ஆன்மிகம்

தும்பை மலராக பிறந்த பெண் + "||" + The girl who was born as a tulip flower

தும்பை மலராக பிறந்த பெண்

தும்பை மலராக பிறந்த பெண்
ஒரு விலை மகள், தன்னுடைய தொழிலுக்கு என தர்மம் வைத்திருக்கிறாள். அவள் தினமும் காலையில் எழும்போது, அவளது வீட்டு வாசலில் அன்றைய நாளில் அவளுடன் இருப்பதற்கான அச்சாரம் வைக்கப்பட்டிருக்கும். அதை கையில் எடுப்பவள், “இந்த அச்சாரத்தை வைத்தவர், இன்று என் கணவர். அவர் என் வீட்டிற்கு வரலாம்” என்று சொல்லி விட்டு சென்று விடுவாள். அன்றைய பொழுது அவளுக்கு அந்த அச்சாரம் இட்டவனோடுதான்.
அவள் அந்த தர்மத்தில் இருந்து ஒருபோதும் விலகாமல் இருந்தாள். ஒரு நாள் காலையில் வயோதிகர் ஒருவர், பணத்தோடு வெற்றிலை பாக்கு வைத்து அந்த விலைமாதுவின் வீட்டு வாசலில் அச்சாரம் வைத்தார். வீட்டின் கதவை திறந்து வந்த அந்தப் பெண், அதை எடுத்துக் கொண்டு, “இன்று உங்களை என் கணவராக வரித்துக் கொண்டேன். இரவு வாருங்கள்” என்று அனுப்பிவிட்டாள்.

வயோதிகர் சென்று சிறிது நேரத்தில் அந்த தேசத்தின் மன்னன் அங்கு வந்தான். அவன் அந்தப் பெண்ணிடம், “பெண்ணே.. உன் மீது கொண்ட அளவுகடந்த காதலால் உன்னைத் தேடி வந்தேன்” என்றான்.

அதற்கு அவள், “இன்று இரவு ஒருவரை நான் கணவராக வரித்து விட்டேன். அதனால் நீங்கள் செல்லுங்கள்” என்று மறுத்துவிட்டாள்.

மன்னனோ, “நான் ஒரு மன்னன். என்னை ஏற்க மறுக்கிறாயா? உனக்கு பொன்னும் பொருளும் அள்ளித் தருகிறேன். ஒப்புக்கொள். இல்லையெனில் உனக்கு மரணம்தான் தண்டனை” என்றான்.

“அரசே.. நீங்கள் மன்னன் என்பதால் என்னுடைய தர்மத்தில் இருந்து நான் விலக முடியாது. உங்களுடைய பொன்னும், பொருளும் எனக்குத் தேவையில்லை. நான் ஒருவரை இன்றைய தினம் கணவராக வரித்துவிட்டேன். ஆகையால் நீங்கள் விலகிவிடுங்கள். இல்லை என்னை கொல்ல வேண்டுமானால் கொல்லுங்கள். அதனால் வரும் பாவம் உங்களைத்தான் சேருமே தவிர, எனக்கு ஒன்றும் இல்லை” என்றாள், அந்தப்பெண்.

என்ன செய்வதென்று தெரியாத மன்னன், அங்கிருந்து அகன்றுவிட்டான். அன்று இரவு முதியவர் வந்தார். வந்தவர் உடல் பாதிப்பு காரணமாக இரவு முழுவதும் வாந்தி எடுத்துக் கொண்டே இருந்தார். அந்தப் பெண்ணோ கொஞ்சமும் முகம் சுழிக்காமல், அவரது செயலை சகித்துக் கொண்டு, இடத்தை சுத்தப்படுத்தினாள். இரவு முழுவதும் இப்படியே கழிந்தது.

பொழுது விடியும் நேரத்தில் அந்தப் பெண்ணிடம் முதியவர் கேட்டார், “பெண்ணே.. நீ நினைத்தால் மன்னனோடு இன்றைய பொழுதை கழித்திருக்கலாம். ஆனால் என்னோடு இருந்து இந்த இரவை துன்பத்தோடு கழித்துவிட்டோமே என்ற கவலை உனக்கு இல்லையா?.”

அதற்கு அந்தப் பெண், “கணவனுக்கு பணிவிடை செய்வதில் கஷ்டம் என்ன இருக்கிறது. இன்று உங்களை என் கணவனாக வரித்தேன். அதில் இன்பம் இருந்தாலும், துன்பம் இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்வதே தர்மம்” என்றாள்.

அப்போது அங்கிருந்த முதியவர் மறைந்து அங்கே சிவபெருமான் தோன்றினார். “தர்மம் விலகாத உன்னுடைய நேர்மை என்னை மகிழ்விக்கிறது. உனக்கு வேண்டிய வரம் கேள்” என்றார்.

எல்லாரும் இறைவனின் திருப்பாதத்தில் இருக்கவே ஆசைப்படுவார்கள். அவளுக்கும் அதே ஆசைதான். ஆனால் இறைவனை நேரில் கண்ட பதற்றத்தில் “எப்போதும் என் காலடி உங்கள் தலையில் இருக்க வேண்டும்” என்று மாற்றி கேட்டுவிட்டாள். பின்னர் தான் செய்த தவறை உணர்ந்து, வரத்தை மாற்றித் தரும்படி கேட்டாள். ஆனால் இறைவனோ அவள் கேட்டபடி, அவளது பாதம் தன் தலையில் இருக்கும் வரத்தையே அளித்தார்.

அதன்படி அவள் அடுத்தப் பிறவியில் ‘தும்பை’ என்னும் மலராகப் பிறந்தாள். தும்பைப் பூவை உற்றுப்பார்த்தால் தெரியும். அதன் உள்ளே ஐந்து விரல்களும், பாதமும் போன்ற அமைப்பு இருக்கும். சிவபெருமானுக்கு விருப்பமான மலர்களில், தும்பைக்கும் முக்கிய இடம் உண்டு.