ஆன்மிகம்

ராமேஸ்வரம் ராமநாதர் + "||" + Rameswaram Ramanathar

ராமேஸ்வரம் ராமநாதர்

ராமேஸ்வரம் ராமநாதர்
ராமேஸ்வரம் ராமநாதர் கோவில், ராமாயண காலத்தோடு தொடர்புடையது என்பதை புராணங்கள் வாயிலாக நாம் அறிகிறோம். இந்த ஆலயத்தில் உள்ள சிவபெருமானை ராமபிரானும், சீதாதேவியும், அனுமனும் வழிபாடு செய்து அருள்பெற்றுள்ளனர்.
இந்த ஆலயம் பற்றிய சில தகவல்கள் இங்கே பார்ப்போம்..

ராமேஸ்வரம் கோவிலில் உள்ள அதிகார நந்தியானது, வாகனம், விக்கிரகம், உற்சவர் ஆகிய மூன்று சிறப்புகளையும் பெற்று இருப்பது வேறு கோவில்களில் இல்லாத சிறப்பு. அதிலும் இந்த நந்தி வாகனம் முழுவதும் தங்கத்தால் ஆனது. கோவிலின் முதல் பிரகாரத்தில் 144 விக்கிரகங்களும், இரண்டாம் பிரகாரத்தில் 17 விக்கிரகங்களும் பூஜைக்காக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இவை தவிர கோவிலில் உள்ள 381 விக்கிரகங்களுக்கும் நாள் தோறும் பூஜை நடத்தப்படுகிறது. நம் நாட்டில் புனிதத் தலங்களாக நான்கு தலங்கள் மட்டும் கருதப்படுகின்றன. அவற்றுள் ஒன்று ராம்நாத் என்ற ராமேஸ்வரம். எஞ்சிய மூன்று தலங்களும் வட நாட்டில் அமைந்து இருப்பன. அவை துவாரகநாத், பத்ரிநாத், கேதார்நாத். இவை மூன்றும் வைணவத் தலங்களாகும்.

இக்கோவிலுள்ள நந்தி வேலைபாடுமிக்க சுதையினாலான பெரிய உருவமுடையதாகும். இந்த நந்தி 23 அடி நீளம், 12 அடி அகலம், 17 அடி உயரம் கொண்டது.
தலம், தீர்த்தம், மூர்த்தி என்ற முப்பெரும் சிறப்புக்களைக் கொண்டது, ராமேஸ்வரம். இங்குள்ள ராமநாதர் கோவில், ராமபிரானால் வழிபடப்பட்ட பெருமையுடையது. காசி யாத்திரை சென்றவர்கள், ராமேஸ்வரத்திற்கு சென்று தனுஷ்கோடியில் தீர்த்தமாடி ராமேஸ்வர லிங்கத்தை வழிபட்டால் தான், காசி யாத்திரை முழுமை பெறும் என்பது ஐதீகம். இத்தலத்து கோவிலில் எழுந்தருளியுள்ள ராமநாதப் பெருமானுக்கு, நாள்தோறும் கங்கையில் இருந்து கொண்டுவரப்படும் தீர்த்தத்தால் அபிஷேகம் செய்யப்படுவது தனிச் சிறப்புடையது. ராமேஸ்வரம் கோவிலில் ஒரே சங்கினுள் அடுத்தடுத்து இரு சங்குகளைக் கொண்ட தெய்வீக திரிசங்கு உள்ளது. இது தவிர ராமநாதருக்கு அபிஷேகம் செய்வதற்காகவே இத்தலத்தில் பிரத்யேகமாக 1008 அபிஷேகச் சங்குகள் இருக்கின்றன. ராமேஸ்வரம் கோவிலில் முழுக்க, முழுக்க மூலிகைகளால் உருவாக்கப்பட்ட புதுமையான ஒரு லிங்கம் உள்ளது. இந்த லிங்கத்துக்கு `வைணலிங்கம்' என்று பெயர்.

ராமபிரான் சூரிய குலத்தைச் சேர்ந்தவர். அந்த குலத்தின் நேரடி வாரிசாக நேபாள மன்னர் குடும்பம் கருதப்படுகிறது. எனவே நேபாள மன்னர்களின் குல தெய்வமாக ராமேஸ்வரம் தலம் திகழ்கிறது. ராமேஸ்வரம் ஆலயத்துக்குள் பூஜை செய்யும் ஒவ்வொருவரும் சிருங்கேரி மகா சன்னிதானத்திடம் சிவாச்சாரிய தீட்சை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.