தேவை தண்ணீர் சிக்கனம்


தேவை தண்ணீர் சிக்கனம்
x
தினத்தந்தி 21 Feb 2020 9:37 AM GMT (Updated: 21 Feb 2020 9:37 AM GMT)

இதோ இன்னொரு கோடை காலம் நம்மை நோக்கி வேகமாக வந்துகொண்டிருக்கின்றது. தண்ணீர் தேவை குறித்தும், அதை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்தும் எவ்வளவுதான் பேசினாலும், எழுதினாலும் போதிய விழிப்புணர்வு இந்த சமூகத்திற்கு இன்னும் வரவில்லை என்றே தோன்றுகிறது.

மனிதன் ஓரிடத்தில் தங்கி வாழவேண்டுமென்றால் தண்ணீர்தான் ஆதாரமாக இருக்கிறது. ஒருசில பகுதிகளில் தண்ணீரைத் தேடி தினமும் நீண்ட தூரம் மக்கள் அலைகின்றார்கள். அப்படியும் கிடைக்காத பட்சத்தில் தண்ணீரை விலை கொடுத்தும் வாங்குகின்றனர். சில இடங்களில் பணம் கொடுத்தாலும் தண்ணீர் கிடைப்பதில்லை.

கோடை காலத்தில் தண்ணீருக்காக அங்கும் இங்கும் மக்கள் அலைமோதுவது வாடிக்கையாகிவிட்டது. தண்ணீர் கேட்டு காலிக்குடங்களுடன் வீதிகளில் இறங்கி பெண்கள் போராட்டத்தில் ஈடுபடுவதும் வாடிக்கையான நிகழ்வாகிவிட்டது.

வீட்டுப் பிரச்சினைகளுடன் உயிர் வாழலாம். நாட்டுப் பிரச்சினைகளுடன் உயிர் வாழலாம். சமூகப் பிரச்சினைகளுடன் வாழலாம். தங்க இடம் இல்லாவிட்டால் உயிர் வாழலாம். உணவு இல்லாவிட்டால்கூட ஒருசில நாட்கள் உயிர் வாழ்ந்துவிடலாம். ஆனால், ஏழையாக இருந்தாலும், செல்வந்தராக இருந்தாலும் நீரின்றி எவராலும் வாழவே முடியாது என்பது நிதர்சனம்.

பாலைவனங்களில் தண்ணீர் பஞ்சம் இருக்கலாம். ஆனால் அனைத்து வளமும் செல்வமும் கொண்ட நம் தாய்த் திருநாட்டில் விவசாயம் சுருங்கிவிட்டது. அதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று தண்ணீர் தட்டுப்பாடு என்பது தான்.

ஆனால் நம்மில் பலரும் இவை எது குறித்தும் அறியாமல் இன்னும் தண்ணீரை வீணடித்துக்கொண்டுதான் இருக்கின்றோம். பணத்தை வீணடிப்பவர்களைப் பார்த்து சில ஆண்டுகளுக்கு முன்புவரை, ‘தண்ணீராய் செலவு செய்கின்றார்’ என்று கூறுவார்கள். ஆனால் இன்று அவ்வாறு கூறுவதில்லை. ஏனெனில் தண்ணீரை கூட விலை கொடுத்து வாங்கி குடிக்க வேண்டிய கட்டாய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

நாளை என்ன நடக்குமோ, எவற்றையெல்லாம் விலையாகக் கொடுத்து தண்ணீரை வாங்க வேண்டுமோ என்பதை அல்லாஹ் அறிவான். இனி வருங்காலத்தில் மூன்றாம் உலகப்போர் என்று ஒன்று நடந்தால் அது தண்ணீருக்காகவும் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள். (அவ்வாறு நடக்காமல் இறைவன் காப்பானாக).

பின்வரும் நிகழ்வை கற்பனை செய்து பாருங்கள். தாகத்தால் உதடுகள் வெடித்து, உலர்ந்து, நடை தளர்ந்த நிலையில் பாலைவனத்தில் நடந்து கொண்டிருக்கின்றார் ஒருவர். கண்களும், கால்களும் தண்ணீரைத் தேடுகின்றன, அங்கும் இங்கும் அலைகின்றார். திடீரென பிரகாசிக்கும் ஒரு பாத்திரம் தென்படுகிறது. நிச்சயம் அது தண்ணீர் தான் என்று எண்ணி வேகமாக அருகே சென்று பார்க்கின்றார். ஆனால் அதுவோ மின்னும் தங்கப்பாத்திரம். அதில் முழுவதும் தங்கக் காசுகள்.

அவர் என்ன கூறி இருக்க வேண்டும் ஆஹா.. நான் பாக்கியசாலி என்றுதானே? ஆனால், அவரோ ஐயோ.. எனக்கு ஏற்பட்ட நாசமே.. இது தங்கமா? நான் தண்ணீர் என்றல்லவா நினைத்தேன்.. என்று அரற்றினார்.

தாகத்தால் உயிர் போகும் வேளையில் தங்கமும் பயன் தராது, வெள்ளியும் உதவிக்கு வராது.

நீரின்றி அமையாது உலகு என்பார்கள். தண்ணீர்தானே வாழ்வின் அடிப்படை ஆதாரம். அந்த நீரைத் தந்த இறைவனுக்கு அதனைக் குடிக்கும்போது மனப்பூர்வமாக நாம் நன்றி செலுத்துகிறோமா? யோசித்துப் பாருங்கள். நாம்குடிக்கும் நீரை இறைவன் உப்பு நீராக மாற்றிவிட்டால் நமது நிலை என்னவாகும்?

இறைவன் திருக்குர்ஆனில் இவ்வாறு கூறுகின்றான்: “நாம் நாடினால் இதனை உவர்ப்பு நீராக்கிவிட்டிருப்போம். அப்படியிருக்க நீங்கள் ஏன் நன்றி செலுத்துவதில்லை” (56:70)

இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தண்ணீர் குடித்து முடித்தவுடன் எவ்வாறு இறைவனைப் புகழ்வார்கள் தெரியுமா?

“எங்களது பாவத்தின் காரணத்தால் இந்த நீரை உப்பு நீராக மாற்றாமல் தனது கருணையின் காரணத்தால் நல்ல நீராக மாற்றிய இறைவனுக்கு எல்லாப் புகழும்”.

ஒருநாளாவது நாம் இறைவனை இவ்வாறு புகழ்ந்திருக்கின்றோமா?

தண்ணீரை சிக்கனமாக செலவு செய்வதைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: ‘ஓடுகின்ற ஆற்றில் அங்கச் சுத்தி (உளு) செய்தாலும் உறுப்புகளை மூன்று தடவைக்கு மேல் கழுவக் கூடாது. அப்படிச் செய்தால் அவர் வரம்பு மீறிவிட்டார்’.

ஓடுகின்ற ஆற்றில் மூன்று தடவைக்கு மேல் சுத்தம் செய்தால் தண்ணீர் என்ன குறைந்துவிடவா போகிறது? இல்லையே. எதையும் வீணடிக்கும் எண்ணம் நம்மிடம் வந்துவிடக்கூடாது அதிலும் குறிப்பாக தண்ணீரை.. என்பதற்காகவே நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு உபதேசிக்கின்றார்கள்.

அல்லாஹ் கூறுகின்றான்: “உண்ணுங்கள் பருகுங்கள். ஆனால் விரயம் செய்யாதீர்கள்” (திருக்குர்ஆன் 7:31)

தண்ணீர் தட்டுப்பாட்டுக்கும் நமக்கும் எந்த தொடர்புமே இல்லை என்று நாம் ஒதுங்கிவிட முடியாது. மழை நீர் சேகரிப்புக்கும், தண்ணீரை சிக்கனமாக செலவழிக்கவும் நாம் என்னென்ன செய்திருக்கின்றோம் என்பதையும் சரிபார்த்துக்கொள்ள வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. தண்ணீரை சேமிப்பதற்கான ஆக்கப்பூர்வமான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உண்டு. இல்லையென்றால் ஆண்டு தோறும் தண்ணீருக்காக தவம் கிடப்பதும், தண்ணீரைத் தேடி அலைவதும் நம் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிடும் ஆபத்தும் இருக்கிறது.

- முஹம்மது தாஜுதீன், திருச்சி.

Next Story