பிரம்ம சாஸ்தாவாக அருளும் முருகப்பெருமான்


பிரம்ம சாஸ்தாவாக அருளும் முருகப்பெருமான்
x
தினத்தந்தி 9 Nov 2021 2:02 PM GMT (Updated: 9 Nov 2021 2:02 PM GMT)

திருமாலும் காஞ்சிபுரம் வந்து ஏகாம்பரநாதரைப் பணிந்தார். பின்பு குமரக்கோட்டம் வந்த திருமால், தன்னுடைய மருமகன் முருகனுடன் ‘உருகும் உள்ளத்தான்’ என்றத் திரு நாமத்தில் தனிச் சன்னிதியில் எழுந்தருளினார்.

குமரக்கோட்டத்து குமரனை, கச்சியப்ப சிவாச்சாரியார் என்னும் அர்ச்சகர் பூஜித்து வந்தார். அவரது கனவில் தோன்றிய முருகப்பெருமான், “வடமொழியில் மிகவும் பிரசித்திப்பெற்ற கந்த புராணத்தின் ஆறு சங்கிதைகளுள் சங்கர சங்கிதையின் முதற்காண்டமாகிய சிவ ரகசியக் காண்டத்தில் உள்ள எமது வரலாற்றை கந்தபுராணம் என்ற பெயரில் பாடுவாயாக” என்று கூறினார். மேலும் ‘திகடச் சக்கரச் செம்முகம் ஐந்துளான்’ என முதல் அடியையும் எடுத்துக் கொடுத்தார் கந்தப்பெருமான்.

இதையடுத்து கச்சியப்ப சிவாச்சாரியார், கந்த புராணத்தை எழுதத் தொடங்கினார்.காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஆலயத்தில் உள்ள மாவடிக்குச் சென்று தினமும் 100 பாடல்களை எழுதுவார். பின்பு தினமும் இரவு, அன்று எழுதிய நூறு பாடல்களையும் குமரக்கோட்டம் முருகன் கருவறையில் வைத்து அடைத்து விடுவார். மறுநாள் அதிகாலை, முருகப்பெருமானின் கருவறையைத் திறக்கும்போது, அப்பாடல்களில் தவறுகள் இருந்தால் குமரக்கோட்டம் குமரனே திருத்தம் செய்திருப்பாராம். இப்படி 1 லட்சம் பாடல்கள் அடங்கிய கந்தபுராணத்தை இயற்றி முடித்தார்.

அதைத் தொடர்ந்து முருகப்பெருமானின் ஆணைப்படி ‘கந்த புராணம்’ குமரக்கோட்டத்தில் அரங்கேற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது அரங்கேற்றத்திற்கு வந்திருந்த தமிழ் புலவர்களுக்கு ஏற்பட்ட ஐயப்பாட்டை, முருகப்பெருமானே புலவர் வடிவில் வந்து போக்கினார். ‘கந்த புராணம்’ அரங்கேறிய மண்டபம் ஆலயத்தில் இருக்கிறது. இன்றும் அதனை நாம் கண்டு தொழலாம்.

படைப்புத் தொழிலை செய்கிறோம் என்ற ஆணவத்தில் இருந்தார், பிரம்மதேவர். அவரது செருக்கை அடக்க எண்ணிய முருகப்பெருமான், பிரம்மாவிடம், “படைப்புத் தொழிலுக்கு ஆதாரமான பிரணவ மந்திரமாம் ‘ஓம்’ என்பதன் பொருள் யாது?” என வினவினார். பொருள் அறியாமல் விழித்த பிரம்மதேவரை, சிறையில் அடைத்தார் முருகப்பெருமான். மேலும் பிரம்மாவின் படைப்புத் தொழிலையும் முருகப்பெருமானே மேற்கொள்ளத் தொடங்கினார். அவ்வாறு முருகப்பெருமான் படைப்புத் தொழிலை மேற்கொள்ளும் திருக்கோலத்தில் அருளும் திருத்தலமே குமரக்கோட்டம்.

இங்கு முருகப்பெருமான் படைப்புத் தொழிலை மேற்கொள்ளும் ‘பிரம்ம சாஸ்தா’ வடிவில் அருள்கிறார். முருகர் மான் தோலை இடுப்பிலும், தர்ப்பையால் ஆன அரைஞாண் கொடியும் அணிந்துள்ளார். கீழ் வலது திருக்கரத்தில் அபயம் வழங்கும் திருக்கோலம், மேல் வலது திருக்கரத்தில் ருத்திராட்ச மாலை, கீழ் இடக்கரத்தை தொடை மீது பொருத்தி, மேல் இடக்கரத்தில் கமண்டலத்துடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் முருகப்பெருமான், சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு தன் பக்தர்களுக்கு அருள்புரிகிறார். குமரக்கோட்டத்தில் முருகப்பெருமான், பிரம்ம சாஸ்தா கோலத்தில் படைப்புத் தொழிலை மேற்கொள்ளும் திருக்கோலத்தில் அருளுவதால், துன்பத்தில் இருப்பவர்கள் இத்தல முருகனை வழிபாடு செய்தால் வாழ்வில் மாற்றம் வரும்.

உற்சவர் முருகப்பெருமான், வள்ளி-தெய்வானையுடன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இத்தல பைரவரை அஷ்டமியிலும், முருகனுக்குரிய சஷ்டி, கிருத்திகை நாட்களிலும் வழிபட்டு வந்தால் பகை, பிணி விலகி சகலத்திலும் நன்மையே உண்டாகும். இத்தல முருகனுக்கு தினமும் தேன் அபிஷேகம் செய்யப்படுகிறது. இதனைக் கண்குளிர கண்டு தரிசித்தாலே சகல நற்பேறுகளும் கிட்டும். குமரக்கோட்டம் குமரனுக்கு தீபாவளியில் மட்டும் நல்லெண்ணெய் அபிஷேகம் செய்யப்படும். கந்த சஷ்டியில் ஆறு நாட்களும் விரதமிருந்து, சூரசம்ஹாரம் அன்று குமரனை 108 முறை வலம் வந்தால், நம் மனதில் எண்ணியவை எளிதாக ஈடேறும்.

மருமகனுடன் மாமன்

குமரக்கோட்டத்தில் ‘உருகும் உள்ளப் பெருமாள்’ என்ற திருநாமத்தில் தனிச்சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார் மகாவிஷ்ணு. ஒரு முறை பிரளயம் வந்து உலகமே அழிந்து போயிற்று. அப்போது பிரளய வெள்ளத்தில் மிதந்து வந்த மார்கண்டேயர் திருமாலிடம், ‘உலக உயிர்கள் அனைத்தும் என்னாயின?’ என வினவ, திருமாலோ ‘என் வயிற்றில் உள்ளன’ என உரைத்தார். இதை நம்பாத மார்கண்டேயர், காஞ்சிபுரம் வந்தார். அங்கு உலகம் அழிந்தாலும் அழியாத காஞ்சிபுரம் ஏகாம்பரநாதரை வணங்கி வாழ்வு பெற்றார். இதனைக் கண்ணுற்ற திருமாலும் காஞ்சிபுரம் வந்து ஏகாம்பரநாதரைப் பணிந்தார். பின்பு குமரக்கோட்டம் வந்த திருமால், தன்னுடைய மருமகன் முருகனுடன் ‘உருகும் உள்ளத்தான்’ என்றத் திரு நாமத்தில் தனிச் சன்னிதியில் எழுந் தருளினார்.


Next Story