பகையை விரட்டும் காலபைரவர்


பகையை விரட்டும் காலபைரவர்
x
தினத்தந்தி 25 Nov 2021 12:01 PM GMT (Updated: 25 Nov 2021 12:01 PM GMT)

சிவாலயங்கள் தோறும் வீற்றிருப்பவர், காலபைரவர். இவரை வழிபடாது, சிவ வழிபாடு பூர்த்தியடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

எந்த ஆலயத்திற்குச் சென்றாலும், முதலில் விநாயகப்பெருமானை வழிபட்டு ஆலயத்திற்குள் நுழைய வேண்டும் என்பது ஐதீகம். அதே போல் சிவாலயங்கள் சென்று வழிபடும் போது, இறுதியாக காலபைரவரை தரிசிக்காமல் வரக்கூடாது. ஒவ்வொரு சிவாலயத்தின் பாதுகாவலராகவும் இந்த பைரவமூர்த்தியே இருக்கிறார். வாழ்க்கை, எதிரிகள், வாட்டி வதைக்கும் நோய் மற்றும் வறுமை என எதுபற்றிய பயமாக இருந்தாலும், அது நீங்க, பைரவரை தரிசித்து வந்தால் போதுமானது. பயத்தைப் போக்குபவராக பைரவர் திகழ்கிறார்.

சிவபெருமானின் 64 திருவடிவங்களில் முக்கியமானவராக, பைரவர் திகழ்கிறார். இவர் பிரம்மாவின் ஆணவத்தை அகற்றுவதற்காக, சிவபெருமானால் தன்னுடைய அம்சமாக தோற்றுவிக்கப்பட்டவர். இவர் தோன்றிய தினமாக, கார்த்திகை மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி குறிப்பிடப்படுகிறது. பைரவரை வழிபட தேய்பிறை அஷ்டமி சிறப்புக்குரிய நாள் என்றாலும், கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி, அவரது ஜென்மாஷ்டமியாகவும் வருவதால், இது ‘காலபைரவ அஷ்டமி’யாக கொண்டாடப்படுகிறது.

12 ராசிகள் மற்றும் 27 நட்சத்திரங்களை தனக்குள் அடக்கி வைத்திருக்கும் பைரவ மூர்த்தியை, காலபைரவ அஷ்டமி அன்று, திருமகளின் எட்டு வடிவங்களுமான ‘அஷ்ட லட்சுமி’களும் வணங்குவதாக ஐதீகம். காலத்தின் கடவுளாக பார்க்கப்படும் பைரவர், தன்னை வணங்குபவர்களின் தலைவிதியை மாற்றும் சக்தி படைத்தவர். எனவே அவரை காலபைரவ அஷ்டமி அன்று, வில்வம் அல்லது செவ்வரளி மாலை சூட்டி வழிபடலாம். அதோடு நல்லெண்ணெய் தீபம் ஏற்றியும், விபூதியால் அபிஷேகம் செய்தும் வணங்கலாம். பைரவருக்கு தேங்காயில் தீபம் ஏற்றுவது மிகவும் விஷேசம். தேங்காயை இரண்டாக உடைக்கும்போது, அதில் மூன்று கண் இருக்கும் பகுதியில் 5 விதமான எண்ணெய்களை ஊற்றி தீபமிடுவது சிறப்பான பலனை பெற்றுத்தரும்.

ஒரு முறை தாருகாவனத்தில் வசித்து வந்த முனிவர்கள், ஆணவத்தின் காரணமாக ஈசனையே அழிக்க எண்ணினர். அப்போது பிட்சாடனராக வந்த சிவபெருமான், தனக்குள் இருந்த கால அக்னியைக் கொண்டு, தாருகாவனத்தை அழித்தார். இதனால் உலகம் முழுவதும் இருள் சூழ்ந்தது. சூரியன் கூட தோன்றவில்லை. அப்போது பைரவமூர்த்தியே, எட்டு திசைகளிலும் தோன்றி ஒளியை உண்டாக்கியதாக சொல்லப்படுகிறது. அப்படி அவர் எட்டு திசைகளிலும் தோன்றிய வடிவங்களை ‘அஷ்ட பைரவர்’களாக வழிபட்டு வருகிறோம்.

ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், சம்ஹார பைரவர், பீட்சன பைரவர், கபால பைரவர், கால பைரவர் ஆகியோரே அந்த எட்டு பைரவர்கள் ஆவர். பொதுவாக பைரவருக்கு நாய் தான் வாகனமாக இருக்கும். ஆனால் அஷ்ட பைரவர்களுக்கும், அன்னம், யானை, குதிரை என்று எட்டு விதமான விலங்குகள் வாகனங்களாக உள்ளன.


Next Story