கேரள மக்களின் அறுவடைத் திருநாள்


கேரள மக்களின் அறுவடைத் திருநாள்
x
தினத்தந்தி 17 Aug 2021 5:03 PM GMT (Updated: 17 Aug 2021 5:03 PM GMT)

தமிழ்நாட்டில் சித்திரை போன்று, கேரள மாநிலத்தில் சிங்கம் மாதம் முதல் மாதமாகும். நமக்கு ஆவணி மாதம்தான், கேரளாவில் சிங்கம் மாதமாக உள்ளது.

இந்த மாதத்தில் கேரளாவில் நடைபெறும் மிக முக்கியமான கொண்டாட்டமாக ‘ஓணம் பண்டிகை’ இருக்கிறது. இதனை ‘அறுவடைத் திருநாள்’ என்றும் அழைப்பார்கள். பருவ மழைக்காலம் முடிந்து எங்கும் பசுமையும், செழுமையும் நிறைந்திருக்கும் மாதமாகவும், பயிரிட்டப் பொருட்களை அறுவடை செய்யும் மாதமாகவும் விளங்குவதால் இந்தப் பெயர் வந்தது.

ஓணம் பண்டிகை விழாவானது, மகாபலி சக்கரவர்த்தியுடன் தொடர்புடையது. இந்த மன்னன், நரசிம்மரின் ஆசி பெற்ற பிரகலாதனின் பேரன் ஆவார். மகாபலி சக்கரவர்த்தி, அதற்கு முந்தைய பிறவியில் ஒரு எலியாக பிறந்திருந்தார். சிவன் கோவில் ஒன்றில் அணைய இருந்த தீபத்தை, தன்னுடைய மூக்கால் தூண்டிவிட்டதன் பலனாக, அவருக்கு அடுத்த பிறவியில் இந்த சக்கரவர்த்தி பதவி கிடைத்தது. 

இருப்பினும் அவர் அசுர குலத்தில் பிறந்தார். அவர் ஆட்சி செய்த பகுதியே தற்போதைய கேரளம் என்று சொல்லப்படுகிறது. அவரது மக்கள் பணி சிறப்பாக இருந்த காரணத்தால், தேவர்களும் இவருக்கு அஞ்சினர். இந்த நிலையில் மகாபலி ஒரு யாகம் நடத்த முடிவு செய்தார். அது நிறைவேறினால், அவருக்கு யாராலும் அழிக்க முடியாத சக்தி கிடைத்துவிடும். அதனால் அசுர குலம் தழைக்க வாய்ப்பிருப்பதாக கருதிய தேவர்கள், அதை தடுத்து நிறுத்த மகாவிஷ்ணுவை வேண்டினர்.

மகாவிஷ்ணுவும் வாமனராக குள்ளமான அவதாரம் எடுத்துச் சென்று, மகாபலியிடம் மூன்றடி மண் தானமாகக் கேட்டார். அதற்கு மன்னன் சம்மதிக்கவே, உலகளந்த பெருமாளாக விஸ்வரூபம் கொண்டு, முதல் அடியால் மண்ணுலகையும், இரண்டாம் அடியால் விண்ணுலகையும் அளந்தார். ‘மூன்றாம் அடியை எங்கே வைப்பது?’ என்று மகாபலியிடம் கேட்க, அவரோ ‘தன் தலை மீது வையுங்கள்’ என்றார். இதையடுத்து மூன்றாவது அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலை மீது வைத்து, அவரை பாதாள லோகத்தில் தள்ளினார், பெருமாள்.

மகாபலி, ‘ஆண்டிற்கு ஒரு முறை தன்னுடைய மக்களை காண வருவதற்கு அனுமதி அளிக்க வேண்டும்’ என்று பெருமாளிடம் கோரிக்கை வைத்தார். அதற்கு பெருமாள் அனுமதியளித்தார். அதன்படி அவர் தன்னுடைய சொந்த மக்களை சந்திக்க வரும் அந்த நாளையே கேரள மக்கள் ‘ஓணம் பண்டிகை’யாக கொண்டாடுகிறார்கள். இந்த விழா 10 நாட்களாக நடைபெறும். 

மன்னனை வரவேற்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும் நிகழ்வாக முதல் 9 நாட்கள் இருக்கும். 10-ம் நாளில் மகாபலி சக்கரவர்த்தி போல் வேடமிட்டவர்கள், கேரள மாநிலம் முழுவதும் வலம் வருவார்கள். அவர்களிடம் மக்கள் ஆசி வாங்குவார்கள். சாதி, மத உணர்வுகளைக் கடந்து, கேரள மக்கள் அனைவரும் கொண்டாடும் நிகழ்வாக, ஓணம் பண்டிகை இருக்கிறது.

Next Story