தீராத நோய் தீர்க்கும் ஏரல் சேர்மன் சுவாமி


தீராத நோய் தீர்க்கும் ஏரல் சேர்மன் சுவாமி
x
தினத்தந்தி 23 Jan 2020 11:39 AM GMT (Updated: 23 Jan 2020 11:39 AM GMT)

24-1-2020 அன்று தை அமாவாசை - திருச்செந்தூர் அருகே உள்ள மேலப்புதுக்குடியைச் சேர்ந்தவர் குமாரசாமி. இவர், தெய்வீக முனிவர் ஒருவர் கொடுத்த ஏடுகளைப் பார்த்து, பாம்பு, பூரான் போன்ற கொடிய விஷ ஜந்துகளின் விஷத்தை இறக்கக்கூடிய வைத்தியம் செய்துவந்தார்.

குமாரசாமியின் வழித்தோன்றல் ராமசாமி. இவர் உமரிக்கட்டைச் சேர்ந்த சிவனைந்தம்மாளை மணமுடித்தார். இவர்களுக்கு குழந்தை இல்லை. ஒரு நாள் இந்த தம்பதியர், அருஞ்சுனை காத்த அய்யனாரை வணங்கி விட்டு, சுனையில் குளித்தபோது துறவி ஒருவரை சந்தித்தனர். அவர், “நீங்கள் இருவரும் செட்டியாபத்து சென்று, அங்குள்ள ஐந்து வீட்டு சாமியைத் தரிசனம் செய். உனக்கு ஆண் குழந்தை பிறக்கும். அவனுக்கு அருணாசலம் என பெயரிடுங்கள். அவன் தெய்வ நிலை கொண்ட குழந்தையாக வளருவான்” என்று கூறினார்.

அதன்படி அந்த தம்பதியர் செட்டியாபத்து சென்று வழிபட்டனர். இதையடுத்து விக்கிரம ஆண்டு புரட்டாசி மாதம் 18-ம் நாள் உத்திர நட்சத்திரத்தில், அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தைப் பிறந்தது. அதற்கு அருணாசலம் என்று பெயரிட்டனர். சிறுவயதில் அருணாசலம், மூலக்கரையில் ஓலைச்சுவடியில் ‘அரிஓம் நம’ என்று எழுதி தமிழ் மொழியைக் கற்றார். ஆரம்ப பள்ளியை முடித்தவுடன், ஏரலில் வாழ்ந்த சித்தப்பா சிவசுப்பிரமணியம் அரவணைப்பில், பண்ணைவிளையில் உள்ள நடுநிலைப்பள்ளியில் ஆங்கிலம் மற்றும் தமிழை கற்று முடித்தார். இவர்களுக்கு ஏரல், சிறுத் தொண்டநல்லூர், பழையகாயல் கிராமங்களில் பெருஞ்சொத்து இருந்தது.

கல்வியோடு, தனது வழி முன்னோர்களின் விஷக்கடி மருத்துவத்தையும் கற்று தேர்ந்தார். இவரது ஆறிவாற்றலையும் ஆங்கிலப் புலமையையும் கண்ட ஆங்கில அரசு, சிறுதொண்டநல்லூர் கிராமத்துக்கு முன்சீப்பாக இவரை நியமித்தார்கள். அப்போது ஒரு முறை ‘பொய் சாட்சி சொல்ல வேண்டும்’ என்று மேல் அதிகாரி ஒருவர் கூறியதால், அந்தப் பதவியை உதறித் தள்ளினார்.

இதற்கிடையில் அருணாசலத்திற்கு திருமணம் செய்ய உறவினர்கள் ஏற்பாடு செய்தனர். அப்போது, “இது சுட்டமண்.. இதில் எதுவும் ஓட்டாது” என்று கூறிவிட்டார். ஆனாலும் வீட்டில் உள்ள பெரியவர்கள், அவரிடம் அன்பு என்னும் அணையைப் போட்டு திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளும்படி சொன்னார்கள். இதையடுத்து யாருக்கும் பாதகம் இல்லாத வகையில் “28 வயது ஆகட்டும்” என்று கூறிவிட்டார்.

அப்பழுக்கற்ற மனிதராய், பிரம்மச்சாரியாக வாழ்ந்த அருணாசலத்தை, அப்போதைய மாவட்ட ஆட்சித் தலைவர் பிஷப்வெஸ்டன், ஏரல் பஞ்சாயத்துக்கு சேர்மனாக நியமித்தார். ஏரல் சேர்மனான அவர், ஏரலில் பள்ளிக்கூடங்களைத் தொடங்கினார். தெருவிளக்குகளை அமைத்தார். விளக்குகள் இரவு நேரங்களில் அணைந்து விடாமல் இருக்க, பணியாளர்களை நியமனம் செய்தார். ஊருக்குள் கழிவு நீர் தங்காமல் இருக்க, வடிகால் வசதி செய்து கொடுத்தார். ஊராட்சி எல்லைக்குள் மரக்கன்றுகள் நட்டார்.

ஒரு நாள் அவரது கனவில் சிவபெருமான் தோன்றினார். “நீ இன்னும் 8 நாட்களில் என்னோடு வந்து சேர்” என்று கூறிவிட்டு மறைந்தார். மறுநாள் எழுந்தவுடன் தனது தம்பி கருத்தபாண்டியை அழைத்த அருணாசலம், “தம்பி.. காலம் கனிந்துவிட்டது. நான் இறைவனிடம் கலக்கும் நாள் வந்துவிட்டது. நான் வருகிற அமாவாசை அன்று ஆடி மாதம் 13-ம் நாள் செவ்வாய்க்கிழமை அன்று உச்சிப் பொழுதில், இறைவனோடு என்னை இணைத்துக்கொள்வேன். என்னுடைய உடல் மறைந்தாலும் நான் எப்போதும் உங்களுடன்தான் இருப்பேன். என்னை நம்பி வரும் பக்தர்களுக்கு, வேண்டிய வரம் அளிப்பேன். அவர்களை காலம் காலமாக காத்துவருவேன்” என்றார்.

அதைக் கேட்ட அவரது தம்பி கலங்கிப்போனார். குறிப்பிட்ட காலத்தில் அருணாசலம், பஞ்சாயத்துக்குச் சென்றார். அங்குள்ள கோப்புகள் அனைத்திலும், முறையாக கையொப்பம் வைத்தார். நகரத்தினை சுத்தம் செய்யும் தொழிலாளர்களின் நலனைக் காக்கும் வண்ணம், அரசு ஆணையில் கையெழுத்து இட்டார். அதன்பின் அமாவாசை நாளுக்காகக் காத்திருந்தார்.

அந்த நாளும் வந்தது. “இதோ வருகிறேன்” என்று கூறி தனது அறைக்குள் சென்றார். தனது கட்டிலில் ராஜ மிடுக்கோடு படுத்தார். கண்களை மூடினார். தியானத்தில் ஆழ்ந்தார். உச்சிப் பொழுது வந்தது. உறங்கிய நிலையிலேயே இறைவன் திருவடிப்பேற்றை அடைந்தார். அப்போது அவருக்கு வயது 28 ஆகும் (2.10.1880 - 27.7.1908). இந்தச் செய்தி காட்டுத் தீ போல பரவியது. ஏரல் மக்கள் மட்டுமல்ல சுற்று வட்டாரக் கிராம மக்களும் கலங்கிய கண்களோடு கூடினர்.

அருணாசலம் கூறியபடி தென்மேற்கில் உள்ள தாமிரபரணி நதிக்கரையில், படர்ந்த ஆலமரத்தின் அடியில் சுவாமிகளை அமர்ந்த கோலத்தில் வைத்து அடக்கம் செய்தனர். உரிய சடங்குகள் நடத்தப்பட்டது. கருடன் சங்கொலியுடன் சுவாமியை வலம் வந்தது. கருடன் நிழல் அவரது உடலில் பட்டது. அவர் படித்த நூல்கள், பயன்படுத்திய விலை மதிப்பு மிக்க பொருட்கள், உயர்ந்த அணிகலன்கள் ஆகியவற்றை அவரது காலடியில் வைத்து உடலை மலர்களாலும், மண்ணாலும் மூடினார்கள். அன்றுமுதல் அவர், பக்தர்களுக்கு அருள்புரியும் ஆனந்தநிலை ஆரம்பமானது.

அருணாசல சுவாமிகள் பல அற்புதங்கள் புரிய ஆரம்பித்தார். அவர் தெய்வ நிலையடைந்த சில நாளில், அவர் உடல் வைக்கப்பட்ட இடத்தில் புதைக்கப்பட்ட விலை உயர்ந்த பொருட்களை திருட சிலர் வந்தனர். அப்போது பாம்புகள் கூட்டம் படமெடுத்து, படையெடுத்து வந்து, அவர்களை விரட்டியது. அஞ்சி நடுங்கிய திருடர்கள் ஆளுக்கொரு பக்கமாக ஓடினர். இந்தக் காட்சி ஊர் மக்களின் கனவில் தெரிந்தது. அவர்கள் அனைவரும் அருணாசல சுவாமிகளின் ஜீவசமாதிக்கு வந்து பார்த்தனா். அங்கு மண் தோண்டப்பட்டு இருப்பதையும், அதன் அருகே கடப்பாறை மற்றும் மண்வெட்டி இருப்பதையும் கண்டனர். உடனே இனி தெய்வ நிலை பெற்ற அவருக்கு கோவில் கட்ட வேண்டும் என்று அனைவரும் நினைத்தனா். அருணாசல சுவாமிகளின் தந்தை ராமசாமி அதற்கான பணியை மேற்கொண்டார். சிறிய அளவிலான கோவில் கட்டப்பட்டது. அருணாசல சுவாமிகள், சேர்மனாக இருந்த காரணத்தால் அனைவரும் அவரை ‘சேர்மன் சுவாமி’ என்று அழைத்தனர்.

சுவாமி சேர்மன் கோவிலைப் பற்றி ஆங்கிலேய கலெக்டர் பேட்துரை என்பவர், 1916-ம் ஆண்டு எழுதிய அரசு குறிப்பேட்டில், ‘இந்த கோவில் முன்பு அனைத்து சாதி, மதத்தினரும் கூடுகிறார்கள். நோயை குணமாக்கி செல்கிறார்கள். பில்லி - சூனியம் தீருகிறது. இங்குள்ள புற்று மண்ணை கையால் எடுத்து மருந்தாக உட்கொள்கின்றனர். உடம்பில் பூசி நோய் குணமடைகிறார்கள்’ என எழுதி வைத்துள்ளார்.

சேர்மன் சுவாமியின் சமாதி வைத்த இடத்தில், அவரின் தந்தை தனது கைகளால் சிறிது மண்ணை எடுத்து லிங்கம் போல் பிடித்து வைத்துள்ளார். அந்த லிங்கம் தான் இன்று இரண்டு அடிக்கு மேல் வளர்ந்து உள்ளது. தாமிரபரணி ஆற்றில் இருந்து நீர் எடுத்து லிங்கத்தினை அபிஷேகம் செய்தும், அந்த லிங்கம் கரையாமல் உள்ளது. அந்த லிங்க அபிஷேக தீர்த்தத்தினால் பல நோய்கள் தீருகிறது. மருத்துவர்களால் கைவிடப்பட்ட வலிப்பு நோய், மனநோய், அரிப்பு, கட்டி உள்ளிட்ட பல நோய்களுக்கு இங்கே தீர்வு கிடைக்கிறது. நோய் பாதிப்பு உள்ளவா்கள், தாமிரபரணியில் காலையிலும், மாலையிலும் நீராடி, லிங்க அபிஷேகத் தீர்த்தத்தில் நிலக்காப்பை கரைத்து உடம்பில் பூசியும், குடித்தும் விரதங்கள் மேற்கொண்டு வந்தால், 21 நாட்களில் நோய் தீர்ந்து விடுகிறது. குழந்தை இல்லாதவர்கள் தீர்த்தம், நிலக்காப்பு ஆகிய இரண்டையும் பூசியும், குடித்தும் விரதங்கள் இருந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கிறது.

இந்த லிங்கத்திற்கு பக்தர்கள், கவசம் செய்து கொடுத்தனர். ஆனால் வளர்ந்த லிங்கத்தில் அந்தக் கவசத்தினை மூடமுடியவில்லை. ஆகவே கவசம் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறது. சுவாமிகள் ஜீவ சமாதி அடைந்து 112 வருடங்களை தாண்டி விட்டது. இங்கு நாள் தோறும் திருவிழாதான். ஒவ்வொரு அமாவாசையிலும், பவுர்ணமியிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். அருணாசல சுவாமியின் கோலம், நின்ற ராஜ கோலமாகும். இங்கு நான்கு கால பூஜை நடக்கிறது. காலை, மதியம். மாலை, இரவு நேரங்களில், காலம் தவறாமல் பூஜைகள் நடக்கிறது.

பூஜை நேரங்களில் தாமிரபரணி தீர்த்தம் எடுத்து வரப்பட்டு விநாயகர், மூலவர், லிங்கம் ஆகியவற்றின் திருமேனிகளுக்கு அபிஷேகம் செய்கின்றனர். சேர்மன் சுவாமிக்கு கரையில்லாத வேட்டி, தலைப்பாகை, துண்டு, மலர் மாலைகள் சூட்டப்படும். அதன்பின் சுவாமிக்கு உப்பில்லாத பச்சரிசி சோறு நைவேத்தியமாகப் படைக்கப்படும். பூஜை நேரங்களில் சுவாமிக்கு 16 வகையான தீபாராதனைகள் காட்டப்படும்.

இந்த ஆலயத்தில் சித்திரைத் திருவிழா, ஆடி அமாவாசை திருவிழா, தை அமாவாசை திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறும். தை அமாவாசை திருநாளில் லட்ச கணக்கான பக்தர்கள் இங்கு கூடுவார்கள்.

அமைவிடம்

திருநெல்வேலி - திருச்செந்தூர் சாலையில் தென்திருப்பேரையில் இருந்து இடதுபுறம் திரும்பிச் சென்று, ஏரல் தாமிரபரணிக் கரையில் சேர்மன் அருணாசல சுவாமிகள் ஆலயத்தை அடையலாம். குரும்பூரில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் ஏரல் உள்ளது. திருச்செந்தூர், திருநெல்வேலி, தூத்துக்குடியில் இருந்து பேருந்து வசதி உண்டு.

மந்திரவாதிகளை விரட்டிய பெரும்படை

ஆடு மாடு மேய்க்கும் சிறுவர்கள் மீது, அருணாசல சுவாமிக்கு அலாதி பிரியம் உண்டு. அவர் சமாதி நிலை அடைந்தாலும் அந்தப் பிரியம் விட்டுப் போகவில்லை. ஆகவே அந்த சிறுவர்களுக்குக் காட்சி கொடுத்தார். சேர்மன் சுவாமிகளின் புகழ், தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் பரவியது. கேரள மக்கள் அதிகமாக வரத் தொடங்கினர். கேரள மந்திரவாதிகள் சிலர் சேர்மன் சக்தியை தங்கள் வசப்படுத்தி கொள்ள விரும்பினர். ஆனால் சித்துக்கள் தெரிந்த கொடியவர்கள் மீது சோ்மன் சுவாமி தனது சித்துக்களை காட்டத் தொடங்கினார். தனது வெள்ளிப் பிரம்பை, அவர்களை நோக்கி வீசி எச்சரித்தார். அதனால் அவர்கள் சுவாமியை கட்டிபோட பூஜையை தொடங்கினர்.

அப்போது ஒரு பெரும் போர்ப்படை அங்கு வருவது போல மந்திரவாதிகளின் கண்களுக்கு தெரிந்தது. அந்த பெரும் படையை பார்த்த மந்திரவாதிகள், உயிர் பிழைத்தால் போதும் என்று ஓடினர். பின் அவர்கள் தங்கள் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டனர்.

- முத்தாலங்குறிச்சி காமராசு

Next Story