குழந்தை வரம் அருளும் குலசேகரநாதர்


குழந்தை வரம் அருளும் குலசேகரநாதர்
x
தினத்தந்தி 26 Jan 2022 9:15 AM GMT (Updated: 26 Jan 2022 9:15 AM GMT)

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவியில் இருந்து அம்பாசமுத்திரம் செல்லும் பிரதான சாலையில் உள்ளது, காருகுறிச்சி என்ற ஊர். கன்னடியன் கால்வாயின் வடகரையில் அமைந்திருக்கும் வளம்மிக்க ஊர் இது.

இங்கு பழமையும், பெருமையும் வாய்ந்த சிவகாமி அம்பாள் உடனாய குலசேகரநாத சுவாமி திருக்கோவில் அமைந்திருக்கிறது. கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்றிணையவும், குழந்தை இன்றி தவிப்பவர்களுக்கு தீர்வாகவும் இந்தக் கோவில் விளங்குகிறது.

தல வரலாறு

கி.பி. 655-ம் ஆண்டில் இந்தப் பகுதியை பூதல வீர உதய மார்த்தாண்டன் என்ற சிற்றரசன் ஆட்சி செய்து வந்தான். அவனுக்கு நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லை. அதோடு அவனது மனைவியும் சில கருத்து வேறுபாடு காரணமாக அவனை விட்டு பிரிந்து சென்று விட்டாள். இதனால் மனமுடைந்து போன மன்னன், இத்தலம் வந்து, குலசகேரநாதரை மனமுருக வேண்டினான்.

இதையடுத்து சில நாட்களிலேயே மன்னனின் மனைவி, அவனைத் தேடி வந்தாள். அவளுடன் இணைந்து வாழ்க்கையை மகிழ்ச்சியாக நடத்திய மன்னனுக்கு, சில மாதங்களிலேயே குழந்தை பாக்கியம் கிடைத்தது. மன்னனின் வம்சம் விருத்தியாக அருள்புரிந்ததால், இத்தல இறைவனுக்கு ‘வம்ச விருத்தீஸ்வரர்’ என்ற பெயரும் உண்டு.

இத்தல அம்பாளான சிவகாமி அம்மன், மிகச்சிறந்த வரப்பிரசாதியாகவும், பெருங்கருணை கொண்ட நாயகியாகவும் திகழ்கிறார். அம்பாள் நின்ற கோலத்தில், தனது வலது கரத்தில் நீலோற்பவ மலரை ஏந்தியபடியும், இடது கரத்தை தொங்க விட்டபடியும் அருள்பாலிக்கிறார். அம்பாளின் கருவறை விமானம் ‘கஜபிருஷ்ட’ கலை அம்சத்தில் வடிக்கப்பட்டுள்ளது. கருவறையில் மூலவராக குலசேகரநாதர் எழுந்தருளியுள்ளார். மகா மண்டபத்தின் வலதுபுறம் நடராஜர்- சிவகாமி அம்மன் சன்னிதி உள்ளது. அர்த்த மண்டப வாசலில் விநாயகர், சுப்பிரமணியர் இருவரும் காட்சி தருகின்றனர்.

களத்திர தோஷம் இருப்பவர்கள், இத்தலத்திற்கு வந்து கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் குலசேகரநாதரையும், தெற்கு நோக்கி அருள்பாலிக்கும் சிவகாமி அம்பாளையும் ஒரே இடத்தில் நின்றவாறு தரிசனம் செய்து வழிபட்டால், விரைவில் திருமணம் கைகூடும். குழந்தை இன்றி தவிப்பவர்கள், தங்கள் பெயர், நட்சத்திரத்திற்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், இறைவன், இறைவியின் பரிபூரண அருளால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த தம்பதியரும், விரைவிலேயே ஒன்றாக இணைந்துவிடுவர்.

இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் ஐப்பசி மாத வளர்பிறை துவாதசி, திரயோதசி திதிகளில் ‘துளசி விவாக உற்சவம்’ நடத்தப்படுகிறது. திருமண பந்தத்தில் இணையும் தம்பதியர், மனம் ஒத்து இணைந்து வாழவும், கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்பவர்கள், மீண்டும் ஒன்றாக கூடி வாழவும் பரிகார விழாவாக இந்த உற்சவம் நடத்தப்படுகிறது.

திருநெல்வேலியில் இருந்து சேரன்மாதேவி வழியாக பாபநாசம் செல்லும் சாலையில் 26 கிலோமீட்டர் தூரத்தில் காருகுறிச்சி திருத்தலம் உள்ளது.

Next Story