வாழ்வை வளமாக்கும் தோஷ நிவர்த்தி பரிகாரங்கள்


வாழ்வை வளமாக்கும் தோஷ நிவர்த்தி பரிகாரங்கள்
x
தினத்தந்தி 25 Feb 2020 11:42 AM GMT (Updated: 25 Feb 2020 11:42 AM GMT)

காலச் சக்கரத்தின் பிடியில் சிக்கிச் சுழலும் ஒவ்வொரு மனிதனும், அந்த வாழ்க்கையின் பிடியில் இருந்து வெற்றி பெற வேண்டும் என்றே நினைப்பார்கள். அப்படி வெற்றி பெற, சாஸ்திரத்தில் சில வழிபாட்டு பூஜை முறைகள் செய்துவைக்கப்பட்டுள்ளன.

முழுமையான ஆர்வம் மற்றும் ஈடுபாட்டுடன் வழிபாட்டு முறைகளை கையாண்டால், பரிபூரண பலன் கிடைக்கும். அந்த வகையில் அன்றாட வாழ்வில் ஏராளமானவர்கள் சந்திக்கும் முக்கிய தோஷங்களும், அதற்கான பரிகாரங்களும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தினால் விரைவில் தீர்வு கிடைக்கும்.

திருஷ்டி தோஷம்

‘கண் திருஷ்டி’ என்பது பொறாமை, கெட்ட எண்ணங்களின் தொடர்ச்சியான தாக்குதலால் ஏற்படும். ஒருவரின் சுப அதிர்வலைகளானது, அசுப உணர்வு, தீய எண்ணம் கொண்டவர்களின் பார்வை பலத்தால் அசுப அதிர்வாக மாற்றப்பட்டுவிடும். அதனால் ஏற்படும் பாதிப்பு சிலருக்கு சிறியதாகவும், பலருக்கு தொடர்ச்சியான பின் விளைவுகளையும் தரும். திருஷ்டி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தில் தொடர்ந்து பிரச்சினைகள், தடைகள், சோகம், பிரிவு, நஷ்டம், கைப்பொருள் இழப்பு, வரவுக்கு மீறிய செலவு போன்றவை இருந்து கொண்டே இருக்கும்.

பரிகாரம்

* உப்பு சுற்றி போடுவது நல்ல பலன் தரும்.

* கற்பூரங்களை தலையைச் சுற்றி வீட்டு வாசலில் ஏற்றலாம்.

* தேங்காயில் கற்பூரம் ஏற்றி தோஷம் இருப்பவர்களின் தலையை சுற்றி, ஊர் எல்லையில் இருக்கும் பிள்ளையார் கோவிலில் விடலை போட வேண்டும்.

* திருஷ்டி தோஷம் மிகுதியாக இருந்தால் மகாகணபதி, மகா சுதர்சன ஹோமம் செய்தால் நல்ல பலன் தெரியும்.

குலதெய்வ சாபமும் தோஷமும்

பூர்வீக இடத்தில் வசிக்க முடியாமல் போவது, பூர்வீக சொத்துக்களை அனுபவிக்க முடியாமல் இருப்பது, பூர்வீகத்தில் அவமானங்கள், சங்கடங்களை சந்திப்பது, பரம்பரை பரம்பரையாக தொடரும் வியாதி, கடன் போன்றவை இந்த தோஷத்தால் ஏற்படும்.

பரிகாரம்

* தினமும் வீட்டில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

* குலதெய்வத்திற்கு விசேஷ அபிஷேக, ஆராதனை செய்து வழிபட வேண்டும்.

* பராமரிப்பு இல்லாத கோவில்களுக்கு திருப்பணி நடத்த வேண்டும்.

குடும்ப தோஷம்

அதிகாலையிலேயே குடும்ப உறுப்பினர்களிடையே சண்டை, கருத்து வேறுபாடு, மன உளைச்சல், தூக்கமின்மை, பொருளாதார இழப்பு, பணப் பற்றாக்குறை போன்றவை இருக்கும்.

பரிகாரம்

* வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் குத்துவிளக்கு ஏற்றி மகாலட்சுமி வழிபாடு, பூஜை நடத்த வேண்டும்.

* வளர்பிறை ஏகாதசியன்று கிருஷ்ணன் கோவிலுக்கு சென்று, அவல் பாயசம் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும்.

* வெள்ளிக்கிழமை காலை 6-7 மணிக்குள், லலிதா சஹஸ்ஹர நாமப் பாராயணம், குங்கும அர்ச்சனை செய்ய மாற்றமும் ஏற்றமும் உண்டு.

பூமி தோஷம்

பூமியின் அதிர்வலைகளில் உள்ள தோஷமே பூமி தோஷமாகும். பல தலைமுறையாக முன்னேற்றமின்மை சொந்த பூமியை பல தலைமுறையாக பயன்படுத்தவும் விற்கவும் முடியாமல் தவிப்பது. வாங்கிய நிலத்தில் வீடு கட்ட முடியாத நிலை. வீடு கட்டும் பொழுது தொடர் அசம்பாவிதம் ஏற்படுவது. பாதி கட்டிய நிலையில் வீட்டு வேலை நின்று விடுவது. இல்லத்தில் துர்ஷ்ட சக்திகள் இருப்பது போன்ற உணர்வு. நீங்காத நோய், தலைமுறையாக தொடர் நோய். வாஸ்து குற்றம் உள்ள வீட்டில் குடியிருக்கும் நிலை, பூமியில் நீராதாரம் இல்லாமல் போவது. கட்டிய வீடு தலைமுறைகளைக் கடந்தும் அடமானத்திலேயே இருப்பது போன்ற குறைபாடுகள் இதனால் தோன்றும்.

பரிகாரம்

* காலி மனையாக இருந்தால் பூமியின் அதிர்வலைகளை மாற்றக் கூடிய பூமி பூஜை செய்யலாம்.

* கட்டிய வீடு கட்டிடமாக இருந்தால், வாஸ்து சாந்தி ஹோமம் நிகழ்த்தலாம்.

* செவ்வாய்க்கிழமை சிவப்பு நிற ஆடை அணிந்து விரதமிருந்து முருகனை வழிபாடு செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

* துர்க்கை கவசம் படிக்க வேண்டும்.

* செவ்வாய், சனி கிரக சம்பந்தம் இருப்பவர்கள், லட்சுமி நரசிம்மரை வழிபட வேண்டும்.

* காலை, மாலை நேரங்களில் வீடு, அலுவலகத்தில் விஷ்ணு சகஸ்ஹர நாமம், காயத்ரி மந்திரம், சாந்தி மந்திரம், திருக்கோளறு பதிக பாராயணம் ஒலிக்கச் செய்ய வேண்டும்.

* சென்னை அருகில் உள்ள சிறுவாபுரி முருகனை வழிபட வேண்டும்.

புத்திர தோஷம்

புத்திர பாக்கியம் கிடைப்பதில் தடை, குழந்தைகளுக்கு ஆரோக்கிய குறைவு மற்றும் குழந்தைகளால் மன வருத்தம் ஏற்படுவது போன்றவை இந்த தோஷத்தால் உண்டாகும்.

பரிகாரம்

* முறையான குலதெய்வ வழிபாடு, பித்ருக்கள் பூஜை நல்ல பலன் தரும்.

* சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகரை, கணபதி ஹோமம் செய்து வழிபடலாம்.

* பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் என்னும் மும்மூர்த்திகளின் சொரூபம் அரச மரம். அந்த மரத்தை வணங்குவதால் பாவமும், நோய்களும் நீங்கும்.

* குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் காலை வேளையில் நீராடிவிட்டு அரச மரத்தை வலம் வந்தால், அந்த மரத்திலிருந்து வெளியாகும் பிராண வாயுவின் சக்தியால் கர்ப்பக் கோளாறுகள் நீங்கி குழந்தை பாக்கியம் ஏற்படும். அதேபோல ஆண்களும் வலம் வந்தால், அவர்களுக்கு சுக்ல விருத்தி அதிகமாகும்.

களத்திர தோஷம்

திருமணத் தடை, திருமணத்திற்கு பிறகு கணவன் - மனைவி கருத்து வேறுபாடு, ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம், மன நிறைவு இல்லாத மண வாழ்க்கை போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

பரிகாரம்

* சூரியன், ராகு-கேது சேர்க்கையால் திருமணத் தடையை சந்திப்பவர்கள், ஸ்ரீ காளகஸ்தி சென்று காளகஸ்தீஸ் வரரையும், ஞானப் பூங்கோதை தாயாரையும் வழிபட வேண்டும்.

* சூரியன், சனி சேர்க்கையால் திருமணத்திற்கு முன்-பின் பிரச்சினை இருந்தால் சனிக்கிழமைகளில் திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்தால் நலம் உண்டாகும்.

* சுக்ரன், கேது சேர்க்கை இருப்பவர்கள், சுமங்கலிப் பெண்களுக்கு மங்கலப் பொருட்களான வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், பூ, மஞ்சள், குங்குமம் கொடுத்து ஆசி பெற வேண்டும்.

* செவ்வாய், கேது சேர்க்கை இருப்பவர்கள் அரச மரத்தடியில் இருக்கும் சர்ப்ப சிலைகளை செவ்வாய்க்கிழமை வழிபட வேண்டும்.

* சனி, ராகு-கேது சம்பந்தம் இருந்தால், ராகு கால வேளையில் பிரத்யங்கரா தேவியை வழிபட பலன் கிடைக்கும்.

ஜீவன தோஷம்

தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றமின்மை, அலுவலகத்தில் சக உழியர்களிடம் கருத்து வேறுபாடு, தொழிலாளிகள் பிரச்சினை, தொடர் பண இழப்பு, தொழில் நட்டம் ஏற்படும்.

பரிகாரம்

* சனிக்குரிய பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரம் வரும் நாட்களில், அன்னதானம், வஸ்திர தானம், நல்லெண்ணெய் தானம், இரும்புச் சட்டி தானம் செய்வது சிறப்பு.

* பிரதோஷ தினத்தில் சிவனுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபடலாம்.

* சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றி வணங்கலாம்

* பார்வையற்றோர், மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள், முதியோர்கள், தொழிலாளிகள், துப்புரவு தொழிலாளிகள் போன்றவர்களுக்கு செய்யும் உதவி நல்ல பலன் தரும்.

கால தோஷம்

பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கையில் எந்த ஏற்றமும் இல்லாமல், அனைத்து பலன்களும் காலம் தாழ்த்தியோ அல்லது அனுபவிக்க முடியாமலே போவது போன்ற பலன்கள் இருக்கும்.

பரிகாரம்

* வீட்டில் தினமும் தீபம் ஏற்ற வேண்டும்.

* சனிக்கிழமை தில ஹோமம் நடத்த வேண்டும்.

* வருடம் ஒரு முறை மஹா சுதர்சன நவக்கிரக ஹோமம் செய்ய வேண்டும்.

* கால பைரவரை வழிபட வேண்டும்.

* அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் காலை, மாலை இருவேளையும் சாம்பிராணி பொடியுடன், கருவேலம்பட்டை பொடி, வெண் கடுகுத்தூள் ஆகியவற்றை கலந்து வீட்டில் புகை காட்ட நற் சக்திகளின் ஆதிக்கம் அதிகரிக்கும்.

சர்ப்ப தோஷம்

திருமணத் தடை, குழந்தை பாக்கியமின்மை, குழந்தைகளுக்கு படிப்பில் கவனக்குறைவு, காதல் கலப்பு திருமணம் நிகழ்வது, அடிக்கடி விபத்து கண்டங்களை சந்திப்பது, எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாதவன் போல் வாழ்வது போன்ற பிரச்சினைகள் இருக்கும்.

பரிகாரம்

* தினமும் ராகு வேளையில் துர்க்கை, காளி, பிரத்யங்கரா தேவி வழிபாடு சிறப்பான பலன் தரும்.

* வளரும் புற்றிற்கு சென்று வழிபாடு செய்தல்

* பஞ்சமி திதியில் கருட வழிபாடு

* சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை வழிபடலாம்.

* ஆகாச கருடன் என்று ஒரு வகை கிழங்கு உள்ளது. அதை வாங்கி மஞ்சள், சந்தனம், குங்குமம் வைத்து கருப்பு கம்பளி கயிற்றில் கட்டி, வீட்டின் வாசலில் தொங்க விட வேண்டும்.

- பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி

Next Story