முப்பெரும் தேவியராக அருளும் செட்டிக்குளங்கரா தேவி
கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், மாவேலிக்கரா வட்டத்தில் இருக்கிறது, செட்டிக்குளங்கரா என்ற இடம்.
கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், மாவேலிக்கரா வட்டத்தில் இருக்கிறது, செட்டிக்குளங்கரா என்ற இடம். இங்கு பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் அன்னையானவர், தினந் தோறும் மூன்று வேளைகளில் மூன்று ரூபங்களில் காட்சி தருகிறார். இந்த ஆலயத்தின் வரலாற்ைறப் பார்க்கலாம்.
தல வரலாறு
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, செட்டிக்குளங்கரா ஊர்ப் பெரியவர்கள் சிலர், அருகிலுள்ள கொய்பள்ளிகராஷ்மா பகவதி கோவிலில் நடைபெற்ற ஆண்டு விழாவைக் காணச் சென்றனர். அப்போது அங்கிருந்த கோவில் நிர்வாகிகளும், ஊர்க்காரர்கள் சிலரும் சேர்ந்து, அவர்களைக் கேலி செய்து அவமானப்படுத்தினர். அதனால் மனவருத்தமடைந்த அவர்கள், அங்கிருந்து செட்டிக்குளங்கராவிற்கு உடனடியாகத் திரும்பினர்.
தங்களை அவமானப்படுத்தியவர்களுடன் சண்டை போடாமல், தங்களது ஊரிலும் ஒரு பகவதி கோவிலைக் கட்டி வழி படுவது என்று முடிவு செய்தனர். அதன் பின்னர், கோவிலைக் கட்டுவதற்காக, அந்த ஊரில் முதன்மையாக இருக்கும் ஐந்து குடும்பத் தலைவர்களின் தலைமையில் கோவில் கட்டுமானக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த ஐந்து தலைவர்களும் கோவில் கட்டுவதற்கு முன்பாகக் கொடுங்கலூர் சென்று பகவதியை வழிபட்டு வருவது என்று முடிவு செய்து கிளம்பினர்.
கொடுங்கலூர் சென்ற அவர்கள், அங்கு 12 நாட்கள் வரை தங்கியிருந்து இறைவியான பகவதியைப் பஜனைப் பாடல்கள் பாடி வழிபட்டு வந்தனர். பன்னிரண்டாம் நாள் இரவில் அவர்களது கனவில் தோன்றிய தேவி, தான் விரைவில் செட்டிக்குளங்கரா வந்து கோவில் கொள்வதாகத் தெரிவித்தார். மறுநாள் கோவில் வெளிச்சப்பாடு (அர்ச்சகர்) தந்த புனித வாளைப் பெற்றுக் கொண்டு ஊர் திரும்பிய அவர்கள், கோவில் கட்டுவதற்கான பணியைத் தொடங்கினர்.
சில நாட்களுக்குப் பின்னர், கரிப்புழா ஆற்றில் படகு செலுத்தும் ஒருவர், மாலை நேரத்தில் தனது பணியை முடித்து வீடு திரும்ப இருந்தார். அப்போது வயதான ஒரு பெண்மணி, தன்னை செட்டிக்குளங்கராவில் கொண்டு சேர்க்கும்படி வேண்டினார். படகுக்காரரும் வயதான பெண்மணிக்கு உதவும் எண்ணத்துடன் அவரை அழைத்துக் கொண்டு செட்டிக்குளங்கராவிற்குச் சென்றார். வழியில் அவர்கள் ஒரு மரத்தடியில் ஓய்வெடுத்தனர் (அந்த இடத்தில் தற்போது, புத்துசெரியம்பலம் கோவில் இருக்கிறது). அதிகாலையில் படகுக்காரர் எழுந்து பார்த்த போது, அந்த வயதான பெண்மணியைக் காணவில்லை. படகுக்காரர் செட்டிக்குளங்கராவுக்குச் சென்று, அங்கிருந்தவர்களிடம் தன்னுடன் வயதான பெண்மணி ஒருவர் வந்ததாகவும், அவர் மறைந்து போன தகவலையும் சொன்னார். அதனைக் கேட்ட ஊர்ப் பெரியவர்கள், தாங்கள் எதிர்பார்த்திருக்கும் தேவி செட்டிக்குளங்கரா வந்தடைந்ததை உணர்ந்தனர்.
அடுத்த நாள், தற்போது கோவில் இருக்கும் இடத்தில் அருகில் இருந்த ஒரு வீட்டில் மேற்கூரை பராமரிப்பு பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அந்த வீட்டைச் சேர்ந்த பெண், பணியாளர்கள் அனைவருக்கும் மதிய உணவு அளித்தார். அந்த தொழிலாளர்களுடன், வயதான பெண்மணி ஒருவரும் இருந்தார். உணவு சாப்பிட்டு முடித்த பின்பு, வயதான பெண்மணி அந்த வீட்டின் மேற்குப் பகுதிக்குச் சென்று ஒளியாக மாறி மறைந்தார். அதனைக் கண்ட உணவு பரிமாறியப் பெண் மயக்கமடைந்தார். பின்னர், தான் கண்ட காட்சியை அங்குள்ள மக்களிடம் கூறினாா்.
அன்று இரவு, கிராமத் தலைவர்களின் கனவில் தோன்றிய தேவி, தான் செட்டிக்குளங்கரா வந்தடைந்ததைத் தெரிவித்தாள். கிராமத் தலைவர்கள் ஜோதிடர்களை வரவழைத்து தங்கள் கனவைத் தெரிவித்தனர். அவர்களும், தேவி செட்டிக்குளங்கராவுக்கு வந்திருப்பதை உறுதி செய்தனர். அதன் பிறகு, கோவில் பணியை விரைந்து நிறைவு செய்ததாக இந்த ஆலயத்தின் தல வரலாறு சொல்லப்படுகிறது.
இந்தக் கோவில் கி.பி. 823-ம் ஆண்டில், மகரம் (தை) மாதத்தில் உத்திரட்டாதி நட்சத்திர நாளில் ஆதிசங்கரரின் முதன்மைச் சீடரான பத்மபாதாச்சாரியா என்பவரால் நிறுவப்பட்டது என்றும், இது முதலில் ஒரு குடும்பக் கோவிலாக இருந்தது என்றும், பிற்காலத்தில் அது அந்த கிராமத்திற்கான, அந்தப் பகுதிக்கான ஆலயமாக மாற்றம் அடைந்தது என்றும் சொல்கிறார்கள்.
ஆலய அமைப்பு
இந்த ஆலயத்தின் கருவறையில் முதன்மைத் தெய்வமாகப் பத்ரகாளி இருக்கிறாள். இந்த அன்னையை ‘செட்டிக்குளங்கரா பகவதி’ என்றும், ‘செட்டிக்குளங்கரா தேவி’ என்றும் அழைக்கின்றனர். கோவில் வளாகத்தில் யட்சினி, கணபதி, நாகராஜா, பாலகன், நாகயட்சி, தேவாரமூர்த்தி, கண்ணம்பள்ளி பகவதி, ரக்சாஸ், வல்லியச்சான் போன்ற துணைத் தெய்வங் களுக்கான சன்னிதிகளும் இருக்கின்றன.
இக்கோவிலில் இருக்கும் தேவி காலை வேளையில் சரஸ் வதியாகவும், மதிய வேளையில் மகாலட்சுமியாகவும், மாலை வேளையில் துர்க்கா தேவியாகவும் அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அருள்காட்சி தருகிறார்.
மலையாள நாட்காட்டியின்படி, மகரம் (தை) மாதம் மகாயிரம் (மிருகசீருடம்) நட்சத்திர நாளில் அம்மனை ஊர்வலமாக எடுத்துச் செல்லும் பறையெடுப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. கும்பம் (மாசி) மாதம் பரணி நட்சத்திர நாளில் நடை பெறும் கும்பாபரணி விழாவும் பிரசித்தி பெற்றது. இந்த விழாவின் போது, ‘குத்தியோட்டம்’ மற்றும் ‘கெட்டுக்கச்சா’ எனும் சிறப்பு நிகழ்வுகளும் நடத்தப்படுகின்றன.
கும்பாபரணியைத் தொடர்ந்து பத்தாம் நாள், ஆலயத்தின் ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. 13 நாட்கள் வரை நடைபெறும் இந்த விழாவில் கோவிலைச் சுற்றிலும் அமைந்திருக்கும் 13 பகுதியைச் சேர்ந்தவர்களால் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இந்நாட்களில் மாலை வேளைகளில், கேரள மரபு வழியிலான பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பெறுகின்றன. இதில் ‘தோட்டம்பாட்டு’ எனும் நிகழ்வு சிறப்பானதாக இருக்கும்.
அதே போல் மீனம் (பங்குனி) மாதம் அஸ்வதி நட்சத்திர நாளில், அஸ்வதி விழா நடத்தப்பெறுகிறது. இவ்விழாவின் போது செட்டிக்குளங்கரா தேவி, கொடுங்கலூரிலுள்ள தாயைப் பார்க்கச் செல்வதாக ஐதீகம். இதற்காக, கோவிலைச் சுற்றியுள்ள நான்கு பகுதி மக்களிடம் கொடுங்கலூர் செல்லத் தேவி அனுமதி கேட்பதாகவும், அதிகாலையில் அம்மன் மேற்கு நோக்கிச் செல்வதாகவும் நிகழ்வுகள் அமைகின்றன. அன்றைய நாளில் கோவில் மூடப்பட்டு மறுநாள் வழக்கம் போல் திறக்கப்படுகிறது.
இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், மாவேலிக்கரா வட்டத்தில் அமைந்திருக்கிறது, செட்டிக்குளங்கரா தேவி கோவில். மாவேலிக்கரா எனும் ஊரில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவிலும், காயங்குளம் எனும் ஊரில் இருந்து வடக்கே 7 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த ஊர் இருக்கிறது. இந்தக் கோவிலுக்குச் செல்ல மாவேலிக்கரா, காயங்குளம் ஆகிய இரு ஊர்களிலிருந்தும் பேருந்து வசதிகள் இருக்கின்றன.
தேனி மு.சுப்பிரமணி
Related Tags :
Next Story