ஈசனுக்கு கண் கொடுத்த கண்ணப்பர்


ஈசனுக்கு கண் கொடுத்த கண்ணப்பர்
x
தினத்தந்தி 21 Jan 2021 11:00 PM GMT (Updated: 20 Jan 2021 7:41 PM GMT)

அகிலத்தையே காத்து அருளும் சிவபெருமானுக்கே, தன்னுடைய கண்ணை தானமாகக் கொடுத்தவர் இவர்.

திண்ணன் என்ற இயற்பெயர் இருந்தாலும், கண்ணப்பர் என்ற பெயர்தான் அவரின் அடையாளமாக மாறிப் போனது. ஏனெனில் அகிலத்தையே காத்து அருளும் சிவபெருமானுக்கே, தன்னுடைய கண்ணை தானமாகக் கொடுத்தவர் இவர். கண்களை தானமாகக் கொடுத்ததாலேயே, ‘கண்ணப்பர்’ என்ற பெயரைப் பெற்றார். ஈசனின் மீது கொண் டிருந்த ஒப்பற்ற அன்பின் வாயிலாக நாயனார் பதவியையும் பெற்றவர்.

வேடர் குலத்தைச் சேர்ந்தவர் நாகனார். திருக் காளத்தி எனப்படும் மலைப் பகுதியைச் சேர்ந்த வேடர்களின் தலைவராக இருந்தார். இவரது மகன்தான் திண்ணன். வாலிப வயதை எட்டிய திண்ணன் வேட்டையாடுவதில் வல்லவராக இருந்தார். ஒருநாள் திருக்காளத்தி மலைக்கு வேட்டையாடுவதற்காகச் சென்ற திண்ணன், மலையின் ஒரு பகுதியில் சிவலிங்கம் ஒன்று இருப்பதைக் கண்டார். அதைக் கண்டதும் திண்ணனுக்கு அன்பு மிகுந்தது. பக்தியோடு அந்த சிவலிங்கத்தை ஆரத்தழுவி இன்புற்றார்.

பின்னர் லிங்க உருவில் இருந்த ஈசனுக்கு உணவு படைக்க வேண்டும் என்ற எண்ணம் திண்ணனுக்கு ஏற்பட்டது. உடனடியாக தான் வேட்டையாடி வைத்திருந்த பன்றியை, தீயில் வாட்டி அதன் இறைச்சியை கையில் எடுத்துக் கொண்டார். கையில் இறைச்சி இருந்ததால், இறைவனை நீராட்டுவதற்கான நீரை வாயில் பருகி வைத்துக் கொண்டார். அர்ச்சிப்பதற்காக பூவை தன் தலையில் வைத்துக் கொண்டு சிவலிங்கம் இருந்த இடத்திற்குச் சென்றார்.

சிவலிங்கத்தின் மேல் இருந்த சருகுகளை எல்லாம் தன்னுடைய காலால் தள்ளி அகற்றினார். பின்னர் வாயில் இருந்த நீரைக்கொண்டு சிவலிங்கத்தை நீராட்டினார். தலையில் இருந்த பூக்களை லிங்கத்தின் தலையில் சூட்டி, இறைச்சியை நைவேத்தியமாக படைத்தார். மாலை மறைந்து இருள் சூழ்ந்ததும், கொடிய விலங்குகள் வரும் என நினைத்து வில்லுடன் நின்று காவல் காத்தார்.

மறுநாள் பொழுது புலர்ந்ததும், மீண்டும் இறைவனுக்கு அமுது படைக்க வேண்டும் என்பதற்காக, இறைச்சியைத் தேடி காட்டிற்குள் சென்றார். அந்த நேரம் பார்த்து தினமும் காளத்திநாதருக்கு பூஜை செய்யும் அர்ச்சகர் அங்கு வந்தார். சிவலிங்கத்தின் முன்பாக இறைச்சித் துண்டுகளும், எலும்பும் கிடைப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மன வருத்தத்துடன் தான் கொண்டு வந்திருந்த நீரைக் கொண்டு சிவலிங்கத்தை சுற்றிலும் சுத்தம் செய்தார். இறைவனுக்கு அபிஷேகம் செய்து மலர் மாலை சூட்டி விட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

காட்டுக்குள் சென்ற திண்ணன் அங்கு விலங்குகளை வேட்டையாடி, அதன் இறைச்சியை சமைத்து அதில் தேனை பிழிந்து எடுத்துக் கொண்டு வந்து, இறைவனுக்கு படைத்து பூஜை செய்தார். மறுநாள் காலை வந்தபோதும் இறைச்சிகள் இருப்பதைக் கண்டு அர்ச்சகர் மனம் நொந்து போனார். பின்னர் சுத்தம் செய்து பூஜித்தவர், இறைச்சியை இறைவனுக்கு படைத்து தீயச் செயலைச் செய்தவர்கள் கழுவேற்றப்பட வேண்டும் என்று வேண்டினார்.

அன்றைய தினம் இரவு அர்ச்சகர் கனவில் தோன்றினார், சிவபெருமான். “நாளை என் இருப்பிடம் வரும் நீ, அங்கு மறைவாக இருந்து கவனி. என்னை ஒருவன் எவ்வளவு பக்தியோடு வழிபடுகிறான் என்பதை நீ அறிவாய்” என்றார்.

அதன்படி அர்ச்சகர் அங்கு வந்து மறைந்திருந்தார். திண்ணன் வழக்கம்போல் காட்டுக்குள் சென்று வேட்டையாடிய ஊனமுது சகிதம் வந்து இறைவனுக்கு படைத்து வழிபட்டார். அப்போது திண்ணனின் பக்தியை உலகம் அறியச் செய்ய நினைத்த சிவபெருமான், லிங்கத்தின் வலது கண் பகுதியில் இருந்து ரத்தத்தை கசிய விட்டார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த திண்ணன், ரத்தத்தை துணியால் துடைத்தும் அது வழிந்துகொண்டே இருந்தது. சிவபெருமானைக் கட்டிப் பிடித்துக் கொண்டு கதறி அழுதார். காட்டிற்குள் ஓடிச் சென்று பச்சிலை பறித்து வந்து, அதன் சாறு பிழிந்து கண்களில் ஊற்றினார். எதுவும் பலன் தரவில்லை.

‘ஊனுக்கு ஊன் மருந்து’ என்ற மருத்துவ முறையை கையாள நினைத்தார், திண்ணன். அதன்படி தன்னுடைய வலது கண்ணை அம்பு கொண்டு பறித்து சிவலிங்கத்திற்கு வைத்தார். உடனடியாக ரத்தம் வழிவது நின்றது. திண்ணன் நிம்மதி அடைவதற்குள் இடது கண்ணில் இருந்தும் ரத்தம் கசிந்தது. சற்றும் யோசிக்காத திண்ணன், தன்னுடைய வலது கால் பெருவிரலை லிங்கத்தின் இடது கண் பகுதியில் அடையாளமாக வைத்துக் கொண்டு, தன்னுடைய மற்றொரு கண்ணையும் அம்பு கொண்டு பறிக்க முயன்றார்.

அப்போது “கண்ணப்ப நிற்க” என்று இறைவன் அசரீரியாக குரல் கொடுத்தார். பின்னர் அவரை தன் கருணையால் ஆட்கொண்டார். இதையெல்லாம் மறைந்திருந்து பார்த்த அர்ச்சகர் நெஞ்சம் நெகிழ்ந்தார். இறைவனே “கண்ணப்ப” என்று அழைத்ததால், ‘கண்ணப்பர்’ என்ற பெயரே திண்ணனுக்கு நிலைத்துப் போனது.

Next Story