இறை வார்த்தைக்கு கீழ்படிவோம்..


இறை வார்த்தைக்கு கீழ்படிவோம்..
x
தினத்தந்தி 23 Jan 2022 3:36 PM GMT (Updated: 23 Jan 2022 3:36 PM GMT)

தேவன் எப்போதும் நம் மீது அன்பாகவே இருக்கிறார். நம்முடைய வாழ்க்கையில் குறைகள் ஏற்படும்போது, அதை அவர் நிறைவாய் மாற்றுகிறார். அப்படி மாற்றும்போது, அது நம்முடைய முந்தைய நிலையை விடவும் வளமானதாகவும், சிறப்பானதாகவும் இருக்கும்படி செய்கிறார்.

தேவனுக்கு கீழ்படிந்து நாம் நடக்கும்போது, ‘அவர்கள் வேண்டுவதற்கு முன்னே நான் மறுமொழி தருவேன்; அவர்கள் பேசிமுடிப்பதற்கு முன்னே பதிலளிப்பேன்’ என்று எசாயாவில் எழுதப்பட்டுள்ள வார்த்தையின் படி, நம்முடைய தேவையை அறிந்ததுமே உதவி செய்பவராக இருக்கிறார்.

கலிலேயாவில் உள்ள கானாவில் நடைபெற்ற திருமணம் ஒன்றுக்கு, இயேசுவும் அவருடைய சீடர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். இயேசுவின் தாய் மரியாளும் அத்திருமணத்திற்கு வந்திருந்தார். சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த திருமண விருந்தில், திராட்சை ரசம் தீர்ந்து போனது. இதை அறிந்தவுடன் மரியாள் இயேசுவிடம் வந்து, ‘‘திராட்சை ரசம் தீர்ந்துவிட்டது’’ என்றார். இயேசுவே அவரிடம், ‘‘அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே’’ என்றார். இயேசுவின் தாய் பணியாளரிடம், ‘‘அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்’’ என்றார்.

யூதரின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர் நிரம்பக் கூடியவை. இயேசு அவர்களிடம், ‘‘இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்’’ என்றார். அவர்கள் அவற்றை விளிம்பு வரை நிரப்பினார்கள். பின்பு அவர், ‘‘இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு போங்கள்’’ என்று கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள்.

பந்தி மேற்பார்வையாளர், திராட்சை ரசமாய் மாறியிருந்த தண்ணீரை சுவைத்தார். அந்த ரசம் எங்கிருந்து வந்தது என்று அவருக்குத் தெரியவில்லை; தண்ணீர் மொண்டு வந்த பணியாளருக்கே தெரிந்திருந்தது. ஆகையால் பந்தி மேற்பார்வையாளர் மணமகனைக் கூப்பிட்டு, ‘‘எல்லாரும் நல்ல திராட்சை ரசத்தை முதலில் பரிமாறுவர்; யாவரும் விருப்பம் போலக் குடித்த பின்தான் தரம் குறைந்த ரசத்தைப் பரிமாறுவர். நீர் நல்ல ரசத்தை இதுவரை பரிமாறாமல் ஏன் வைத்திருந்தீர்?’’ என்று கேட்டார். இதுவே இயேசு செய்த முதல் அற்புதம் இது. இதன் வழியாக அவர் தம் மாட்சியை வெளிப்படுத்தினார். அவருடைய சீடரும் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்.

இந்த அற்புதம் நடைபெற முக்கிய காரணம், கீழ்படிதலே ஆகும். அந்தக் கல்யாண வீட்டில் ஒரு குறை என்றவுடன், இயேசுவின் தாய் அதனை புறக்கணித்துச் செல்லவில்லை. இந்தக் குறையை தன் மகனிடம் கூறினால், நிச்சயமாய் அவரால் அதனை சரி செய்ய முடியும் என்பதை அவர் முதலில் விசுவாசித்தார். அதனால்தான் அவர் தன் மகனிடம் சென்று ‘திரட்சை ரசம் தீர்ந்து விட்டது’ என்றார்.

இயேசு இந்த உலகில் தனக்கான நேரம் வரவில்லை என்பதை அறிந்தவராய், தன்னால் என்ன செய்ய இயலும் என்று தன்னுடைய அன்னையிடம் கேட்டார். ஆனாலும் அன்னையே தன்னுடைய மகன் மீது கொண்டிருந்த விசுவாசத்தால், அங்கிருந்த பணியாளர்களிடம் ‘‘அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்’’ என்று கூறினார். பின்னர் இயேசுவும் தன்னுடைய தாயின் வார்த்தைக்கு கீழ்படிந்தவராய், அங்கிருந்த ஊழியர்களை நோக்கி, ‘‘இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்’’ என்றார். அவர்களும் அதற்கு மறுவார்த்தை எதுவும் கேட்காமல் அங்கிருந்த தொட்டிகளில் தண்ணீரை நிரப்பினார்கள்.

அதன்பின் இயேசு பணியாளர்களை நோக்கி ‘இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு போங்கள்’ என்றார். அதற்கும் அவர்கள் மறுமொழி கூறாமல், இயேசுவின் வார்த்தைக்கு கீழ்படிந்து, அந்தத் தொட்டியில் நிரப்பியிருந்த தண்ணீரை மொண்டு, பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு சென்றனர். அவர்கள் இயேசுவின் வார்த்தைக்கு கீழ்படிந்து அவர் சொன்னபடி செய்ததால், அந்த பந்தி மேற்பார்வையாளரிடம் அந்த தண்ணீர் சென்ற போது, அது திராட்சை ரசமாக மாறியிருந்தது. அதுவும் முன்பிருந்த திராட்சை ரசத்தை விட சுவையானதாகவும் இருந்தது.

இன்றும் பிதாவான தேவன் நம்மிடம் எதிர்பார்ப்பது ஒன்றுதான். அது அவருடைய கட்டளைக்கு கீழ்படிய வேண்டும் என்பதே. அப்படி நாமும் தேவனின் வார்த்தைக்கு கீழ்படிந்து நடந்தால், நம்முடைய தண்ணீர் போன்ற வாழ்க்கை, திராட்சை ரசம் போன்று சுவை மிகுந்ததாய் மாறும்.


Next Story