மாயம்மா


மாயம்மா
x
தினத்தந்தி 23 Jan 2020 1:48 PM GMT (Updated: 23 Jan 2020 1:48 PM GMT)

நீலச் சேலை கட்டிக் கொண்ட சமுத்திரப் பெண் அலையாடும் இடம், கன்னியாகுமரி. முக்கடல் சங்கமம் காணும் குமரி முனை. அந்தக் கடற்கரையில் ஒரு இடத்தில் கையில் உணவுப் பொட்டலங்களுடன் பலர் நிற்கிறார்கள். அவர்கள் நிற்கும் இடத்தில் ஒரு அம்மா உட்கார்ந்து இருக்கிறார்.

காற்றில் பறக்கும் வாரப்படாத கேசம், கந்தலை விட மோசமான ஆடை, முகத்திலும் உடம்பிலும் வயது தந்த வினோதமான சுருக்கங்கள். சுற்றிலும் பெரிதும் சிறிதுமான நாய்கள். பிச்சியை விட மோசமான தோற்றம்.

அந்த காட்சியை புதியதாக பார்க்கும் யாராக இருந்தாலும், ‘இவரிடம் எதற்காக இவ்வளவு மனிதர்கள் உணவுப் பொட்டலத்தை வைத்துக் கொண்டு, ‘வாங்க மாட்டாரா?’ என்ற ஏக்கம் கண்ணில் பரவ நிற்கிறார்கள்?” என்று எண்ணம் தோன்றவே செய்யும்.

1920-களில் இந்தியாவின் வட பகுதியில் இருந்து வந்தவராக அறியப்பட்டாலும், 1950-களில்தான் அந்த அம்மையார், கன்னியாகுமரி மக்களின் கண்களில் தென்பட ஆரம்பித்தார்.

கன்னியாகுமரி கடலின் பாறைகளில் படுத்துக் கொண்டும், அபாயகரமான ஆழமான பகுதிகளில் நீந்திக் கொண்டும், சில சமயங்களில் தண்ணீரை எடுத்து தலைமேல் ஊற்றி அபிஷேகம் செய்தபடியும் காணப்படும் அவரை, அந்தப் பகுதி மீனவப் பெண்கள் ‘மனநிலை சரியில்லாதவர்’ என்றுதான் நினைத்து பரிதாபப்பட்டனர்.

ஆனால் அந்த அம்மையார், மீனவப் பெண்களுக்கு சின்னச் சின்ன உதவிகள் செய்து கொடுப்பார். பதிலுக்கு உணவையோ, காசையோ கொடுத்தால் வாங்க மாட்டார். வற்புறுத்திக் கொடுத்தால் உணவை மட்டும் வாங்கி, அதையும் தன்னைச் சுற்றி வரும் நாய்களுக்குப் போட்டு விடுவார்.

நாட்கணக்கில் உணவு உட்கொள்ளாமலேயே பாறை மீது உட்கார்ந்து இருப்பார். சில சமயங்களில் கடலின் முற்பரப்பில் அலைகளில் குளித்துக் கொண்டிருப்பவர், சில நொடிகளில் விவேகானந்தர் பாறை மீது தென்படுவார்.

இப்படி மாயமாக மறைந்தும், வெளித் தெரிந்தும் மாயங்களை செய்து கொண்டிருந்ததால், அந்தப் பகுதி மக்கள் அவரை “மாயம்மா” என்று அழைத்தனர்.

மாயம்மாவின் செயல்கள் வினோதமானவை. பெரும்பாலான சித்தர்களின் செயல்பாடுகள் அப்படித்தான் இருக்கும். என்றாலும் மாயம்மா, கடலில் மிதந்து வரும் பொருட்கள், சங்குகள் ஆகியவற்றை இரவில் கடற்கரையில் எரித்துக் கொண்டிருப்பார். அதை தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு, யாகம் செய்வது போலவே இருக்கும்.

கடற்பாறைகளே அவரது இருப்பிடம். கடும் வெயிலாக இருந்தாலும், அந்த பாறைகளின் மேல்தான் துயில் கொள்வார். அதிகாலையில் ஆக்ரோஷமாய் அலைவீசும் பகுதியில் நீராடுபவர், அந்தி சாயும் வேளையில் அமைதியான கடல் பரப்பில் குளித்துக் கொண்டிருப்பார். ‘நீந்திப் போவாரா.. நடந்து போவாரா..?’ என்பதை யாரும் பார்த்ததில்லை.

முதலில் கடற்கரை நண்டுகளை தீயில் வாட்டி உணவாக்கிக் கொண்டவர், காலப்போக்கில் எதையும் உட்கொள்ளாமலேயே வாழத் தொடங்கினார்.

கன்னியாகுமரியை ஆளும் பகவதி அம்மன், மாயம்மாவின் சக்தியை உலகுக்கு உணர்த்த எண்ணினாள். அவள் அவ்வாறு நினைத்தபின், அதை தடுக்க எவரால் முடியும்?

அன்றைய தினம் ஒரு சுற்றுலாப் பேருந்து கன்னியாகுமரிக்குள் நுழைந்தது. சற்று நேரத்தில் ‘கிரீச்..’ என்ற சத்தமும், ஒரு நாயின் தீனமான அலறலும் கேட்டன.

அங்கிருந்தவர்கள் குறிப்பிட்ட இடத்தைச் சுற்றிக் கொண்டனர். அங்கே ஒரு நாய் அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்து பலரும் பலவிதமாக உச்சுக்கொட்டினர்.

“பாவம், வாயில்லா ஜீவன். எப்படி அடிச்சுப் போட்டுட்டான் பாரு..”

“இங்கேயேதான் சுத்திகிட்டு கிடக்கும். எப்படியோ போயி வண்டிக்கு அடியில சிக்கிருச்சி..”

இப்படி ஆளாளுக்கு பேசிக்கொண்டார்களே தவிர, யாரும் உயிர் வதையில் இருக்கும் அந்த நாயைக் காப்பாற்ற எண்ணம் கொள்ளவில்லை.

அந்த நேரத்தில் கூட்டத்தை விலக்கிக்கொண்டு ஓடிவந்தார், மாயம்மா. வந்தவர்.. யாரும் பக்கத்தில் போகவே அருவருப்பான நிலையில் கிடந்த நாயை தூக்கி, மடியில் கிடத்திக் கொண்டார்.

அதன் குடல் வெளியே வந்து சரிந்து கிடந்தது. அதை நாயின் வயிற்றுக்குள் தள்ளி, தன் கையில் வைத்திருந்த வைக்கோலால் மூடி, தன் உடலில் இருந்த கந்தல் துணியில் இருந்து கொஞ்சம் கிழித்து கட்டுப் போட்டார். பின் கட்டுப்போட்ட இடத்தை தடவிக்கொடுத்தார்.

சில நொடிகளில் அங்கிருந்த யாருமே நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஆச்சரியம் நிகழ்ந்தது. ஆம்.. அந்த நாய், கண் திறந்து துள்ளிக்குதித்து ஓடியது.

அன்றில் இருந்து மாயம்மாவின் சக்தி, அந்தப் பகுதி மக்களிடையே பரவத் தொடங்கியது. அவர் உயிர் பிழைக்க வைத்த நாய், அவருடனேயே இருக்கத் தொடங்கியது. இன்னும் சில நாய்களும் அன்னையின் திருப்பாதத்தில் சேர்ந்து கொண்டன.

மாயம்மா நடக்கும் போது, அவரோடு நாய் பரிவாரங்களும் போகும். அவைகளுக்கு கந்தல் துணிகளைக் கொண்டு தலையணை செய்து கொடுப்பார். எல்லா நாய்களும் அதில்தான் படுத்து உறங்கும். குளிர் காலங்களில், தனக்கு மக்கள் கொடுக்கும் போர்வையை நாய்களுக்கு போர்த்தி விட்டு விடுவார்.

பசிக்கும் போது ஏதாவது ஒரு உணவு கடைக்குள் நுழைவார். கைக்குக் கிடைக்கும் உணவு எதுவாயினும் தானும் சாப்பிட்டு நாய்களுக்கும் போடுவார். அன்று முதல் அந்த உணவகத்தில் அதிக லாபம் கிடைக்கத் தொடங்கின. இதனால் தன்னுடைய கடைக்கு மாயம்மா வரமாட்டாரா? என்று வியாபாரிகள் ஏங்கத்தொடங்கினர். யாராவது “என்னுடைய கடைக்கு வாருங்கள்” என்று அழைத்தால், அங்கு செல்ல மாட்டார். ஒரு கட்டத்தில் வியாபாரிகளே, உணவுப் பொட்டலங்களுடன் அவரைத் தேடிப் போகத் தொடங்கினர்.

ஒரு சமயம் பகவதி அம்மன் கோவில் பிரசாதத்தை சாப்பிட்டுக் கொண்டிருந்தார் மாயம்மா. அப்போது அங்கு வேலை செய்து கொண்டு இருந்த தொழிலாளி ஒருவர் திடீரென வயிற்றுவலியால் துடிக்கத் தொடங்கினார். உடனே தன் கையில் இருந்த ஒரு கவளம் சாப்பாட்டையும், அந்த தொழிலாளியை சாப்பிடும்படி சொன்னார், மாயம்மா. அதை சாப்பிட்ட மறுநொடியே தொழிலாளியின் வயிற்றுவலி நின்றுபோனது.

மாயம்மாவின் புகழ் மெல்ல மெல்ல அந்தப் பகுதி மட்டுமின்றி, அதைச் சுற்றியுள்ள பகுதி மக்களுக்கும் பரவத் தொடங்கியது. ஆனால் மாயம்மா தன்னை யாரும் வணங்கினாலும், வணங்காவிட்டாலும் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை.

“என் மக்களைக் காத்திடவே வந்தேன்” என்பார்.

கன்னியாகுமரியில் தபோவனம் அமைத்திருந்த சத்குரு ராமனந்த சுவாமிகள், “கன்னியாகுமரி அம்மனே மாயம்மாவாக வந்திருக்கிறார்” என்று சொல்லி இருக்கிறார்.

சில காலம் கழித்து ராஜமாணிக்கம் என்பவர் குடில் அமைத்துக் கொடுக்க, அதில் தங்கி மக்களுக்கு சேவை செய்தார், மாயம்மா.

நாய்கள் மேல் மட்டும் ஏன் அவ்வளவு பரிவு காட்டினார் என்பது கடைசிவரை தெரியவில்லை. எந்நேரமும் நாய்களோடு வலம் வரும் அவரை, “பைரவ சித்தர்” என்றும் மக்கள் அழைத்தனர்.

பல காலம் கன்னியாகுமரியில் வசித்த அவர், செய்த சித்து விளையாட்டுக்கள் ஏராளம். அதன்பிறகு ஏனோ, அங்கிருந்து புறப்பட்டு, ஏற்காடு மலையடிவாரத்தில் போய் தங்கினார். அவர் சென்ற வருடம் அந்தப் பகுதியில் மழை பெய்யவில்லை. அதனால் அங்கிருந்த மக்கள் அவரை எதிர்த்தனர். “இவர் இருந்தால் சேர்வராயன் மலைப் பகுதியில் ஒரு பொட்டுக் கூட மழை வராது” என்று கூறினா்.

அதைக் கேட்ட மாயம்மா.. புன்சிரிப்புடன் “இன்று இரவு மழை பெய்யும்” என்று சொன்னார். அதுபோலவே அன்று இரவு மழை கொட்டித் தீர்த்தது. அவரது பெருமையை அறிந்த மக்கள், அங்கேயே அவருக்கு ஒரு ஆசிரமம் அமைத்துக் கொடுத்தனர்.

1992-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9-ந் தேதி, மாயம்மா தன் பூதவுடலை நீங்கினார்.

இவரது ஆசிரமத்திலேயே இவரது ஜீவசமாதி அமைக்கப்பட்டுள்ளது. சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் வழியில் அமைந்துள்ள இக்கோவிலில் ஆண்டுதோறும் பிப்ரவரி 9-ந் தேதி குருபூஜை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

கன்னியாகுமரியிலும் அவர் தங்கியிருந்த இடத்தில் கோவில் அமைக்கப்பட்டு பூஜை நடக்கிறது. சமாதி அடைந்தபிறகும் கூட பல அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார் மாயம்மா.

இப்போதும் கூட, தன் உடலில் காயம்பட்ட நாய்கள் ஓடிவந்து அவரது சன்னிதியில் படுத்துக் கொள்வதும், அந்த காயத்தின் மீது கோவில் பூசாரி திருநீற்றையும், பூவையும் வைக்க, குணமாகி எழுந்து ஓடுவதையும் அதிசய நிகழ்வாகவே பார்க்கிறார்கள்.

பல்ேவறு ஆன்மிகப் பெரியவர்கள் மாயம்மாவை சந்தித்து ஆசிபெற்றிருக்கிறார்கள்.

இவ்வளவு பெருமை வாய்ந்த மாயம்மாவின் கோவிலை, கன்னியாகுமரி செல்பவர்களும், சேலம் செல்பவர்களும் அவசியம் தரிசித்து அருள் பெறுவோமாக.

-தொடரும்.

Next Story