விழித்திருக்கும் பணியாளர்கள்


விழித்திருக்கும் பணியாளர்கள்
x
தினத்தந்தி 14 Sep 2021 11:43 AM GMT (Updated: 14 Sep 2021 11:43 AM GMT)

கீழ் இருக்கும் உவமையை யூதேயாவில் மக்களிடத்திலும், ஒலிவ மலையில் சீடரிடத்திலும் இயேசு கூறுகிறார்.

கீழ் இருக்கும் உவமையை யூதேயாவில் மக்களிடத்திலும், ஒலிவ மலையில் சீடரிடத்திலும் இயேசு கூறுகிறார்.

“உங்கள் இடையை வரிந்துகட்டிக் கொள்ளுங்கள். விளக்குகளும் எரிந்து கொண்டிருக்கட்டும். திருமண விருந்துக்குப் போயிருந்த தம் தலைவர் திரும்பி வந்து தட்டும்போது, உடனே அவருக்குக் கதவைத் திறக்கக் காத்திருக்கும் பணியாளருக்கு ஒப்பாய் இருங்கள். தலைவர் வந்து பார்க்கும்போது விழித்திருக்கும் பணியாளர்கள் பேறு பெற்றவர்கள். அவர் தம் இடையை வரிந்து கட்டிக்கொண்டு அவர்களைப் பந்தியில் அமரச் செய்து, அவர்களிடம் வந்து பணிவிடை செய்வார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தலைவர் இரவின் இரண்டாம் காவல் வேளையில் வந்தாலும், மூன்றாம் காவல் வேளையில் வந்தாலும் அவர்கள் விழிப்பாகஇருப்பதைக் காண்பாரானால் அவர்கள் பேறுபெற்றவர்கள்.

எந்த நேரத்தில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள். நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார்.”

அப்பொழுது பேதுரு, “ஆண்டவரே, நீர் சொல்லும் இந்த உவமை எங்களுக்கா? அல்லது எல்லாருக்குமா?” என்று கேட்டார். அதற்கு இயேசு கூறியது, “தம் ஊழியருக்கு வேளாவேளை படியளக்க தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான வீட்டுப்பொறுப்பாளர் யார்?, தலைவர் வந்து பார்க்கும் போது தம் பணியை செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறுபெற்றவர், அவரைத் தம் உடைமைக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உண்மையாக உங்களுக்குச் சொல்கிறேன். ஆனால் அதே பணியாள் தன் தலைவர் வரக் காலந்தாழ்த்துவார் எனத் தன் உள்ளத்தில் சொல்லிக்கொண்டு ஆண், பெண் பணியாளர்கள் அனைவரையும் அடிக்கவும், மயக்கமுற உண்ணவும் குடிக்கவும் தொடங்கினான் எனில், அப்பணியாள் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர் வந்து, அவனைக் கொடுமையாகத் தண்டித்து, நம்பிக்கைத் துரோகிகளுக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார்.

தன் தலைவரின் விருப்பத்தை அறிந்திருந்தும் ஆயத்தமின்றியும், அவர் விருப்பப்படி செயல் படாமலும் இருக்கும் பணியாள் நன்றாய் அடிபடுவான். ஆனால் அவர் விருப்பத்தை அறியாமல், அடிவாங்கவேண்டிய முறையில் செயல்படுபவன், அவரது விருப்பத்தை அறியாமல் செயல்படுவதால் சிறிதே அடிபடுவான். மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும். மிகுதியாக ஒப்படைக்கப்படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும்’’ என்றார்.

இயேசுவின் இரண்டாம் வருகையை இந்த உவமை விளக்குகிறது. இயேசுவின் இரண்டாம் வருகை முன்னரே அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால் இறை மக்கள் அதில் நாட்டம் கொண்டவர்களாய் நடந்து கொள்ளவில்லை என்பதையும், அப்படி நடந்து கொள்ளாதவர்களுக்கு எத்தகைய தீர்ப்பு வழங்கப்படும் என்பதையும் விளக்குகிறது. தகுந்த தயாரிப்புடன், இயேசுவின் இரண்டாம் வருகையை எதிர்பார்ப்பவர்களுக்கு இறுதிநாள் தீர்ப்பில் கரிசனமும், உரிய மரியாதையும் கிடைக்கும். அதுவே, தயாரிப்பின்றி இருப்பவர்களுக்கு வாதைகளும், அவஸ்தைகளுமே மிஞ்சும். அதேபோல, இயேசுவின் இரண்டாம் வருகை, யாரும் எதிர்பார்க்காத நேரத்திலே நிகழும் என உவமை வழியாக விளக்குகிறார்.

தலைவரின் விருப்பத்தை அறிந்தும், அதன்படி செயல்படாத முதன்மை பணியாளரை கொடுமையாக தண்டித்து, நம்பிக்கை துரோகிகள் இடத்தில் நிறுத்தப்படுவர், என்பதன் வாயிலாக மக்களை நல்வழிப்படுத்தக்கூடிய பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு வலுவான எச்சரிக்கை வழங்கப்பட்டிருக்கிறது.

Next Story