பஞ்சபாண்டவர்கள் வழிபட்ட பழமண்ணிபடிக்கரை நாதர்


பஞ்சபாண்டவர்கள் வழிபட்ட பழமண்ணிபடிக்கரை நாதர்
x
தினத்தந்தி 25 Feb 2020 10:45 AM GMT (Updated: 25 Feb 2020 10:45 AM GMT)

‘சிவனேன்னு இரு’ என்று சிலர் சொல்வதை இன்றளவும் கேட்கலாம். அவர்கள் சொல்லும் சிவனே என்பதை ‘சும்மாயிருப்பது’ என்றே பலரும் எடுத்துக்கொள்வர். ஆனால் அது உண்மையல்ல.

தேவார திருத்தலங்களில் ஒன்றானதும், சிவனார் ஆலகால விஷத்தை பருகியபோது உமையம்மை சிவனாரின் கழுத்தை தன் கரங்களால் அழுத்தி விஷத்தை தொண்டையிலேயே நிற்கச் செய்ததும், வனவாசத்தின் போது வழிபட்ட பஞ்சபாண்டவர்களுக்கு சிவன் தரிசனம் தந்ததும், ஒரே தலத்தில் ஐந்து வெவ்வேறு பெயர்களுடன் கூடிய சிவமூர்த்தங்களைக் கொண்டதுமான சிறப்புகளைப் பெற்றது, நாகப்பட்டினம் மாவட்டம் இலுப்பைப்பட்டு மங்களநாயகி சமேத நீலகண்டேசுவரர் திருக்கோவில்.

‘சிவனேன்னு இரு’ என்று சிலர் சொல்வதை இன்றளவும் கேட்கலாம். அவர்கள் சொல்லும் சிவனே என்பதை ‘சும்மாயிருப்பது’ என்றே பலரும் எடுத்துக்கொள்வர். ஆனால் அது உண்மையல்ல. சிவன், அதாவது அந்த ‘பரமசிவனை நினைத்தவாறு’ என்பதே அதற்கான சரியான பொருள். சதாநேரமும் அந்த சதாசிவனை சிந்தையுள் நிரப்பி வாழ்வோருக்கு இன்னல்களுக்கு இடமில்லை. அப்படியே இன்னலை எதிர்கொள்ள நேரிட்டாலும் பாதிப்பை ஏற்படுத்தாது.

அதேசமயம் சிவனார் பாதம் பணிவது என்பதும் அத்தனை சுலபமல்ல. அதற்கும் அவரருள் வேண்டும் என்கிறார் மாணிக்கவாசகர். இதை உணர்ந்தவர்கள் உய்கிறார்கள். துன்பத்தால் கலங்கிய பஞ்ச பாண்டவர்களுக்கு ஒரு சித்திரை பவுர்ணமி நாளில் காட்சியளித்து அவர்களை அரவணைத்தவர்தான் பழமண்ணி படிக்கரை நாதர். நாகப்பட்டினம் மாவட்டம் மணல்மேடு அருகே இலுப்பைப்பட்டு என்ற ஊரில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது.

தலவரலாறு

அமுதத்தை பெற விரும்பி தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலை கடைந்தனர். அதுசமயம் முதலில் ஆலகால விஷம் வெளிப்பட, இருதரப்பினரும் அஞ்சி பின்வாங்கியதுடன் தங்கள் முயற்சியையும் கைவிட முனைந்தனர். அவர்களுக்கு ஏற்பட்ட பயத்தைப் போக்க விரும்பிய சிவபெருமான், அந்த விஷத்தை தன் கைகளால் எடுத்து பருகினார். பதறிப்போன உமையம்மை சிவனாரின் கழுத்தை தன் கரங்களால் அழுத்தி அவ்விஷத்தை தொண்டையிலேயே நிற்கச் செய்தார். விஷத்தைத் தாங்கிய அவரது கழுத்துப் பகுதி நீலநிறமாக இருந்தமையால், அவருக்கு ‘நீலகண்டன்’ என்ற பெயர் ஏற்பட்டது.

அந்த வரலாற்றின் அடிப்படையில் எழுப்பப்பட்ட இவ்வாலயம் பிற்காலத்தில் வந்த மன்னர்களால் வளர்த்தெடுக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டது. கல்வெட்டில் இவ்வூரின் பெயர் ‘விருதராச பயங்கர வளநாட்டு ராஜராஜ வளநாட்டு திருப்படிக்கரை’ என்று குறிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தில் விஜயநகரவேந்தர் வீரபூபதி உடையார், வீரப்பிரதாப கிருஷ்ணதேவ மகராயர் காலத்திய கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. வீரபூபதி உடையார் கல்வெட்டில் (கி.பி. 1408), இறைவனின் பெயர் ‘திருநீலக்கண்டம் உடைய நாயனார்’ என்று பொறிக்கப்பட்டுள்ளது.

பண்டைய சோழவள நாட்டில் மண்ணியாற்றின் படிக்கரையில் இத்தலம் அமைந்திருந்ததால், ‘பழமண்ணிபடிக்கரை’ என்றானது. காலப்போக்கில், மண்ணியாறு இவ்வாலயத்தைச் சிதைத்து விடாமல் இருக்க அதன் வழியை ஆலயத்தின் தென்புறத்திற்கு மாற்றி அமைத்து விட்டனர்.

இரண்டு விநாயகர் சன்னிதிகள், ஐந்து சுவாமி சன்னிதிகள், இரண்டு அம்பாள் சன்னிதிகள், மூன்று தீர்த்தங்களைக் கொண்டது இக்கோவில். ஈசனுக்கு நீலகண்டேசுவரர், படிக்கரைநாதர், மகதீசுவரர், பரமேசுவரர், முத்தீசுவரர் ஆகிய சன்னிதிகள் உள்ளன. அம்பாளுக்கு அமுதகரவள்ளி மற்றும் மங்களநாயகி சன்னிதிகள் காணப்படுகின்றன. தலவிருட்சம் தெய்வவிருப்பை எனப்படும் இலுப்பை மரம். தீர்த்தம் - பிரம்ம தீர்த்தம், அமிர்த தீர்த்தம் மற்றும் வடகாவிரி எனப்படும் கொள்ளிடம் ஆகியவையாகும்.

இத்தல இறைவனை இந்திரன், சனி, பாண்டவர்கள், உரோமச முனிவர், அருணகிரிநாதர், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். வனவாசத்தில் இருந்த பாண்டவர்கள் சிவபூஜை செய்ய விரும்பி சிவலிங்கத்தைத் தேடினர். எங்கு தேடியும் கிடைக்காமல் போக உரோமச முனிவரின் வழிகாட்டலில் ஒரு இலுப்பை மரத்தின் கீழ் அமர்ந்து இலுப்பைக் காயில் விளக்கேற்றி, தங்கள் சிரமத்தை குறைத்தருளும்படி வழிபட்டு வந்தனர். அவர்கள் வேண்டுதலுக்கிணங்க, பாண்டவர்கள் ஐந்து பேருக்கு இறைவன் தனித்தனியாக காட்சி தந்தார்.ஆலய அமைப்பு

மூன்றுநிலை ராஜகோபுரத்துடன், மூன்று பிரகாரங்களுடன் ஆலயத்திற்குள் ஆலயமாக (இரண்டு கோவில்கள்), கிழக்கு நோக்கி இவ்வாலயம் அமைந்துள்ளது. கோபுரத்தின் நேர் எதிரில் 500 மீட்டர் தொலைவில் ஸ்ரீவிஜயகணபதியின் சிறு ஆலயமும், அதன் பின்னால் பிரம்ம தீர்த்தமும் இடம்பெற்றுள்ளது. உள்பிரகாரத்தில் இடதுபுறம் மதில்சுவரில் சந்திரனும், மடப்பள்ளி அருகில் தலவிருட்சமான இலுப்பையும், விநாயகரும் காட்சி தருகின்றனர்.

தெற்கு பிரகாரத்தில் பீமன் பூஜித்த மகதீசுவரர் சன்னிதியும், நகுலன் பூஜித்த பரமேசுவரர் சன்னிதியும், தென்கிழக்கு மூலையில் திரவுபதி பூஜித்த வலம்புரி விநாயகர் சன்னிதியும், மேற்கு பிரகாரத்தில் கிழக்கு பார்த்தவாறு அமுதகரவள்ளி அம்பாள் சன்னிதியும், அவரது சன்னிதியின் இடதுபுறத்தில் வள்ளி தெய்வானை உடனுறை முருகப்பெருமானும், அடுத்து மகாலட்சுமி சன்னிதியும் அமைந்துள்ளது. அமுதகரவள்ளி அம்பாள் சன்னிதி சுவாமி சன்னிதியின் பின்புறம் இடம்பெற்றுள்ளது. வடகிழக்கு மூலையில் யாகசாலை மண்டபமும், தொடர்ந்து மதில் சுவரில் பைரவர், சூரியன், சனி ஆகிய மூவரையும் உள்ளடக்கிய சன்னிதியும் அமைந்துள்ளது.

பிரகாரத்தில் இருந்து ஐந்து அடி உயரத்தில் ஆலயத்தின் எஞ்சிய பகுதிகள் இடம்பெற்றுள்ளன. அதற்கான படிகள் வழியேச் செல்ல நேரெதிரில் தருமனால் பூஜிக்கப்பட்டவரும், ஆலகால விஷத்தை உண்டவருமான நீலகண்டேசுவரர் காட்சி தருகிறார். மூலவர் சன்னிதிக்கு இடதுபுறத்தில் ஆலயகிணறு அமைந்துள்ளது. அதனையொட்டி சகாதேவன் பூஜித்த முக்தீசுவரர் சன்னிதி தென்முகமாக இருக்கிறது. சாஸ்திரம், ஜோதிடம் கற்பவர்கள் இவரை வழிபட்டால் நலம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இந்த சன்னிதிக்கு முன்புறம் உள்ள மற்றொரு சிறிய சிவாலயத்தில் அர்ச்சுனன் பூஜித்த படிக்கரைநாதர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அவருக்கு நேரெதிரில் பலிபீடமும் நந்தியும் உள்ளன. சுவாமியின் இடது புறத்தில் மங்களநாயகி அம்பாள் தென்முகம் நோக்கியவாறு அருள்பாலிக்கிறார். படிக்கரைநாதர் சன்னிதி கோட்டத்தில் நடனவிநாயகர், தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், துர்க்கை ஆகியோரும், தனி சன்னிதியில் சண்டிகேசுவரரும் வீற்றிருக்கின்றனர். படிக்கரைநாதர் சன்னிதிக்கு வடபுறத்தில் சுப்பிரமணியர் சன்னிதி மண்டபத்துடன் அமைந்துள்ளது. அருணகிரியாரால் பாடப்பெற்ற முருகப்பெருமான் இவர்.

இத்தலத்தில் வேண்டிக்கொண்டால் சனியின் ஆதிக்கம் குறையும், பணியில் சிறப்பிடம் பெறலாம் என்ற நம்பிக்கை நிலவுகிறது. சித்திரை பவுர்ணமியில் 10 நாட்கள் பிரமோற்சவம் நடக்கிறது. சிவராத்திரி, நவராத்திரி, நடராஜர் அபிஷேகங்கள், சஷ்டி, திருக்கார்த்திகை முதலான உற்சவங்கள் நடைபெறுகின்றன. தினசரி நான்குகால பூஜைகள் நடைபெறும் இவ்வாலயம், தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அமைவிடம்

வைத்தீசுவரன்கோவில் - திருப்பனந்தாள் பேருந்து மார்க்கத்தில் மணல்மேட்டில் இருந்து வடக்கில் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது. சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம் ஆகிய ஊர்களில் இருந்து நேரடி பேருந்துகள் உள்ளன. ஆலயத்திற்குச் செல்ல பேருந்து நிலையத்தில் இருந்து ஆட்டோ வசதி உள்ளது.

- நெய்வாசல் நெடுஞ்செழியன்


Next Story