காரியங்களை வெற்றியாக்கும் காளையார்கோவில்


காரியங்களை வெற்றியாக்கும் காளையார்கோவில்
x
தினத்தந்தி 30 Nov 2021 5:37 AM GMT (Updated: 30 Nov 2021 6:20 AM GMT)

தமிழ்நாட்டில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில், இது 200-வது ஆலயம் ஆகும். மேலும் தேவாரப் பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களில் இது, 10-வது தலமாகும்.

கஜபுஷ்கரணி (யானை மடு), சிவகங்கை காளி தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், கவுரி தீர்த்தம், ருத்ர தீர்த்தம், லட்சுமி தீர்த்தம், சுதர்சன தீர்த்தம் இங்கு உள்ளன.இந்த ஆலயத்தின் முன்பாக இரண்டு கோபுரங்கள் உள்ளன. ஒன்று பெரியதாகவும், மற்றொன்று சிறியதாகவும் அமைந்துள்ளது. பெரிய கோபுரத்தை முதலாம் சுந்தரபாண்டியனும், சிறிய கோபுரத்தை மருதுபாண்டியர்களும் கட்டியுள்ளனர்.

இந்திரன், தனக்கு ஏற்பட்ட சாபத்தைப் போக்க, பல ஆயிரம் சிவாலயங்களை வழிபாடு செய்ய வேண்டியதிருந்தது. அதன் ஒருபகுதியாக இங்கும் வந்து வழிபட்டான். இத்தலத்தில் வழிபட்டதும் ஆயிரம் சிவாலயங்களை வழிபட்ட பலன் கிடைத்ததாக உணர்ந்தான். இதன் அடிப்படையிலேயே இங்கு 1000 லிங்கங்களால் உருவான ’சகஸ்ரலிங்கம்’ பிரதிஷ்டை செய்யப்பட்டது.

தைப்பூசம் அன்று சொர்ணகாளீஸ்வரருக்கும், வைகாசி விசாகம் அன்று சோமேஸ்வரருக்கும், ஆடிப்பூரம் அன்று சொர்ணவல்லி அம்மனுக்கும் தேர்த் திருவிழா நடைபெறும்.

சொர்ணகாளீஸ்வரரை வழிபட்டால் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

திருவாரூரில் பிறந்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி என்பதுபோல, இந்த காளையார் கோவில் தலத்தில் பிறந்தாலும், இறந்தாலும் முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் பூர்வ ஜென்ம பாவத்தை விலக்கும் சக்தி இத்தல இறைவனுக்கு உள்ளது.


இங்கு சோமேசர், சொர்ணகாளீஸ்வரர், சுந்தரேஸ்வரர் என்று மூன்று சிவன் சன்னிதிகளும், சவுந்தரநாயகி, சொர்ணவல்லி, மீனாட்சி என மூன்று அம்மன் சன்னிதிகளும் தனித்தனியாக அமைந்துள்ளன.

பெயர்க்காரணம்

ஒரு முறை சுந்தரமூர்த்தி சுவாமிகள், விருதுநகரில் உள்ள திருமேனிநாதரை வழிபட்டு இந்த வழியாக வந்தார். அப்போது சொர்ணகாளீஸ்வரரை வணங்க நினைத்தார். ஆனால் வழி எங்கும் சிவலிங்கமாக தென்பட்டதால் அவரால் உள்ளே சென்று இறைவனை தரிசிக்க முடியவில்லை. இதனால் இறைவனை நினைத்து வேண்டினார். தன் நண்பன் மீது இரக்கம் கொண்ட ஈசன், காளையை அனுப்பினார். அது ஆலயத்தில் இருந்து ஓடி வந்து, சுந்தரமூர்த்தி நின்றிருந்த இடம் வரை வந்து விட்டு, மீண்டும் ஆலயம் சென்றது. காளை வந்த வழித்தடத்தில் சிவலிங்கம் இல்லை என்பதை உணர்ந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள், அதன்வழியே சென்று இறைவனை தரிசித்தார். காளை வழிகாட்டியதால், இதற்கு ‘காளையார்கோவில்’ என்று பெயர் வந்தது.

யானை மடு

இந்திரனின் வாகனமான வெள்ளை யானைக்கு ‘ஐராவதம்’ என்று பெயர். இந்த யானை, தான் பெற்ற சாபத்தால் இத்தல இறைவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தது. மனிதனின் பார்வையில் படக்கூடாது என்பது இந்த யானைக்கான விதி. ஆனாலும் ஒரு மனிதன் அந்த யானையைப் பார்த்து விட்டான். இதனால் அந்த யானை தன்னுடைய தலையால் பூமியை முட்டி பாதாளத்திற்குள் நுழைந்தது. யானை முட்டியதில் ஏற்பட்ட பள்ளத்தில் தண்ணீர் பெருகி ஒரு தீர்த்தக்குளம் உண்டானது. இதற்கு ‘யானை மடு’ என்று பெயர்.

Next Story