கண் நோய் தீர்க்கும் கரியமாணிக்கப் பெருமாள்


கண் நோய் தீர்க்கும் கரியமாணிக்கப் பெருமாள்
x
தினத்தந்தி 31 Jan 2020 8:50 AM GMT (Updated: 31 Jan 2020 8:50 AM GMT)

நெல்லையப்பர் வீற்றிருந்து அருள்பாலிக்கும் திருநெல்வேலி, ‘முழுதும் கண்டராம பாண்டியன்’ என்ற மன்னனால் பெருமை பெற்ற திருத்தலம் ஆகும்.

நெல்லையப்பர் வீற்றிருந்து அருள்பாலிக்கும் திருநெல்வேலி, ‘முழுதும் கண்டராம பாண்டியன்’ என்ற மன்னனால் பெருமை பெற்ற திருத்தலம் ஆகும். இந்த திருநெல்வேலி நகரில் நின்ற, இருந்த, படுத்த திருக்கோலத்தில் மகாவிஷ்ணு சேவை சாதிக்கும் ஆலயம்தான், கரியமாணிக்கப் பெருமாள் கோவில்.

சுமார் 2 ஆயிரம் ஆண்டு பழமையான இந்த ஆலயம், பாண்டியர், சோழர், மற்றும் நாயக்கர் காலத்தில் மிகச்சிறப்பாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ராஜராஜ சோழ மன்னனுக்கு ‘கரிய மாணிக்கன்’ என்ற சிறப்பு பெயர் உண்டு. இந்த மன்னனின் ஆட்சி காலத்தில் இக்கோவில் மறுசீரமைப்பு செய்யப்பட்டிருக்கிறது.

நமக்கெல்லாம் மகாபாரதம் அருளியவர் வியாச முனிவர். இவரது முதன்மையான சீடர் பைலர். இவர் தாமிரபரணி ஆற்றின் கரையில் வாழ்ந்து வந்தார். இவர் தாமிரபரணி குறுக்குத்துறையில் அமர்ந்து ஸ்ரீனிவாச பெருமாளை நினைத்து தவம் புரிந்தார். அந்த காலத்தில் இங்கு கோவில் இல்லாத காரணத்தினால், மனதிற்குள்ளேயே பெருமாளை நினைத்து பூஜை செய்து வந்தார், பைலர் முனிவர். ஒரு கோடி மலரால் ஸ்ரீனிவாசரை அர்ச்சனை செய்தார்.

அந்த கோடி மலரும் ஒன்றாகச் சேர்ந்து, மிக பிரகாசமான நீல ரத்தினமானது. அந்த நீலரத்தினத்திற்குள் இருந்து ஸ்ரீனிவாசர் காட்சி கொடுத்தார். அவரை பைலர், ‘நீலமணிநாதர்’ என்ற திருநாமம் சூட்டி வணங்கினார். இதனால்தான் இந்த ஷேத்திரம் ‘ஸ்ரீ நீலரத்ன ஷேத்திரம்’ ஆனது. இந்த தலம் ‘வேணுவனம்’ என்றும் போற்றப்படுகிறது.

“பகவானே.. உங்கள் வடிவத்தை காண நான் பேறு பெற்றுள்ளேன். வடக்கே திருப்பதியில் வேங்கட மலையில் குடிகொண்ட வேங்கடாசலபதி பெருமானே! இந்த அடியவனுக்கு காட்சி கொடுத்தது போலவே, நீவிர் தேவா்கள் புடைசூழ தோன்றி பக்தர்களுக்கு அருள் வழங்க வேண்டும். உம்மைத் தேடி வரும் பக்தர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

“சனி, சூரியன் ஆகிய கிரகங்களினால் ஏற்பட்ட உபாதைகளை நீக்கி, கண்ணுக்கு ஒளி தரும் என் கரிய மாணிக்கமே” என இத்தல இறைவனைப் பற்றி நம்மாழ்வார் பாடுகிறார். இதன் மூலம் இந்த திருக்கோவிலானது, சனி மற்றும் சூரியனின் கிரக தோஷங்களைப் போக்கும் ஆலயம் என்பது உறுதியாகிறது.

இத்தல மூலவர் நின்ற திருக்கோலத்தில் கரியமாணிக்கப் பெருமாளாகவும், சயனத் திருக்கோலத்தில் அனந்த பத்மநாபப் பெருமாளாகவும், அமர்ந்த திருக்கோலத்தில் லட்சுமி நாரயணராகவும் காட்சி தருவது மிகச்சிறப்பானதாகும். இங்கு இரண்டு தாயார் சன்னிதிகள் உள்ளன. சவுந்திரவல்லி மற்றும் கோதைவல்லி ஆகிய இருவரும் தனித்தனி சன்னிதியில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள். இங்கு தாமிரபரணி தீர்த்தம், பத்மநாப தீர்த்தம் ஆகிய இரண்டு தீர்த்தங்கள் உள்ளன. இந்த ஆலயத்தின் விமானம், ‘ஆனந்த விமானம்’ என்று அழைக்கப்படுகிறது. ஆலயத்தில் தல விருட்சம், மூங்கில் ஆகும். இக்கோவிலில் வடக்கு நோக்கியபடி, தனிச்சன்னிதியில் அமா்ந்து அனுமன் அருள்பாலிக்கிறாா்.

இந்த ஆலயம் 17 ஆயிரத்து 800 சதுர அடி பரப்பளவு கொண்டதாகும். சூரியன், சனி, ராகு, கேது ஆகிய கிரகதோஷங்களை நீக்கும் பரிகாரங்களுக்கு முக்கிய தலமாக இது விளங்குகிறது. வைகானச ஆகமப்படி இந்த கோவில் கட்டப்பட்டு, வழிபாடுகள் நடைபெறுகின்றன. புராண காலப்படி, ஸ்ரீ கிருஷ்ணவர்ம மகாராஜவிற்கு, இத்தல இறைவனான கரியமாணிக்கப் பெருமாள் காட்சி கொடுத்துள்ளார். அவரால்தான் இந்த ஆலயம் புதுப்பிக்கப்பட்டதாக செவிவழிச் செய்தி ஒன்றும் சொல்லப்படுகிறது. அதுபோலவே மணப்படை வீடு ஸ்ரீ விஷ்ணுவர்த்த மகாராஜாவுக்கும், இத்தல இறைவன் அருள்பாலித்து உள்ளார்.

திருமலை திருப்பதியை போலவே, தை மாதம் வரும் ரத சப்தமி அன்று ஏழு வாகனங்களில் பெருமாள் புறப்பாடு நடைபெறுவது, தமிழ்நாட்டில் இத்திருத்தலத்தில் மட்டும்தான். பங்குனி மற்றும் தை திருவோணத்தில் 4 ரத வீதிகளில் கருட வாகனத்தில் அமர்ந்து பெருமாள் வீதி உலா வருவார். பின் கருடசேவை சங்கமம் மற்றும் தீபாராதனை ஆகியவை, டவுண் கீழ ரதவீதி பெரிய தேர் அருகில் நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் தென்திருப்பதி வெங்கிடநாத பெருமாள் திருக்கோவில், மகிழ் வண்ணநாதர், லட்சுமி நரசிங்க பெருமாள், சங்காணி வரதராஜ பெருமாள், கரிய மாணிக்கப் பெருமாள் ஆகிய பெருமாள்கள், கருட வாகனத்தில் இந்தக் கோவில் முன்பு சேவை சாதிப்பது மிகச்சிறப்பானதாகும்.

திருமலையைப் போலவே இந்த ஆலயத்திலும் ஏழு நிலைகளைக் கடந்து இறைவனை தரிசிக்க வேண்டும். பந்தல் மண்டபம், வேணுகோபால் பஜனைமடம் உள்ள மண்டபம், மகாமண்டபம், மணி மண்டபம், கருட மண்டபம், அர்த்த மண்டபம், கர்ப்பக்கிரகம் என 7 நிலை இருப்பதால், இது ‘தென் திருப்பதி’ என கருதப்படுகிறது. இந்த ஆலயத்தில் சித்திரை விஷு திருவிழா, வைகாசி விசாகத் திருவிழா, ஆனிமாத திருமஞ்சனம், ஆடி சுவாதி, ஆவணி உறியடி திருவிழா, புரட்டாசி சனிக்கிழமை கருட சேவை, ஐப்பசி விஷு கருடசேவை, கார்த்திகை மாதம் கார்த்திகைத் திருநாள், மார்கழி மாதம் 30 நாளும் திருப்பாவை பாராயணம் செய்யும் நிகழ்வு போன்றவை நடைபெறுகிறது.

பெண்கள் கைகங்கர்ய சபை சார்பில், மார்கழி மாதம் 27-ம் நாள் ஆண்டாள் உற்சவம் நடைபெறுகிறது. தொடர்ந்து வைகுண்ட ஏகாதசியன்று பரமபத வாசல் திறப்பு மிகச்சிறப்பாக நடைபெறும். தை மாதம் ஆலய வருஷாபிஷேகம் 10 நாள் உற்சவமாக கொண்டாடப்படுகிறது. இரண்டாம் நாள் லட்சார்ச்சனை, புஷ்பாஞ்சலியும் வெகு விமரிசையாக நடத்தப்படும். 10 நாள் நடைபெறும் பங்குனி உத்திர பெரு விழாவில், 10-ம் திருநாள் அன்று தேரோட்டம் நடைபெறும். பங்குனி வளர்பிறையில் ராமநவமி உற்சவமும், திருவீதி உலாவும் நடக்கும்.

இத்தலம் பிராத்தனை தலமாகும். “இங்கு நீலமணிநாதர், கரியமாணிக்கம் என்ற பெயரில் கண் நோய் தீர்க்கும் ஆண்டவராகவே உள்ளார்” என நம்மாழ்வாரால் பாடப்பட்ட தலமாகும். இங்குள்ள கருடனுக்கு இரண்டு சிவப்பு கண்கள் பொருந்தியிருப்பது, கண்நோய் தீர்ப்பதை உணர்த்துவதாக உள்ளது.

சனி தோஷம் உள்ளவர்கள், சனிக்கிழமைகளில் இங்கு வந்து வணங்கி நின்றால் சனி பகவானால் வரும் பிரச்சினைகள் குறையும். புதன்கிழமை இத்தலம் வந்து வழிபடுவோருக்கு கல்விகளில் முன்னேற்றம் உண்டாகும். வெள்ளிக்கிழமை அன்று லட்சுமி நாராயணரை வணங்குபவர்கள், விரைவில் திருமணம் கைகூடும் பாக்கியம் பெறுவர். மார்கழி மாதம் நடைபெறும் ஆண்டாள் உற்சவத்தில் கலந்து கொண்டால், வேண்டிய வரம் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்கள், திருமண பேறு பெறுவார்கள். குழந்தை வரம் கிடைக்கிறது. குழந்தைகளை திருவோணம் நட்சத்திரத்தில் இத்தல இறைவனுக்கு தத்து கொடுத்து, மீண்டும் பெற்றுச் செல்லும் நிகழ்வு அதிகமாக நடக்கிறது. இந்த கோவிலில் சந்தான கோபாலகிருஷ்ணனுக்கு, சுதர்சன ஹோம பூஜை செய்யப்படுகிறது.

இந்த ஆலயம் தினமும் காலை 7.15 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்

இத்திருத்தலம் திருநெல்வேலி நகரம் நெல்லையப்பர் திருக்கோவிலுக்கு பின்புறம் அமைந்துள்ளது. திருநெல்வேலி நகர சந்தி விநாயகர் திருக்கோவில் பஸ் நிலையத்தில் இறங்கி, அரை கிலோமீட்டர் தூரத்தில் கோவிலை அடையலாம்.

திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து திருநெல்வேலி நகரம் மற்றும் திருநெல்வேலி நகரம் வழியாக செல்லும் அனைத்து பேருந்துகளிலும் சென்று இத்திருத்தலத்தை அடையலாம்.

முத்தாலங்குறிச்சி காமராசு

Next Story