்தும் தர்பணப்புல் கேது கிரகத்துக்கு உரியதாகும். தர்ப்பைக்கு நாம் எந்த அளவுக்கு மரியாதை கொடுக்கிறோமோ, அந்த அளவுக்கு அது கேதுபகவான் மூலம் பலன்களை பெற்றுத்தரும். குறிப்பாக பெரியவர்களின் தொடர்பு கிடைக்கும்.

Next Story