திருச்சி நகரை காக்கும் வெக்காளியம்மன்


திருச்சி நகரை காக்கும் வெக்காளியம்மன்
x
தினத்தந்தி 6 Jan 2022 5:42 AM GMT (Updated: 6 Jan 2022 5:42 AM GMT)

திருச்சி நகரின் மேற்கு பகுதியில் மத்திய பஸ் நிலையத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவிலும், சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலை விலும் அமைந்துள்ளது உறையூர். இங்குள்ள வெக்காளியம்மன் வடக்கு நோக்கி அமர்ந்து பக்தர்களின் மனக்குறைகளை நிவர்த்தி செய்து காவல் தெய்வமாகவும், கருணை மிகுந்தவளாகவும் அவர் களது மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருக்கிறாள்.

பவுர்ணமியில் சிறப்பு அபிஷேகம்

வேண்டிய வரங்களை அருளும் வெக்காளியம்மனுக்கு ஒவ்வொரு பவுர்ணமி தினத்தன்றும் அபிஷேக வழிபாடு நடைபெறும். ஒவ்வொரு மாதத்துக்கும் ஒவ்வொரு பொருட்கள் என்பது இங்கு சிறப்பு. சித்திரையில் மரிக்கொழுந்து, வைகாசியில் சந்தனம், குங்குமம், பச்சைக்கற்பூரம், பன்னீர், ஆனியில் முக்கனி, ஆடியில் பால், ஆவணியில் எள்ளுடன் நாட்டுச் சர்க்கரை, புரட்டாசியில் அப்பம், ஐப்பசியில் அன்னம், கார்த்திகையில் தீபம், மார்கழியில் பசுநெய், தையில் தேன், மாசியில் க்ரத கம்பளம் (போர்வை), பங்குனியில் பசுந்தயிர் என பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.

இந்த கோவிலின் தெற்கு வாசல் வழியாக நுழைந்தால் இடது பகுதியில் வல்லப கணபதி சன்னிதி அமைந்துள்ளது. அவரை வணங்கி சென்றால், விசாலாட்சியம்மன் உடனுறை விசுவநாதர் சன்னிதி உள்ளது. இதைத்தொடர்ந்து காத்தவராயன், பெரியண்ணன், மதுரைவீரன் சுவாமி சன்னிதிகள் அமைந்துள்ளன. தொடர்ந்து நாகப்பிரதிஷ்டையுடன் விநாயகர் சன்னிதி அமைய பெற்றுள்ளது. அடுத்து உற்சவ அம்மன் சன்னிதி உள்ளது. கோவில் திருவிழாக்காலங்களில் புறப்பாடாகி செல்லும் உற்சவ அம்மன் திருமேனி இங்குதான் அமர்த்தப்பட்டுள்ளது. இந்த சன்னிதியின் வடக்கு சுவரில் துர்க்கை அம்மன் சன்னிதியும் அமைந்திருப்பது சிறப்புக்குரியதாகும். இந்த கோவில் தினமும் காலை 5.15 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 9 மணிக்கு சாத்தப்படும்.

வெக்காளியம்மன் மேற்கரங்களில் வலதுபுறம் உடுக்கையுடனும், இடதுபுறம் பாசம், கீழ்ப்புறம் வலது கரத்தில் சூலம், இடது கரத்தில் கபாலத்துடனும், வலது காலை மடித்துவைத்து இடதுகாலை தொங்கவிட்டு, அரக்கனை மிதித்துக் கொண்டிருக்கும்படி கம்பீரமாக காட்சியளிக்கிறாள். பொதுவாக அம்மன் வலதுகாலை தொங்கவிட்ட நிலையில் அமர்ந்திருப்பதுதான் வழக்கம். ஆனால், இந்தக் கோவிலில் வெக்காளியம்மன் தனது இடதுகாலை தொங்கவிட்டு, வலதுகாலை மடித்து வைத்து பக்தர்களுக்கு காட்சி தருகிறாள்.

சாரமா முனிவர் நந்தவனம்

பொதுவாக கோவில்களில் கருவறையிலுள்ள சுவாமிக்கோ, அம்மனுக்கோ, கருவறைக்கு மேலே விமானங்கள் அமைக்கப்படுவதுதான் வழக்கம். ஆனால், உறையூர் வெக்காளியம்மன் கோவில் இவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டு அமைந்திருக்கிறது. வானமே கூரையாய் கொண்டு, வெட்ட வெளியில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறாள். இவ்வாறு வெக்காளியம்மன் அமர்ந்திருப்பதற்கும் ஒரு வரலாறு இருக்கிறது. அதுபற்றி பார்ப்போம்:-

முற்கால சோழர்களின் தலைநகரமாக உறையூர் விளங்கியது. இந்த நகரை வன்பராந்தகன் என்ற மன்னர் ஆட்சி செய்து வந்தார். இந்தநிலையில் சாரமாமுனிவர், நந்தவனம் அமைத்து, பல்வேறு மலர் செடிகளை பயிரிட்டு அதில் மலரும் பூக்களை கட்டி, நாள்தோறும் திருச்சி மலைக்கோட்டையில் உள்ள தாயுமான சுவாமிக்கு அணிவித்து வந்தார். அப்போது பிராந்தகன் என்ற பூ வணிகன், மன்னரிடம் நல்ல பெயரை பெற வேண்டும் என்று எண்ணி முனிவருக்கு சொந்தமான நந்தவனத்திலிருந்து மலர்களை பறித்து மன்னருக்கு அளிக்கத் தொடங்கினான். இந்த மலர்களை கண்டு மனம் மகிழ்ந்த மன்னர் வன்பராந்தகன், நாள் தோறும் மலர்களை பறித்து வர பிராந்தகனுக்கு உத்தரவிட்டார்.

மண் மழை பொழிந்தது

நந்தவனத்தில் மலர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியதால் அதிர்ச்சி அடைந்த சாரமா முனிவர், ஒருநாள் நந்தவனத்தில் மறைந்து இருந்து கண்காணித்தார். அப்போது, தாயுமானவருக்குரிய மலர்கள் மன்னருக்கு செல்வதைக் கண்டு வன்பராந்தகனிடம் முறையிட்டார். ஆனால் முனிவரை மன்னர் அலட்சியப்படுத்த, சாரமாமுனிவர் தாயுமானவரிடம் முறையிட்டார். தனது பக்தனின் துயர் கண்டு கோபமடைந்த இறைவன் மேற்கு நோக்கித்திரும்பி உறையூரையும் அங்கிருந்த மன்னன் அரண்மனையும் மண் மழை பொழிய வைத்து அழித்தார். இதனால் வீடு இழந்த மக்கள், சோழர்களின் காவல் தெய்வமான வெக்காளியம்மனிடம் சரணடைந்தனர். அன்னை இறைவனை வேண்டினாள். மண்மாரி நின்றது. ஆனாலும் மக்கள் வீடு இழந்தனர். வெட்டவெளியே தங்குமிடமானது. மக்களின் துயரை கண்டு மனமிரங்கிய வெக்காளியம்மன், உங்கள் அனைவருக்கும் வீடு கிடைக்கும் வரை நானும் உங்களை போல் வெட்டவெளியிலேயே இருக்கிறேன் என்று அருளியதாக கோவில் புராணம் கூறுகிறது.

திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. கோவிலின் மூலஸ்தானம் மற்றும் அர்த்தமண்டபம் 1993-ம் ஆண்டு செங்கல் மூலம் கட்டப்பட்டன. தற்போது ரூ.15 கோடியே 20 லட்சம் செலவில் கருங்கற்களால் அர்த்தமண்டபம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

பொங்கு சனீஸ்வரர் சன்னிதி

நவக்கிரகங்களில் மிக மிக முக்கியமானவராக வணங்கப்படுபவர் சனீஸ்வரன். வேறு எந்த தெய்வத்துக்கும் ஈஸ்வர பட்டம் இல்லை. ஆனால் சனிக்கு மட்டுமே ஈஸ்வர பட்டம் கிடைத்தது. ஏழரை சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டமச் சனி எனும் காலங்கள் உண்டு. இதைக்கொண்டு, சனீஸ்வரரை தக்கபடி வழிபட்டு வந்தால், எல்லா நலத்தையும், வளத்தையும் கொடுப்பார். அதற்காகவே, உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் பொங்கு சனீஸ்வரராக இருந்து அருள்பாலிக்கிறார். அதுமட்டுமின்றி, ஆயுள்காரனும் சனி பகவானே. எனவே, ஆயுள் பலமும், ஆரோக்கிய பலமும் தந்து அருள் வழங்குகிறார். இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் தவறாமல் பொங்கு சனீஸ்வரரையும் தரிசனம் செய்துவிட்டு செல்வர். கோவிலின் ஈசானிய மூலையில் நவக்கிரக சன்னிதி அமைந்துள்ளது.

பிரார்த்தனை சீட்டு எழுதும் பக்தர்கள்

தொழில் நஷ்டம், கடன் பிரச்சினை, குடும்ப பிரச்சினை போன்ற பல்வேறு பிரச்சினைகள் நீங்கவும், நோய், நொடியின்றி நலமாக வாழவும், கல்வி, பொருளாதார நிலைகளில் மேம்பாடு அடையவும் , தங்களின் தீராத பிரச்சினைகளை நிறைவேற்றிட வேண்டி சூலத்தில் பக்தர்கள் தங்களது பிரார்த்தனை சீட்டுகளை எழுதி, கட்டுவதுதான் இன்றைக்கும் வழக்கமாக இருக்கிறது. தங்களின் பிரார்த்தனை நிறைவேறியதும், பக்தர்கள் கோவிலுக்கு தாங்கள் வேண்டியதை காணிக்கையாக செலுத்துவதுடன் அம்மனுக்கு புடவை எடுத்து, தேங்காய், பழம் உடைத்து பொங்கல் வைத்து வழி படுகிறார்கள்.

தீராத நோயால் அவதிப்படுபவர்கள் வெக்காளியம்மனை மனமுருகி வழிபட்டால் அவர்களது நோய் தீருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பக்தர்கள் மாடு, ஆடு, கோழி ஆகியவற்றை கோவிலுக்கு நேர்ந்து விடுவார்கள். சில பக்தர்கள் வெக்காளியம்மனுக்கு கோவில் வெளியே ஆடு, கோழிகளை பலியிட்டு தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்துவார்கள்.

Next Story