ஆனந்தம் அருளும் திருதியை திதி


ஆனந்தம் அருளும் திருதியை திதி
x
தினத்தந்தி 21 April 2020 6:13 AM GMT (Updated: 21 April 2020 6:13 AM GMT)

சித்திரை மாத வளர்பிறையில் வரும் திருதியை திதியை, ‘அட்சய திருதியை’ என்று அழைக்கிறோம்.

திதிகள் பதினைந்தில், திருதியை திதி முக்கியமான ஒன்று. பவுர்ணமி அல்லது அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாவது திதியே, திருதியை. இந்த திருதியை திதியானது, சித்திரை மாதத்தில் அதிக முக்கியத்துவத்தைப் பெறுகிறது. ஏனெனில் சித்திரை மாத வளர்பிறையில் வரும் திருதியை திதியை, ‘அட்சய திருதியை’ என்று அழைக்கிறோம்.

‘சயம்’ என்றால் ‘தேய்தல்’ என்று பொருள். ‘அட்சயம்’ என்றால் ‘தேயாதது’, ‘வளர்தல்’ என்று பொருள் கொள்ளலாம். அதனால்தான் எல்லா நலன்களையும் குறைவில்லாது அள்ளிக் கொடுக்கும் இந்தத் திருதியை, ‘அட்சய திருதியை’ என்று பெயர் பெற்றது.

துரியோதனனின் சூழ்ச்சியால், பஞ்ச பாண்டவர்கள் வனவாசத்தை மேற்கொள்ள வேண்டிய சூழல் உண்டானது. வனத்தில் இருந்தபோது, ஆகாரத்துக்கு அவர்கள் கஷ்டப்படாமல் இருக்க கண்ணன் ஒரு ஏற்பாட்டைச் செய்தார். அதன்படி பாண்டவர்களுக்கு, சூரிய தேவனால் அட்சய பாத்திரம் ஒன்று வழங்கப்பட்டது. அந்த பாத்திரத்தில் இருந்து அவர்கள் விருப்பப்பட்ட உணவை, அள்ள அள்ள குறையாத வகையில் பெற்று அவர்கள் உண்டு வந்தனர். இந்த அட்சய பாத்திரம், பாண்டவர்களுக்கு ஒரு அட்சய திருதியை நாளில்தான் கிடைத்ததாம்.

சாபம் காரணமாக பிட்சாடனராக உருமாறிய சிவபெருமான், தன் கையில் ஒட்டிக்கொண்டிருந்த கபாலம் (பிரம்மனின் தலை ஓடு), நிரம்பும் அளவுக்கு, காசியில் அன்னபூரணியிடம் இருந்து பெற்றுக்கொண்டார். அதுவும் அட்சய திருதியை நாளில்தான்.

விரதம் இருக்கும் முறை

அட்சய திருதியை தினத்தில் அதிகாலை எழுந்து நீராடி, பூஜை அறையில் கோலமிட வேண்டும். லட்சுமி நாராயணன், சிவசக்தி, அன்னபூரணி, குபேரன் படங்கள் வைத்து, சந்தனம், குங்குமம் இட்டு மாலையிட வேண்டும். அந்தப் படங்களின் முன்பு குத்துவிளக்கு, காமாட்சி விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். பூஜை அறையில் போடப்பட்ட கோலத்தின் மீது பலகை வைத்து, அதன் மீதும் கோலம் போட வேண்டும். ஒரு சொம்பில் அரிசி, மஞ்சள், நாணயம், சிறிய நகைகளை போட வேண்டும். பின்னர் அந்த சொம்பில் நீர் நிரப்பி, அதற்கு சந்தனம், குங்குமம் இட வேண்டும். பின்னர் சொம்பின் மேல் தேங்காய் வைத்து, அதைச் சுற்றிலும் மாவிலையை வைத்து கலசமாக தயார் செய்து பலகையில் வைக்க வேண்டும்.

பிறகு கும்பத்தின் முன்பு வாழை இலையில் அரிசியை பரப்பி, அதன் மீது விளக்கு ஏற்றிவைக்க வேண்டும். அதன் அருகில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து, அதற்கு குங்குமம் இட்டு பூ போட வேண்டும். மேலும் பொன் மற்றும் புதியதாக வாங்கிய பொருட்களை கலசத்திற்கு அருகில் வைத்து தீபாராதனை காட்டி வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதால் அளவற்ற பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அட்சய திருதியை நாளில் குலதெய்வ வழிபாடு செய்வதும் முக்கியமானது. தயிர் சாதம் தானம் செய்தால் ஆயுள் கூடும். இனிப்பு பொருள் தானம் செய்தால் திருமணத் தடை  நீங்கும். உணவு தானியம் அளித்தால் அகால மரணத்தைத் தடுக்கலாம். கால்நடைகளை தானமாக வழங்கினால், வாழ்வு வளம் பெறும். மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்தால், பாவ விமோசனம் கிடைக்கும். ஏழைகளுக்கு தயிர்சாதம் தருவது, 11 தலைமுறைக்கு குறையில்லா அன்பை கிடைக்கச் செய்யும்.

அட்சய திருதியை நாளில், ஏழை, எளியவர்களுக்கு அன்னதானம் செய்வது, நல்ல காரியங்களுக்கு உதவுவது, எந்த வகையிலாவது பிறருக்கு உறுதுணையாக இருப்பது போன்ற செயல்களால் புண்ணியம் சேரும். நற்பண்புகள் நிறைந்த மனைவி அமையவும், நல்ல வரன் கிடைக்கவும், இந்த விரதம் சிறப்பானது.

Next Story
  • chat