பைபிள் கூறும் வரலாறு: எபிரேயர்
இந்த நூலின் ஆசிரியர் யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. பவுல் எழுதியிருக்கலாம் எனும் ஆரம்ப கால நம்பிக்கைகள் இப்போது வெகுவாக வலுவிழந்து விட்டன. காரணம் பவுலில் பிற நூல்களோடு ஒப்பிடுகையில் இந்த நூல் பெருமளவு வேறுபடுகிறது.
பவுலின் எழுத்துகளுக்கும், இறையியல் சிந்தனைகளுக்கும், நடைக்கும், கட்டமைப்புக்கும் இணையாத பல விஷயங்கள் இந்த திருமுகத்தில் உள்ளன.
இதை ஒருவேளை அப்பல்லோ எழுதியிருக்கலாம் என்பது சிலருடைய கருத்து. லூக்கா, பர்னபா, கிளமந்து, சீலா இவர்களில் ஒருவர் என்பது வேறு சிலருடைய கருத்து. அதே போல இது எழுதப்பட்ட காலம் எது என்பதிலும் பல மாற்றுக்கருத்துகள் உண்டு. எருசலேம் ஆலயத்தின் அழிவுக்கு முன்பா, பின்பா என்பதில் விவாதங்கள் உண்டு. எனினும் கி.பி. 64 க்கும் கி.பி. 85 க்கும் இடைப்பட்ட காலம் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்த நூல் எழுதப்பட்டதின் நோக்கத்தைப் புரிந்து கொண்டால் இந்த நூலின் சிந்தனைகளைப் புரிந்து கொள்வது எளிதாக இருக்கும். யூதக் கிறிஸ்தவர்களும், பிற இனக் கிறிஸ்தவர்களும் இணைந்து வாழ ஆரம்பித்திருந்த காலகட்டம். கிறிஸ்தவர்களுக்கு எதிராக மிகப்பெரிய அச்சுறுத்தல் வருகிறது. அது நீரோ மன்னனின் ஆட்சிக் காலமாக இருக்கலாம். மக்கள் கொல்லப்படுகின்றனர். அவர்களுடைய குடும்பங்கள் கொல்லப்படுகின்றன.
இப்போது, யூதக் கிறிஸ்தவர்களுக்கு மட்டும் உயிர்தப்ப ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. அவர்கள் கிறிஸ்துவை வெளிப்படையாக மறுதலித்து, மீண்டும் யூத மதத்துக்குத் திரும்பி தொழுகைக்கூடத்துக்கு வந்தால் தண்டனை இல்லை என்பதே அந்த வாய்ப்பு.
தங்கள் உயிரைக் காத்துக்கொள்ள வேண்டும் என விரும்பிய யூதர்கள் இயேசுவை மறுதலிக்க ஆரம்பித்தனர். அவர்களுடைய விசுவாசம் உடைபட ஆரம்பித்தது. இந்த சூழலில் “இயேசுவே எல்லாரையும் விடப் பெரியவர். பழைய ஏற்பாட்டு இறைவாக்கினர்கள், வழிகாட்டிகள், வானதூதர்கள் அனைவரையும் விட உயர்ந்தவர் இயேசுவே. அவர் நமக்குத் தந்திருக்கும் மீட்பைப் பெற்றுக்கொள்வதே மேலானது. என்பதை மக்களுக்கு உணர்த்தவே இந்த மடல் எழுதப்பட்டது.
பழைய ஏற்பாட்டைப் பற்றிய புரிதல் உள்ள யூத மக்களுக்கான நூல் இது. குறிப்பாக லேவியர் நூலோடு பரிச்சயமற்றவர்கள் இந்த நூலின் அழகையும், ஆழத்தையும் புரிந்து கொள்ள முடியாது.
இறைமகன் இயேசு முழுமையான மனிதராகவும், முழுமையான கடவுளாகவும் இருப்பவர். அவரே நமக்கு தந்தையாம் கடவுளை வெளிப்படுத்தினார். அவருடைய பலியினால் தான் நாம் மீட்கப்படுகிறோம். இல்லையேல் நம்முடைய பாவங்களுக்காக நியாயத் தீர்ப்பு நாளில் நாம் நரகத்தில் தள்ளப்படுவோம். காணாத இறைவனை நம்புவது மிக முக்கியம். இறைவனுடைய இரண்டாம் வருகை கடைசி நாட்களில் நிகழும். அவருடைய வாக்குறுதிகள் பொய்யாவதில்லை என்பது போன்ற முக்கியமான இறையியல் சிந்தனைகள் இந்த நூலில் நிரம்பியிருக்கின்றன.
இரண்டு முக்கியமான எச்சரிக்கைகள் இந்த நூலில் தரப்படுகின்றன. ஒன்று இறைமகன் இயேசு மீது கொண்ட விசுவாசத்தை விட்டு விலகிச் செல்வது. இன்னொறு அவர் கடவுளே இல்லையென மறுதலிப்பது. முதலாவது பிழை நிவர்த்தி செய்யக் கூடியது. இரண்டாவது பிழையோ மீட்பையே இழக்கச் செய்யக் கூடியது.
மீட்பு பற்றிய முக்கியமான ஒரு புரிதலும் இதில் தரப்பட்டிருக்கிறது. “ஒரு முறை மீட்கப்பட்டவர், எப்போதுமே மீட்கப்பட்டவர்” எனும் சிந்தனை தவறு என புரியவைக்கப்படுகிறது. அதே போல, இறைவனோடு நடக்கும் போது நாம் மீட்கப்பட்டோமா எனும் சந்தேகமே தேவையில்லை, இறைவன் நம்மை மீட்டுக்கொண்டுவிட்டார் என்பதே உண்மை என்பதும் விளக்கப்படுகிறது.
அடையாளக் கிறிஸ்தவர்களாக இல்லாமல் ஆழமான கிறிஸ்தவர்களாக இருக்கவேண்டும் என்பது எபிரேயர் நூலின் மைய இழை எனக் கொள்ளலாம். பயணத்தைத் தொடங்குவது மட்டுமல்ல, நன்றாக முடிப்பதும் மிக முக்கியம். எபிரேயர்கள் எகிப்திலிருந்து புறப்பட்டது முடிவல்ல, வாக்களிக்கப்பட்ட தேசத்தை வந்தடைவதே லட்சியத்தின் நிறைவு. அப்படியே விசுவாசமும், என்பது விளக்கப்படுகிறது.
பயணத்தின் தொடக்கத்தில் பெற்றுக்கொண்ட மீட்பை நாம் இழந்து விடாமல் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். இழந்து போன பின் மீண்டெடுக்கும் வாய்ப்பு தரப்படாமலேயே போகலாம். இறைவன் நமக்கென முன்குறித்து வைத்த வாழ்க்கையானது நமது அர்ப்பணிப்பு இல்லாமல் கிடைக்காது. நம் பாவங்கள் மன்னிக்கப்படுவது மட்டுமல்ல, நாம் புனித வாழ்க்கை வாழ்வதும் விண்ணக வாழ்வுக்கு மிக முக்கியம். இவையெல்லாம் எபிரேயர் நூல் நமக்கு விளக்குகின்ற மிக முக்கியமான இறையியல் சிந்தனைகள்.
புதிய ஏற்பாட்டின் நிழலே பழைய ஏற்பாடு எனும் மிகப்பெரிய சிந்தனை, ஒட்டு மொத்த பைபிளையும் நாம் புரிந்து கொள்ளத் தரப்பட்ட சாவி.
விசுவாசத்தைக் குறித்த மிக அற்புதமான சிந்தனைகளும், பழைய ஏற்பாட்டைக் குறித்த தெளிவான ஒப்பீடுகளும், இயேசுவைப் பற்றி விளக்குகின்ற பகுதிகளும் இந்த நூலை மிக முக்கியமான நூலாக மாற்றியிருக்கின்றன. இந்த நூலை ஐந்தாவது நற்செய்தி என அழைப்பவர்களும் உண்டு.
- சேவியர்
Related Tags :
Next Story