42 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்டு லண்டனில் மீட்கப்பட்ட 3 சாமி சிலைகள் அனந்தமங்கலம் கோவிலில் ஒப்படைப்பு - வருகிற 25-ந் தேதி பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு


42 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்டு லண்டனில் மீட்கப்பட்ட 3 சாமி சிலைகள் அனந்தமங்கலம் கோவிலில் ஒப்படைப்பு - வருகிற 25-ந் தேதி பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு
x
தினத்தந்தி 22 Nov 2020 5:30 AM GMT (Updated: 22 Nov 2020 5:30 AM GMT)

42 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்டு, லண்டனில் இருந்து மீட்கப்பட்ட 3 சாமி சிலைகள் அனந்தமங்கலம் கோவிலில் ஒப்படைக்கப்பட்டன. அந்த சிலைகளை வருகிற 25-ந் தேதி(புதன்கிழமை) கோவிலில் முறைப்படி பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொறையாறு, 

நாகை மாவட்டம் பொறையாறு அருகே அனந்தமங்கலம் கிராமத்தில் ராஜகோபாலசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்து 42 ஆண்டுகளுக்கு முன்பு(1978) வெண்கலத்தால் ஆன ராமர், சீதை, லட்சுமணர் மற்றும் ஆஞ்சநேயர் ஆகிய சாமி சிலைகள் திருடப்பட்டன. இதுதொடர்பாக அப்போதைய கோவில் நிர்வாக அதிகாரி செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் பொறையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்தனர்.

ஆனால் திருடப்பட்ட சிலைகளை மீட்க முடியவில்லை. திருடப்பட்ட சிலைகள் லண்டனுக்கு கடத்தி செல்லப்பட்டது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதில் ராமர், லட்சுமணர் ஆகிய சிலைகள் தலா 30 கிலோ எடையும், சீதை சிலை 25 கிலோ எடையும், ஆஞ்சநேயர் சிலை 15 கிலோ எடையும் கொண்டதாகும்.

சிங்கப்பூரில் இயங்கி வரும் இந்தியா பிரைடு(பெருமை மிக்க இந்தியா) என்ற தன்னார்வ நிறுவனத்தின் தலைவர் விஜயகுமார் என்பவரின் பெரும் முயற்சியால் ராமர், சீதை, லட்சுமணர் ஆகிய 3 சிலைகள் 42 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் லண்டனில் மீட்கப்பட்டன.

அந்த சிலைகளை லண்டன் நகர போலீசார் செப்டம்பர் மாதம் 15-ந் தேதி லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து சிலைகளை இந்தியாவுக்கு கொண்டு சென்று அனந்தமங்கலத்தில் உள்ள கோவிலில் ஒப்படைப்பதற்கான அதிகாரப்பூர்வ ஏற்பாடுகள் நடந்து வந்தன.

பல்வேறு நடைமுறைகளுக்கு பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி கொண்டு வரப்பட்ட சிலைகளை மத்திய அரசு, தமிழக அரசிடம் ஓப்படைத்தது. நேற்று முன்தினம் சென்னையில் அந்த சிலைகளை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். அப்போது சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. அதன் பின்னர் சிலைகளை அனந்தமங்கலம் கோவில் நிர்வாக அதிகாரி சங்கரேஸ்வரியிடம், முதல்-அமைச்சர் ஒப்படைத்தார். இதையடுத்து 3 சிலைகளும் அன்று இரவு தஞ்சை மாவட்டம் திருநாகேஸ்வரத்தில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அங்கிருந்து சிலைகளை இந்து சமய அறநிலையத்துறையின் மயிலாடுதுறை இணை ஆணையர் செல்வராஜ், கும்பகோணம் உதவி ஆணையர் இளையராஜா, சிலைகள் பாதுகாப்பு மைய உதவி ஆணையர் நித்யா, நாகப்பட்டினம் உதவி ஆணையர் மற்றும் கோவில் தக்கார் ராணி, அனந்தமங்கலம் கோவில் நிர்வாக அதிகாரி சங்கரேஸ்வரி உள்ளிட்டோர் நேற்று அனந்தமங்கலத்துக்கு கொண்டு வந்தனர்.

அனந்தமங்கலம் ஊர் எல்லையில் கிராம மக்கள், சாமி சிலைகளுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு சிலைகள், வாகனத்தில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இதையொட்டி பொறையாறு போலீசார் மற்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஊர்வல முடிவில் 3 சிலைகளும் கோவிலில் ஒப்படைக்கப்பட்டன. தற்போது சிலைகள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் சன்னதியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. வருகிற 25-ந் தேதி(புதன்கிழமை) சிலைகள் அனைத்தையும் கோவிலில் முறையாக பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றும், அதன் பின்னர் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Next Story