பக்தர்கள் கோரிக்கையை நிறைவேற்றும் `சொன்ன வண்ணம் செய்த பெருமாள்'
10-2-2020 ஓரிக்கை உற்சவம். தொண்டை நாட்டின் தலைநகரமாக இருந்த காஞ்சி, வரலாற்றுப் பெருமையும் கலாசாரப் புகழையும் கொண்டது.
“தெண்ணீர் வயல் தொண்டை நன்னாடு சான்றோருடைத்து” என்று ஒளவையாரால் போற்றிப் பாடப்பட்ட இடம் அது. “புஷ்பேசு ஜாதி, புருஷேசு விஷ்ணு, நாரீஷு ரம்பா, நகரேஷு காஞ்சி” என வடமொழிப் புலவர் ஒருவா் பாடியுள்ளார். அதாவது ‘பூக்களில் சிறந்தது ஜாதி முல்லை/மல்லி, புருஷர்களில் பெரியவர் விஷ்ணு, பெண்களில் சிறந்தவர் ரம்பா, நகரங்களில் சிறந்தது காஞ்சிபுரம்’ என்பது இதன் பொருள்.
“கல்வியிற் கரையிலாத காஞ்சி” என்று நாயன்மாரும், இந்தப் பெருநகரைப் போற்றிப் புகழ்ந்துள்ளனர். நம் நாட்டில் ‘மோட்சபுரி’கள் என்று சொல்லப்படுகின்ற ஏழு மகா ஷேத்திரங்களுள் காஞ்சியும் ஒன்று. அயோத்தி, மதுரா, ஹரித்துவார், காசி, உஜ்ஜயினி, துவாரகை ஆகிய ஆறும் மற்ற நகரங்கள் ஆகும். கி.மு 2-ம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக கருதப்படும் பதஞ்சலி முனிவர் இயற்றிய மகாபாஷ்யத்திலும், சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை நூலிலும், புலவர் உருத்திரங்கண்ணனார் எழுதிய பெரும்பாணாற்றுப்படையில் இருந்தும் காஞ்சியின் மேன்மையை நாம் அறிய முடியும்.
சைவ, வைஷ்ணவ, பவுத்த, ஜைன மத ஸ்தாபன பீடங்களாகவும், காஞ்சிபுரம் சிறப்புற்று விளங்கி இருக்கிறது. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற திவ்ய தேசங்கள் இங்கு பரவலாக இருக்கின்றன. அவற்றுள் பழமையானதும், புராதனமானதுமான அழகிய கோவில்தான், ‘சொன்ன வண்ணம் செய்த பெருமாள்’ ஆலயம் ஆகும். இந்த ஆலயம் கி.பி. 7-ம் நூற்றாண்டிற்கு முன்பே கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று வரலாற்று ஆய்வுகள் சொல்கின்றன. இந்த ஆலயத்தில் கடந்த ஆண்டுதான் கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்தது.
தல வரலாறு
ஒரு சமயம், பிரம்மதேவரது மனம் மாசு படிந்து அழுக்காகக் காணப்பட்டது. மனதில் உள்ள அழுக்கு நீங்க, கங்கை நதிக்கரை ஓரத்தில் பிரம்மதேவர் கடுந்தவம் செய்தார். தவம் செய்து கொண்டிருந்தபோது ஒரு நாள், அவருடைய காதில் விழுந்த சில ஒலிகளை கூர்ந்து கவனித்தாா்.
“மாசு ஒழிய, உள்ளம் தூய்மையடைய, ஓராயிரம் வேள்விகள் நடத்த வேண்டும். நடத்தி முடித்த அடுத்த கணமே உன் மாசு அழிந்துவிடும். ஆனால், ஆயிரம் யாகங்கள் நடத்துவதற்கு உன் ஆயுட்காலம் போதாது. எனவே காஞ்சிக்குச் செல். அந்த சத்திய விரத ஷேத்திரத்தில் ஒரு வேள்வி செய்தால், ஆயிரம் வேள்வி செய்ததற்கு சமம்” என்று அந்த ஒலியின் ஊடே ஓர் அசரீரி கேட்டது.
இதையடுத்து அசரீரி சொன்னபடி, காஞ்சி பகுதிக்கு வந்த பிரம்மதேவர், மற்ற முனிவர்களுடன் இணைந்து அந்த வேள்வியை சிறப்பாக நடத்திக் கொண்டிருந்தாா். குண்டத்தில் இருந்து அக்கினி ஜுவாலை கொளுந்து விட்டு எரிந்துகொண்டிருந்தது. இந்த நிலையில் தன்னை அருகில் வைத்துக் கொள்ளாமல், தனியாக யாகம் செய்யும் பிரம்மதேவரின் மீது, அவரது மனைவியான சரஸ்வதிக்கு கோபம் உண்டானது. பிரம்மனின் வேள்வியை அழிக்க நினைத்த சரஸ்வதி தேவி, ‘வேகவதி’ என்ற பெரிய ஆறாக உருமாறி, வேள்வி நடைபெற்ற பகுதியை நோக்கி சீறிப்பாய்ந்து வந்தாள்.
இதையறிந்த பிரம்மதேவன் செய்வதறியாமல், மகாவிஷ்ணுவை நினைத்து வேண்டினார். இதையடுத்து மகாவிஷ்ணு, ‘யதோக்தகாரி’யாய் வந்து, ஆற்றின் குறுக்கே படுத்து நீரை அங்கிருந்து மேற்கொண்டு செல்லவிடாமல் தடுத்தார். அதைத் தொடர்ந்து பிரம்மதேவரின் வேள்வி, நல்லபடியாக நிறைவுபெற்றது. அந்த வேள்வி குண்டத்தில் இருந்து, பல்லாயிரம் சூாியா்களின் ஒளி பொருந்திய தோற்றத்தில் வரதராஜப் பெருமாள் தோன்றினார். யதோக்தகாரி தோன்றிய ஏழாம் நாள்தான் வரதராஜர் என்னும் தேவராஜப் பெருமாள் தோன்றினார். யதோக்தகாரி என்பதற்கு சொன்னபடி செய்பவர் என்று பொருள். எனவேதான் இத்தல இறைவன் ‘சொன்ன வண்ணம் செய்த பெருமாள்’ என்று அழைக்கப்படுகிறார். யதோக்தகாரியின் ஜென்ம நட்சத்திரம் சித்திரை மாதத்தில் வரும் புனர்பூசம், தேவராஜப் பெருமாளுக்கு அஸ்தம். எனவே பக்தர்கள் ஸ்ரீ யதோக்காரியை உபாயமாகவும், ஸ்ரீ தேவராஜ பெருமாளை உபேயமாகவும் கருதி வழிபடுகிறார்கள்.
காஞ்சிக்கு அருகே அவதரித்த பொய்கையாழ்வார் மற்றும் ஆழ்வார்களில் முதன்மையானவரான நம்மாழ்வார் ஆகியோர் இத்தலப் பெருமாளைப் போற்றி, ஏராளமான பாசுரங்கள் பாடியிருக்கிறார்கள். ஸ்ரீ மணவாள மாமுனிகள், இந்தக் கோவிலில்தான் சுமார் ஒரு வருட காலம் தங்கியிருந்து பிரசங்கம் செய்தார்.
காஞ்சிபுரம் வரும் பக்தர்கள், சொன்னவண்ணம் செய்த பெருமாளை பார்க்காமல் செல்வதில்லை. இந்தக் கோவிலானது காஞ்சிபுரத்தில் திருக்கச்சி நம்பி தெருவின் வட பகுதியில் இருக்கிறது.
பக்தனை பின்தொடர்ந்த இறைவன்
திருமழிசை ஆழ்வார், இந்த ஆலயத்தில் உள்ள இறைவனுக்கு சேவை செய்து கொண்டிருந்தாா். அவருக்கு சிறந்த விஷ்ணு பக்தரும், கவிஞருமான கணிகண்ணர் உதவியாக இருந்தார். விஷ்ணுவின் மீது அதீத பக்தி கொண்ட வயதான பெண்மணி ஒருவர், கண்கண்ணரிடமும் அன்பு கொண்டிருந்தார். அவளது தளர்ந்த உடலைக் கண்டு மனம் இரங்கிய கணிகண்ணர், அந்த மூதாட்டியின் முதுமையை போக்கி அருளும்படி யதோக்தகாரியின் மீது சில பாசுரங்களைப் பாடினார். உத்தமமான தன்னுடைய பக்தனின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றினார், யதோக்தகாரி. ஆம்.. அந்த வயதான பெண்மணி, இளம்பெண்ணாக மாறினார்.
இதைக் கேள்விப்பட்ட அந்தப் பகுதியை ஆட்சி செய்த மன்னன், கணிகண்ணரை அழைத்து, இறைவனிடம் கூறி தன்னையும் இளமையாக மாற்றும்படி உத்தரவிட்டான். ஆனால் கணிகண்ணரோ, “கேட்டவர்களுகெல்லாம் இளமையளிக்க ஆண்டவன் அவ்வளவு எளிதில் சம்மதிப்பானா மன்னா? அவனை நினைத்து பூஜிப்பவருக்கும் கூட இளமை கிடைப்பது அரிதானதே..” என்று கூறினார்.
“நான் செய்வதைவிட அந்த வயதான பெண்மணி எந்த விதத்தில் உயர்வான வழிபாடு செய்கிறாள்?” என்று கேட்டான் மன்னன். அதற்கு கணிகண்ணர், “அவள் வயதானவள்தான். ஆனால், கடவுள் வழிபாட்டில் என்றென்றும் இளமையாகவே இருக்கிறாள். உள்ளம் இளமையாக இருந்தாலும், இறை வழிபாட்டிற்கு வெளியுடல் துன்பத்தை கொடுப்பதாக இருந்தது. ஆதலால் எந்நேரமும் இறைவனை பிரார்த்திக்க வேண்டி, அவளது உடலை இளமையாக்கினார் இறைவன். வெளி விவகாரங்களில் மனதை நிறுத்தியிருக்கும் உம்மைப் போன்ற மன்னர்களுக்கு, இளமை கிடைக்காது மன்னா” என்றார்.
இந்த பதில் மன்னனுக்கு கடுங்கோபத்தை ஏற்படுத்தியது. அதனால் கணிகண்ணரை நாடு கடத்த உத்தரவிட்டார். திருமழிசை ஆழ்வார், தன்னுடைய சீடரை பிரிய மனம் இல்லாமல், அவருடனேயே செல்ல நினைத்தார். ஆனால் யதோக்த காரியை பிரிய நேரிடுமே என்று மனம் வருந்தியவர், பெருமாளைப் பார்த்து -
“கணிகண்ணன் போகின்றான் காமருபூங் கச்சி
மணிவண்ணா நீ கிடக்க வேண்டா - துணிவொன்றிச்
செந்நாப் புலவோன்யான் செல்கின்றேன் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்”
-என்ற பாசுரத்தைப் பாடினார். உடனே திருமழிசையாழ்வாரும் கணிகண்ணரும் சென்ற வழியில், பெருமாளும் தன் பாம்புப் படுக்கையைச் சுற்றிக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்.
இறைவன் சென்றதும், அந்த நகரமே இருள் சூழ்ந்தது. மக்கள் அனைவரும் ‘முழு சூரிய கிரகணம் வந்துவிட்டதோ’ என்று நினைத்து அச்சமடைந்தனர். அனைவரும் மன்னனிடம் சென்று முறையிட்டனர். அப்பொழுதுதான், பக்தர்களுடைய சக்தியை, காஞ்சி மன்னன் உணர்ந்தான்.
இறைவனின் அடியார்களைத் தேடி ஓடினான். அப்போது அவர்கள் இருவரும் பாலாற்றின் வடகரையில் உள்ள ஓரிடத்தில் தங்கியிருந்தனர். அந்த இடத்திற்கு ‘ஓரிரவிருக்கை’ என்று பெயர். அதுவே தற்போது ‘ஓரிக்கை’ என்று அழைக்கப்படுகிறது.
மன்னனின் வேண்டுகோளை ஏற்று, கணிகண்ணர் மன்னனை மன்னித்து திருமழிசை ஆழ்வாரைப் பார்க்க, அவரோ பெருமாளைப் பார்த்து-
“கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங் கச்சி
மணிவண்ணா நீ கிடக்க வேண்டும் - துணிவொன்றிச்
செந்நாப் புலவோன்யான் செலவொழிந்தேன் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய்விரித்துக் கொள்”
-என்று பாடுகிறார்.
பெருமாளும் ஆழ்வாரின் பக்திக்கு கட்டுப்பட்டு, மீண்டும் காஞ்சி மாநகர் திரும்பினார்.
இந்த நிகழ்வை தெரிவிக்கும் வகையில் இன்றளவும், தை மாத மக நட்சத்திரத்தில் உற்சவம் நடக்கிறது. அன்று பெருமாளையும் திருமழிசையாழ்வரையும் ஓரிக்கையில் எழுந்தருளச் செய்து திரும்பக் கொண்டு வருவார்கள்.
- ரா.சுந்தர்ராமன்
Related Tags :
Next Story