ஆன்மிகம்

ராகு பகவான் பெருமைகள் + "||" + Glories of Lord Rahu

ராகு பகவான் பெருமைகள்

ராகு பகவான் பெருமைகள்
நவக்கிரகங்களில் சனியை விட செவ்வாய் பலம் பொருந்தியவர். அதேபோல் செவ்வாயை விட புதனும், புதனை விட குருவும், குருவை விட சுக்ரனும், சுக்ரனை விட சந்திரனும், சந்திரனை விட சூரியனும் பலம் மிக்கவர்கள். ஆனால் இவர்கள் அனைவரையும் விட ராகுவும், கேதுவும் பலம் வாய்ந்தவர்கள். இதனை ‘நை சர்க்க பலம்' என்பார்கள்.
ராகுவுக்கு எந்த ராசியும் சொந்தமில்லை. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திற்கு கிழக்கே 6 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது ராகு தலமான திருநாகேஸ்வரம். இங்கு ராகு கால பால் அபிஷேகம் மிகவும் விசேஷம்.

மகப்பேறு அருளும் ஆலயம்

நாகப்பட்டினம் மாவட்டம் திருவாலங்காட்டில் ‘வடாரண்யம்’ என்று அழைக்கப்படும் வடாரண்யேஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்குள்ள புத்திரகாமேஸ்வரர் தீர்த்தத்தில் பங்குனி மாத அமாவாசையில் நீராடி, வடக்கு பிரகாரத்தில் உள்ள புத்திரகாமேஸ்வரரையும், ஆலம்காட்டீஸ்வரரையும் வழிபட்டால் ‘மலடியும் மகப்பேறு அடைவாள்’ என்பது ஐதீகம். இத்தல வண்டார்குழலி அருட்பார்வையாலும் மகப்பேறு உண்டாக மனதார அம்பாளை பிரார்த்தித்துக் கொள்ளலாம்.

ஆதிசங்கரர் அருளிய ஸ்ரீசக்கரம்

கஜாரண்யம், ஜம்புகேஸ்வரம், ஜம்புவீச்சரம், வெண் நாவல் வனம், சம்பு வனம், ஞான ஷேத்திரம், ஞானத்தலம், ஞான பூமி, அமுதேஸ்வரம் என பலவிதமாக அழைக்கப்படும் திருத்தலம், திருவானைக்கோவில். இது திருச்சி மாநகரில் அமைந்துள்ளது. பஞ்சபூத தலங்களில் இது நீர் தலமாகும். ஆதிசங்கரர் அருளிய இரண்டு ஸ்ரீசக்கரங்கள், இத்தல அகிலாண்டேஸ்வரி அன்னையின் இரு கால்களில் ஒளிர்வதை வேறு எந்த தலத்திலும் காண முடியாது.

தொகுப்பு: எஸ்.பி.பாலு, மயிலாடுதுறை.