குழந்தை வரம் தரும் குள்ள முத்து மாரியம்மன்


குழந்தை வரம் தரும் குள்ள முத்து மாரியம்மன்
x
தினத்தந்தி 25 Feb 2020 12:03 PM GMT (Updated: 25 Feb 2020 12:03 PM GMT)

கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள மருதூர் என்ற பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ளது ராஜேந்திரம். இந்த ஊர், கருப்பஞ்சோலைகளும், வாழைத் தோப்புகளும் நிறைந்த அழகிய கிராமம்.

ஊரின் நடுவே ஊர் மக்களைக் காக்கும் தெய்வமாய், கிராமத்தின் காவல் தெய்வமாய் கோவில் கொண்டு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள் அன்னை குள்ள முத்து மாரியம்மன்.

இது அழகிய ஆலயம். முகப்பைத் தாண்டியதும் மகாமண்டபம் உள்ளது. அடுத்துள்ள கருவறையில் அன்னை கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். இந்த ஆலயத்தில் உள்ள அன்னை ஆரம்ப காலத்தில் ‘மகா மாரியம்மன்’ என்றே அழைக்கப்பட்டு வந்திருக்கிறார்.

17 ஆண்டுகளுக்கு முன் இந்த ஆலயத்தின் குடமுழுக்கு நடைபெற்றது. அதற்காக அன்னையின் விமான கலசத்திற்கு மெருகேற்றினர். அப்போது அந்த கலசத்தில் பொரிக்கப்பட்டிருந்த பெயர், பக்தர்கள் அனைவரையும் கவர்ந்தது. அதில் ‘குள்ள முத்து மாரியம்மன்’ என்று இருந்தது. அன்று முதல் இத்தல அன்னையை அனைவரும் ‘குள்ள முத்து மாரியம்மன்’ என்றே அழைக்கத் தொடங்கினர். அதுவே அன்னையின் நிரந்தர திருநாமமாக மாறிப்போனது.

தினசரி ஒரு கால பூஜை நடக்கும் இந்த ஆலயம், பலநூறு ஆண்டுகளுக்கு முன் உருவானதாக பக்தர்கள் கூறுகின்றனர்.அன்னைக்கு வைகாசி மாதம் நடக்கும் திருவிழா மிகவும் பிரசித்தம். அருகே உள்ள காவிரியில் இருந்து பால் குடம், அலகு காவடி, பால் காவடி, கரகம், அக்னி சட்டி ஏந்தி சுமார் 500 பேர் அன்னையின் ஆலயம் வந்து அவைகளை அன்னையின் பாதங்களில் சமர்ப்பித்து வேண்டுதல்களை நிறைவேற்றுவர். சுற்றிலும் உள்ள கிராம மக்கள் ஆயிரக்கணக்கில் அன்று ஆலயம் முன் கூட ஆலயம் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும்.

ஆடிப் பூரத்தன்று அன்னையின் முன் மகாமண்டபத்தில் கணபதி ஹோமம், துர்க்கை ஹோமம், நவக்கிரக ஹோமம் ஆகியவை பலநூறு பக்தர்கள் சூழ நடைபெறும்.

குழந்தை வரம் வேண்டியும், விரைந்து திருமணம் நடக்க வேண்டியும், பிணி நீங்கி விரைவில் குணமாக வேண்டியும் வேண்டும் பக்தர்களின் கோரிக்கைகளை கனிவோடு நிறைவேற்றி தருகிறாள் அன்னை. பயன் பெற்றோர் அன்னைக்கு புடவை வாங்கி சாத்தியும், குத்துவிளக்கு வாங்கி சன்னிதியில் வைத்தும் தங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

அம்மை நோய் கண்ட பலர் அம்மன் ஆலயத்திலேயே தங்கி, அம்மன் தீர்த்தத்தைப் பருகி குணமானதும் இல்லம் திரும்புவது இங்கு வழக்கமாக காணும் காட்சி. இந்த ஆலயம் தினமும் காலை 9 மணி முதல் 10 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

தன்னை நாடும் பக்தர்கள் நலன் பல பெற்று வாழ அன்னை குள்ள முத்து மாரியம்மன் அருள்புரிவது கண்கூடான உண்மையே!

- மல்லிகா சுந்தர்

Next Story