இறைவன் விரும்பும் வீடு


இறைவன் விரும்பும் வீடு
x
தினத்தந்தி 17 Sep 2021 12:18 PM GMT (Updated: 17 Sep 2021 12:18 PM GMT)

பாண்டவர்களும், கவுரவர்களும் ஒன்றாக இருந்த காலகட்டம் அது. தன் உறவுகள் கூடியிருந்த அஸ்தினாபுரத்திற்கு வருகை தந்திருந்தார், கிருஷ்ணன். அவரை நகரின் எல்லைக்கே சென்று அழைத்து வர வேண்டும் என்று பலரும் நினைத்தனர்.

அதனால் அஸ்தினாபுரத்தை நிறுவியவரான பீஷ்மர், பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் பல போர் பயிற்சிகளை வழங்கிய துரோணர், அவரது மகன் அஸ்வத்தாமன், கிருபர், விதுரர் என பெருந்தலைகள் பலரும் சென்று கண்ணனை வரவேற்று அழைத்துக் கொண்டு, ஊர்வலமாக வந்தனர். கிருஷ்ணரை வரவேற்பதற்காக வீதி நெடுகிலும் அலங்கார வளைவுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. மக்கள் அனைவரும் சாலையின் இருபுறமும் நின்று பூக்கள் தூவி வரவேற்றனர். பெண்கள் பலரும் கண்ணனுக்கு பூரணகும்ப மரியாதை செலுத்தினர். வரும் வழியிலேயே பீஷ்மர், கண்ணனிடம் “நீங்கள் தங்க ஏதுவான இடத்தை தேர்வு செய்து வைத்துள்ளோம். உங்களுக்கு விருப்பமான இடம் எது என்று சொன்னால் அதை தருவதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்'' என்றார். அப்போது கண்ணபிரான், தன் கண்ணுக்குத் தென்பட்ட ஒரு கட்டிடத்தை சுட்டிக்காட்டி “பச்சை வர்ணம் பூசப்பட்டு, பிரளய காலத்தில் நீரில் மிதந்து வரும் ஆல் இலை போல நிற்கிறதே. அது யாருடைய வீடு?” என்றார். “இறைவா. அது என்னுடைய வீடு” என்று துரோணரிடம் இருந்து பதில் வந்தது. கண்ணன் அடுத்ததாக ஒரு கட்டிடத்தை நோக்கி கைநீட்டி, “சிவப்பு நிறம் பூசப்பட்டு, செம்மாந்த கோலத்தோடு கம்பீரமாய் நிற்கும் இது யாருடைய வீடு?” என்று கேட்டார். இப்போது கிருபர் பதில் கூறினார். “மாதவா.. அது என்னுடைய வீடு”. கண்ணன் மறுபடியும் ஒரு கட்டிடத்தை நோக்கி, “மஞ்சள் வண்ணம் பூசப்பட்டு, மகாமேரு குன்று போல நிற்கும் இது யாருடைய வீடு?” என்றார்.

அஸ்தினாபுரத்தின் பிதாமகனான பீஷ்மர், “அச்சுதா.. அது என்னுடைய வீடு. அதில் நீங்கள் தாராளமாக தங்கிக்கொள்ளலாம்” என்றார்.அதையும் தாண்டிச் சென்ற கண்ணன், “நீல நிறத்தில் கடல் போன்று நீண்டு விரிந்து காட்சியளிக்கும் இது யாருடைய வீடு?” என்று கேட்டார்.அதற்கு துரோணரின் மகனான அஸ்வத்தாமன், “பரம்பொருளே, அது என்னுடைய வீடு” என்று பதிலளித்தான். கண்ணன் புன்னகையோடே மீண்டும் நடக்கத் தொடங்கினார். அப்போது அவர் கண்ணின் மற்றொரு கட்டிடம் தென்பட்டது. “சிறிய அளவில் வெள்ளை நிறத்தோடு, பாற்கடலைப் போலவும், கயிலையைப் போலவும் சாத்வீகம் பொருந்தி நிற்கும் இது யாருடைய வீடு?” என்றார். “அன்புக்குரிய கடவுளே.. அது உன்னுடைய வீடு” என்று விதுரரிடம் இருந்து பதில் வந்தது.

“என்னுடைய வீடா?.. அஸ்தினாபுரத்தில் எனக்கென்று அரையடி மண்கூட இல்லை என்று நினைத்தேன். இத்தனை பெரிய வீடு எனக்கு இருக்கிறபோது, நான் எதற்காக பீஷ்மர், கிருபர், துரோணர் போன்றோரது வீடுகளில் போய் தங்க வேண்டும். நான் என் வீட்டிற்குப் போகிறேன்” என்றபடி, விதுரரின் வீட்டிற்குள் நுழைந்தார் கண்ணன்.

‘நான்’, ‘என்னுடையது’ என்பதெல்லாம் அகந்தையின் உருவம். ‘எல்லாமே இறைவனுடையது’ என்பதே செருக்கை அழிக்கும் சக்தி படைத்தது. அந்த ஆணவத்தை அழிக்கும் மனதையே, இறைவன் எப்போதும் விரும்புகிறான். அந்த மனதிற்குள் குடிபுகவே அவன் நினைக்கிறான்.

Next Story