காமத்தால் அவமானப்பட்ட ஜெயத்ரதன்


காமத்தால் அவமானப்பட்ட ஜெயத்ரதன்
x
தினத்தந்தி 25 May 2021 4:41 PM GMT (Updated: 25 May 2021 4:41 PM GMT)

கவுரவர்களுடனான சூதாட்டத்தில், அனைத்தையும் இழந்து வனவாசத்தை மேற்கொண்டனர் பாண்டவர்கள். அவர்கள் வசித்த வனம், நாட்டில் இருந்து காடு தொடங்கிய 10 மைல் தொலைவில் அமைந்திருந்தது.

அங்கு ஒரு குகையில் பாண்டவர்கள் தங்கியிருந்தனர். அன்று பாண்டவர்கள் ஐவரும் உணவு தேடி வனத்திற்குள் சென்றிருந்தனர். திரவுபதி மட்டும் தனியாக இருந்தாள். அப்போது குகையின் முன்பாக ஒரு தேர் வந்துநின்றது. அதில் இறங்கியவன், ஜெயத்ரதன். அவன் சிந்து தேசத்து மன்னன்.

காந்தாரிக்கு 100 ஆண் பிள்ளைகள் பிறந்தனர். அவர்களோடு ஒரே ஒரு பெண் பிள்ளையும் பிறந்தது. அவளுடைய பெயர் துஷ்ஷலா. கவுரவர்களின் அந்த ஒரே தங்கையை மணந்தவன்தான், இந்த ஜெயத்ரதன். வந்தவர்களை ‘வா என்று’ அழைப்பதே பண்பாடு. எனவே ஜெயத்ரதனை, அழைத்து இருக்கை கொடுத்து, உண்பதற்கு பழமும், பருக நீரும் கொடுத்தாள். ஆனாலும் திரவுபதியின் மனதில் ‘இவன் எதற்காக வந்திருக்கிறான்?’ என்ற யோசனை ஓடியது. ‘ஒரு வேளை கவுரவர்களின் செயல் தனக்கு வருத்தம் அளிக்கிறது என்று சொல்லி, அனுதாபமும், ஆதரவும் தெரிவிக்க வந்திருப்பானோ’ என்று நினைத்தாள்.

பின் யோசனையை கைவிட்டு, “சற்று பொறுத்திருங்கள். என் கணவர்கள் இப்போது வந்துவிடுவார்கள்” என்றாள்.

“அவர்கள் வராமலேயே போகட்டும். நான் வந்தது உனக்காகத்தான்” என்று கூறிய ஜெயத்ரதனின் கண்கள், காமத்தை வெளிப்படுத்தின.

தன்னுடைய தேரில் இருந்து ஒரு பெட்டியை இறக்கி கீழே வைத்தவன், அதைத் திறந்தான். அதற்குள் நிறைய ஆபரணங்களும், ஆடைகளும், வாசனை திரவியங்களும் இருந்தன. அதைக் காட்டி, “இவையெல்லாம் உனக்குத்தான். நீ என்னுடன் சிந்து தேசம் வந்தால், இன்னும் நிறையத் தருவேன்” என்றான்.

அவன் வந்ததற்கான அர்த்தம் புரிந்த திரவுபதி, “நான் இந்திரபிரஸ்தத்தின் அரசி. பாண்டவர்களின் மனைவி. நீ இப்படி பேசியது என் கணவர்களுக்குத் தெரிந்தால், நீ உயிருடன் இருக்க மாட்டாய்” என்றாள் கோபம் கொப்பளிக்க.

சட்டென்று திரவுபதியின் கூந்தலை இறுகப் பற்றிய ஜெயத்ரதன், “நீ எந்த தேசத்திற்கும் அரசியல்ல. அனைத்தையும் இழந்து போன பிச்சைக்காரி. ஐந்து பேருடன் வாழும் பரத்தை. நீ என்னுடைய அரண்மனையில், என் ஆசை நாயகியாக வசதியாக வாழலாம்” என்று கூறிய படியே, தரதரவென்று இழுத்துச் சென்று தன்னுடைய தேரில் ஏற்றினான்.

இந்த செய்கையை அங்கு தவம் செய்து கொண்டிருந்த சில முனிவர்கள் கண்டு, அர்ச்சுனனிடமும், பீமனிடமும் கூறினர். அவர்கள் தேரை தொடர்ந்து போனார்கள். சற்று நேரத்தில் ஜெயத்ரதன் பிடிபட்டு விட்டான். அவனது தேர் சக்கரங்களை, அர்ச்சுனன் அம்பு வீசி உடைத்தான். பீமன், ஜெயத்ரதன் மீது பாய்ந்து அவனை தாக்கினான். இன்னும் கொஞ்சம் தாக்கினாலும், அவன் இறந்து போயிருப்பான். அதற்குள் யுதிஷ்டிரர் வந்து, “பீமா.. இவன் நம்முடைய ஒரே சகோதரியின் கணவன். இவன் செய்த தவறுக்காக, அவள் விதவையாக வேண்டாம்” என்று கூறி தடுத்துவிட்டார்.

யுதிஷ்டிரர் சொல்வது சரி என்பதாக, மற்ற சகோதரர்களும், திரவுபதியும் உணர்ந்தனர். அவர்களுக்குள் கோபமும், அவனை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணமும் இருந்தாலும், அப்போதைக்கு ஜெயத்ரதனை மன்னித்து விட்டனர். ஆனால் பீமனால், ஜெயத்ரதனை அப்படியே விட முடியவில்லை. அவன், ஜெயத்ரதனின் தலையில் ஐந்து கொத்து முடிகளை மட்டும் விட்டுவிட்டு, மற்ற முடிகளை எல்லாம் பிடுங்கி எறிந்தான். அந்த ஐந்து கொத்து முடிகளும், பாண்டவர்களை ஜெயத்ரதனுக்கு நினைவுபடுத்த வேண்டும் என்பதற்காகவே பீமன் அவ்வாறு செய்தான்.

இந்த அவமானத்திற்கு பாண்டவர்களை பழி வாங்க காத்துக் கொண்டிருந்தான், ஜெயத்ரதன். அதற்காக குருச்சேத்திரப் போரை பயன்படுத்திக் கொண்டான். குருச்சேத்திரப் போரின் 13-வது நாளில், சக்கர வியூகத்திற்குள் மாட்டிக்கொண்டான், அர்ச்சுனனின் மகன் அபிமன்யு. அர்ச்சுனன் அந்த சமயத்தில் யுத்தகளத்தின் வேறு திசையில் இருந்ததால், பாண்டவர்களில் மற்ற நால்வரும், அபிமன்யுவை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்கள் அனைவரையும், தான் பெற்றிருந்த வரத்தின் பயனாக முன்னேற விடாமல் தடுத்துநிறுத்தி விட்டான், ஜெயத்ரதன். இதனால் அபிமன்யு, கவுரவர்களால் கொல்லப்பட்டான்.

இதையறிந்த அர்ச்சுனன், அடுத்த நாள் போரில், சூரியன் மறைவதற்குள் ஜெயத்ரதனை கொல்வதாகவும், அப்படி செய்யாவிட்டால் தீயில் புகுந்து இறப்பதாகவும் சபதம் செய்தான்.

இதை பயன்படுத்தி அர்ச்சுனனை தீப்புக வைக்க துரியோதனன் முடிவு செய்தான். இதற்காக அடுத்த நாள் போரில் ஈடுபடாமல், ஜெயத்ரதனை போர்க்களத்திலேயே ஒளித்து வைத்தான். சூரியன் மறையும் நேரம் நெருங்கிவிட்டது. ஜெயத்ரதனைக் காணாமல் பாண்டவர்கள் கலங்கிப் போயினர். அப்போது கிருஷ்ணர், தன்னுடைய சுதர்சன சக்கரத்தால் சூரியனை தற்காலிகமாக மறையச் செய்தார். உண்மையிலேயே சூரியன் மறைந்ததாக நினைத்த ஜெயத்ரதன், வெற்றிக் களிப்புடன் மறைவிடத்தில் இருந்து வெளிப்பட்டான். அவனைக் கண்டதும், கிருஷ்ணர் தன்னுடைய சுதர்சன சக்கரத்தை விலக்கிக்கொண்டார். இப்போது மீண்டும் பகல் பொழுது நீண்டது.

ஜெயத்ரதன் வெளிப்பட்டு விட்டாலும், அவனைக் கொல்வதில் ஒரு சிக்கல் இருந்தது. அவனது தந்தை பெற்ற வரத்தின்படி, ஜெயத்ரதனின் தலையை யார் தரையில் தள்ளினாலும், அவர்களின் தலை சுக்கு நூறாக வெடித்து விடும். இதுபற்றி கிருஷ்ணர், அர்ச்சுனனுக்கு கூறினார். இதையடுத்து அர்ச்சுனன் விட்ட அம்பு ஒன்று, ஜெயத்ரதனின் தலையை கவ்விக் கொண்டு மேலே பறந்தது. அர்ச்சுனன் அடுத்தடுத்து மூன்று அம்புகளை செலுத்தி, அந்தத் தலையை ஊருக்கு வெளியே ஒரு யாக சாலையில் இருந்த ஜெயத்ரதனின் தந்தை மடியில் விழும்படி செய்தான். ‘என்னவோ தன் மடியில் விழுந்துவிட்டதே’ என்ற நினைப்பில், அதை உதறி தரையில் தள்ளினார், ஜெயத்ரதனின் தந்தை. அதனால் அவரது தலை வெடித்து சிதறியது.

Next Story