அவ்வை பாடிய விநாயகர் அகவல்


அவ்வை பாடிய விநாயகர் அகவல்
x
தினத்தந்தி 7 Sep 2021 10:59 PM GMT (Updated: 7 Sep 2021 10:59 PM GMT)

சமயக்குரவர்கள் எனப்படும் நால்வரின் முக்கியமானவர், சுந்தரமூர்த்தி சுவாமிகள். இவர் சிவபெருமானின் உற்ற தோழனாகவும் இருந்தவர். இவருக்காக சிவபெருமானே வீதியில் இறங்கி நடந்து தூது சென்ற சம்பவங்கள் எல்லாம் நடந்திருக்கின்றன.

சுந்தரமூர்த்தி சுவாமிகள், தான் இந்த பூவுலகிற்கு வந்த நோக்கம் நிறைவேறியதை அடுத்து, கயிலாயம் செல்ல இறைவனால் பணிக்கப்பட்டார். அவரை ஏற்றிச் செல்வதற்காக, கயிலாயத்தில் இருந்து வெள்ளை யானை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதில் ஏறிய சுந்தரமூர்த்தி சுவாமிகள், கயிலாயம் புறப்பட்டார். அப்போது அங்கு இருந்த நாயன்மார்களில் ஒருவரான சேரமான் பெருமான், தானும் கயிலாயம் செல்ல வேண்டும் என்று மனம் உந்தினார். இதனால் தன்னுடைய குதிரை மீது ஏறி, அதன் காதில் பஞ்சாட்சர (நமசிவாய) மந்திரத்தை உச்சரித்தார். உடனே, அந்தக் குதிரை விண்ணில் பறக்கத் தொடங்கியது. இதையடுத்து தனது நண்பரான சுந்தரமூர்த்தி சுவாமிகளுடன் இணைந்து சேரமான் பெருமானும், திருக்கயிலாயம் நோக்கிச் சென்றார்.

அதனை அறிந்துகொண்ட அவ்வையார், தானும் சுந்தரமூர்த்தி சுவாமிகளோடு சேர்ந்து கயிலாயம் செல்ல நினைத்தார். இதற்காக அவர் அப்போது செய்து கொண்டிருந்த விநாயர் பூஜையை அவசரம் அவசரமாக செய்தார். அப்போது அங்கு தோன்றிய விநாயகர், “அவ்வையே.. நீ என்னுடைய பூஜையை எந்த அவசரமும் இன்றி செய். சுந்தரருக்கு முன்பாகவே உன்னைக் கொண்டு போய் கயிலாயத்தில் சேர்ப்பது என் பொறுப்பு” என்றார்.

இதையடுத்து அவ்வையார், ‘சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பலவிசை பாடப்..’ என்று தொடங்கும் விநாயகர் அகவலைப் பாடினார். 72 அடிகள் கொண்ட இந்தப் பாடலை பாடி முடித்து, விநாயகருக்கு உண்டான அனைத்து பூஜைகளையும் அவ்வையார் செய்து முடித்தார். அதன்பின்பு, தான் கொடுத்த வாக்குப்படி, விநாயகர் அவ்வையாரை தன்னுடைய துதிக்கையால் தூக்கி, கயிலாயத்தில் சேர்ப்பித்தார். அவர் சென்றடைந்த பிறகே, சுந்தரரும், சேரமான் பெருமானும் கயிலாயம் வந்து சேர்ந்தனர்.

அவ்வையார் பாடிய விநாயகர் அகவல், விநாயகரை வழிபடும் துதிப்பாடல்களில் முக்கியமானதாக விளங்குகிறது. இந்தப் பாடலில் விநாயகரின் பெருமையும், அழகும் அற்புதமாக விளக்கப்பட்டுள்ளது. இந்த அகவலைப் பாடி, விநாயகரை வழிபாடு செய்பவர்களுக்கு, வாழ்வில் சலக வளங்களும் கிடைக்கப்பெறும்.


Next Story