அருள் புரியும் பெருங்கருணை பெருமாள்


அருள் புரியும் பெருங்கருணை பெருமாள்
x
தினத்தந்தி 14 Feb 2020 10:12 AM GMT (Updated: 14 Feb 2020 10:12 AM GMT)

பரமக்குடியில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பெருங் கருணை என்ற திருத்தலம். இங்கு மிகவும் பழமை வாய்ந்த வரதராஜப் பெருமாள் கோவில் இருக்கிறது. இந்த ஆலயத்தின் சிறப்புகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

தல வரலாறு

ஆவணி மாதம் பூச நட்சத்திரத்தில் ஏகாதசி திதியில் திருக்கோஷ்டியூரில் கைங்கரியம் செய்து வந்த சவும்ய நாராயணனுக்கு மகனாக பிறந்தவர் செல்வ நம்பி. இவரது தாய் பெருங்கருணையைச் சேர்ந்தவர். இவர் மாமா வரதராஜ வேத விற்பன்னரிடம், வேதங்களை முறையாகக் கற்றார்.

இந்த நிலையில் விக்ரம பாண்டியன் என்ற மன்னன், தனக்கு குழந்தை பாக்கியம் இல்லாததால், தனது குல தெய்வமான அழகர் பெருமாளிடம் முறையிட்டான். பெருமாள், அந்த மன்னரை சேது சமுத்திரம் பயணித்து, திருப்புல்லாணி ஆதி ஜெகந்நாத பெருமாளை தரிசிக்கும்படி அருளினார். அங்கு செல்லும் வழியில் இரவு நேரத்தில் கொற்றவேல்குடி என்ற கிராமத்தில் மன்னன் தங்கினான்.

இதையறிந்த செல்வ நம்பி, அங்கு சென்று மன்னனை சந்தித்து, அவனுக்கு பாகவத புராணத்தில் கண்ணனின் அவதார கட்டத்தை விளக்கி கூறினார். அதன் முடிவில் “இந்த புராணத்தை யார் கேட்கிறார்களோ, அவர்கள் துன்பங்களில் இருந்து விடுபடுவர்” என்று கூறினார்.

அந்த நேரத்தில் மன்னனுக்கு ஒரு தகவல் கிடைத்தது. பாண்டிய நாட்டில் நிலவி வந்த சிறுசிறு பிரச்சினைகள் அனைத்தும் ஒரே இரவில் தீர்ந்து விட்டதாக அந்த தகவலில் சொல்லப்பட்டது. இதைக் கேட்டு மன்னன் மகிழ்ந்து போனான். பாகவத புராணத்தில் பெருமையை உணர்ந்தான். அதோடு மட்டுமின்றி சில நாட்களிலேயே மன்னனின் மனைவி கருவுற்றாள். அடுத்த பத்து மாதங்களில் அவளுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன் என்று பெயரிட்டனர்.

அவனே பிற்காலத்தில் வல்லப தேவ பாண்டியன் என அழைக்கப்பட்டான். விக்ரம பாண்டியன் தனது நாட்டு பிரச்சினையும், வீட்டுப் பிரச்சினையும் தீர்ந்தது கண்டு, செல்வ நம்பியை தனது குருவாக ஏற்றான். அதோடு அவரை, மதுரையில் தனது ராஜ புரோகிதராகவும் அறிவித்தான். பின்னாளில் பெருமாளின் கருணையை எண்ணி, அவருக்கு பெருங்கருணையில் வரதராஜப் பெருமாள் என்ற ஆலயத்தை மன்னன் நிர்மாணித்தான். கோவிலுக்காகவும், அதன் உற்சவங்களுக்காகவும் 96 கிராமங்களை தர்மமாக எழுதி வைத்தான்.

பெருங்கருணை வரதராஜப் பெருமாள் கோவில் ராமநாதபுரம் சேதுபதி மன்னனால் புதுப்பிக்கப்பட்டது. தற்போது இவ்வாலயம் ராமநாதபுரம் சமஸ் தானத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆலயம் ராஜகோபுரம் இன்றி, சிறிய விமான அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. அதன் நடுவில் சுதைச் சிற்பமாக, ஸ்ரீதேவி- பூதேவி சமேத பெருமாள் காட்சியளிக்கிறார்.

முகப்பைக் கடந்து உள்ளே செல்கையில், பலிபீடத்தைக் காணலாம். இதையடுத்து கருட பகவான் சன்னிதி உள்ளது. மகாமண்டபத்தில் துவாரபாலகர்கள் காட்சி தருகின்றனர். அந்த மண்டபத்தின் இடது புறத்தில் சேனை முதலியார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், செல்வ நம்பி, திருக்கோஷ்டியூர் நம்பி, எம்பெருமானார் எழுந்தருளியுள்ளனர். சிறிய விமான அமைப்பில் கருவறை மண்டபம் காணப்படுகிறது.

கருவறையில் ஸ்ரீதேவி, பூதேவி சகிதமாய் பெருமாள் திருக்காட்சி தருகிறார். பெருமாள் வெளிர் நீல நிறத்துடன் கிழக்கு முகமாக நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக் கிறார். கழுத்தில் மற்றும் இடையில் ஆபரணங்கள், நான்கு கரங்களுடன் பெருமாள் சேவை சாதிக்கிறார். வலது கரங்கள் இரண்டில் சக்கரமும், அபய முத்திரையும், இடது கரங்களில் சங்கும், வாவென்று அழைக்கும் ஆஹ்வான முத்திரையும் உள்ளது. ஸ்ரீதேவி, பூதேவி இருவரும் ரோஜாப்பூ நிறத்தில் இரு கரங்களுடன் ஒரு கையில் மலரேந்தி காட்சி தருகின்றனர்.

உற்சவர் வரதராஜர் (பேரருளாளன்) ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சகிதமாக அருள்கிறார். தவிர யாக பேரர் (அபிஷ்ட வரதர்), தீர்த்த பேரர் (சத்ய வரதன்), பிரணதார்த்தி வரதன், சந்தான கோபாலன், வெண்ணைக் காடும் பிள்ளை (நர்த்தன கிருஷ்ணன்), சக்கரத்தாழ்வார் ஆகியோரது உற்சவர் திருமேனி களையும் வணங்கலாம். செல்வ நம்பி தனியாக அருள்பாலிக்கிறார்.

கருடன் சன்னிதிக்கு எதிரில் வலது பக்கம் தனிச் சன்னிதியில் ஹேமாம்புஜவல்லித் தாயார், புன்னகை தவழ நான்கு கரங்களுடன் அருள் பாலிக்கிறார். இரண்டு கரங்களில் மலர் ஏந்தியும், மற்ற இரு கரங்கள் அபய, வரத ஹஸ்தங்களுடனும் காணப்படுகிறது. பெருந்தேவி என்ற திருநாமத்துடன் தாயார், உற்சவராகவும் இருக்கிறாா். கருடன் சன்னிதிக்கு எதிரில் இடது பக்கம் ஆண்டாள் சன்னிதி அமைந்துள்ளது. பிரகாரத்திற்கு வெளியே ராமர் சன்னிதி உள்ளது. சீதை, லட்சுமணனுடன் ராமன் காட்சி தருகிறார்.

மனக்குறைகள் நீங்க, நினைத்த காரியத்தில் ஜெயம் ஏற்பட பெருமாள் மற்றும் தாயாரை பிரார்த்தித்துக் கொள்கின்றனர். குழந்தைப் பேறு பாக்கியம் கிடைக்க, சந்தான கிருஷ்ணரை வேண்டி பலனடைகின்றனர். எதிரிகள் தொல்லை, பயம் நீங்க சக்கரத்தாழ்வாரை வணங்கி நிம்மதியடைகின்றனர்.

இவ்வாலயத்தில் ஆவணி மாதம் 6 நாட்கள் செல்வ நம்பி சாத்துமறையும், கிருஷ்ண ஜெயந்தியும், ஐப்பசி மாதம் நான்கு நாட்கள் பவித்ர உற்சவமும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.அமைவிடம்

மானாமதுரையில் இருந்து பரமக்குடி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது பார்த்திபனூர் என்ற ஊர் வரும். பார்த்திபனூர் - கமுதி - அருப்புக்கோட்டை மார்க்கமாக சென்றால் அபிராமம் என்ற ஊர் இருக்கிறது. இங்கிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் பெருங்கருணை கிராமத்தை அடையலாம். பரமக்குடியில் இருந்து பஸ் வசதி உள்ளது.

திருப்பல்லாண்டு பாடிய பெரியாழ்வார்

வல்லப தேவனும் செல்வ நம்பியை தனது குருவாக ஏற்றுக் கொண்டு, தனக்கு ஏற்படும் இடர்கள், சந்தேகங்களுக்கு ஆலோசனை கேட்டு அதன்படி நடந்தான். ஒருநாள் செல்வ நம்பியிடம், மோட்சம் அடைவது மற்றும் பாவங்கள் மற்றும் பிறப்புகளிலிருந்து விடுபடுவது எவ்வாறு என்று மன்னன் வினவினான்.

செல்வ நம்பி, “வேதம் படித்த பண்டிதர்களை அழைத்து அரசபையில் விவாதம் ஒன்று நடத்தலாம்” என்று அறிவுரை கூறினார். அதன்படி விவாதத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் வெற்றி பெறுபவர்களுக்கு, பொற்கிழியை பரிசாக அறிவித்தான், மன்னன்.

விவாதம் அரசவையில் தொடர்ந்து கொண்டே இருந்தது. ஆனால் பொற்கிழியை வெல்பவர் எவரும் இல்லை. செல்வ நம்பியும், மன்னனும் சோர்ந்து போனார்கள். செல்வ நம்பி, பெருமாளிடம் இதுபற்றி முறையிட்டார்.

உடனே பெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூரில் தனக்கு நந்தவன கைங்கரியம் செய்துவரும் விஷ்ணு சித்தரிடம், “மதுரை வல்லபதேவ பாண்டியன் சபைக்கு எழுந்தருளி, பொற்கிழியை வென்று வாரும்” என்று ஆணையிட்டார்.

அதன்படி மதுரை சென்ற விஷ்ணு சித்தர், இறைவனின் ஆணைப்படி வேதங்கள், புராணங்கள் உபநிஷத்துக்கள் ஆகியவற்றில் இருந்து மேற்கோள் காட்டி, “நாராயணர் ஒருவரே பிரதானமானவர். மோட்சம் அடைவதற்கு அவரைத் தவிர வேறு வழியில்லை” என்று எடுத்துரைத்தார். இந்த விவாதத்தில் மகிழ்ந்துபோன வல்லப தேவ பாண்டியன், விஷ்ணு சித்தருக்கே பொற்கிழியை வழங்கினான். மேலும் அவருக்கு மரியாதை செய்யும் விதமாக யானையில் ஏற்றி நகர் வலம் வந்தான். அப்போது விஷ்ணு சித்தருக்கு, அங்கு கூடியிருந்த அனைவருக்கும் கருட வாகனத்தில் பெருமாள் காட்சி கொடுத்தார்.

அனைவருக்கும் காட்சி தந்த பெருமாளுக்கு, விஷ்ணு சித்தர் திருப்பல்லாண்டு பாடினார். எம்பெருமாளுக்கு பல்லாண்டு பாடிய காரணத்தால், இவரை அனைவரும் ‘பெரியாழ்வார்’ என்று அழைத்தனர். பெரியாழ்வார் விவாதத்திற்கு வந்ததற்கும், நமக்கு திருப்பல்லாண்டு கிடைத்ததற்கும் காரணமாக இருந்தவர் செல்வநம்பி. பிற்காலத்தில் செல்வநம்பி மற்றும் பெரியாழ்வார் நட்பு பலமாக இருந்தது.

-மு.வெ.சம்பத்

Next Story