ஆன்மீகம்- சந்தேகம் தெளிவோம்


ஆன்மீகம்- சந்தேகம் தெளிவோம்
x

நெல்லி மரம் திருமகளான லட்சுமிதேவியின் வடிவம். உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது, நெல்லிக்காய். ஆயுர்வேத மருந்துகளும் பல, நெல்லிக்காயில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

கேள்வி:- ராமரின் பக்தனான அனுமன், பறக்கும் தோற்றத்தில் உள்ள படத்தை வீட்டில் வைத்திருந்தால், குடும்பம் கஷ்டப்படும், செல்வம் தங்காமல் பறக்கும் என்கிறார்கள். அந்தப் படத்தை வைத்துக் கொள்ளலாமா? கூடாதா? (உ.சங்கீதவாணன், சிவகங்கை)

பதில்:- வைத்துக் கொள்ளலாம். சுக்ரீவனுக்கு நல்வாழ்வு பெறக் காரணமாக இருந்தவர்; கலங்கியிருந்த சீதைக்குத் தைரியம் சொல்லி, மனக் கலக்கம் தீர்த்தவர்; மூலிகை மலையை கொணர்ந்து லட்சுமணனுக்கு உயிரூட்டியவர்; இப்படிப்பட்ட அனுமனின், பறக்கும் தோற்றத்தில் உள்ள படத்தை வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். கஷ்டங்கள் தீரும்.

கேள்வி:- நன்றாக இருந்த குடும்பம் நொடித்துப் போய் விட்டது. பல பிரச்சினைகள். இரு இடங்களில் ஜோசியம் பார்த்ததில், செய்வினை இருப்பதாகச் சொல்கிறார்கள். இதில் இருந்து விடுபட, ஏதேனும் துதிகள் இருக்கின்றதா? (கோ.மகேஸ்வரி, வேலூர்)

பதில்:- இந்திராட்சி ஸ்தோத்திரம் (சம்ஸ்கிருதம்); தமிழில் பிரம்மோத்திர காண்டம் எனும் நூலில் உள்ள சிவ கவசம்; அருணகிரிநாதர் எழுதியுள்ள - தேவேந்திர சங்க வகுப்பு ஆகிய துதிகளை, ஏதாவது ஒரு கோவிலில் அமர்ந்து பாராயணம் செய்யுங்கள்! கஷ்டங்கள் விலகும்.

கேள்வி:- என் வீட்டு வாசலில் ஒரு பெரிய நெல்லி மரம் இருக்கிறது. ஆனால் சிலர், வீட்டு வாசலில் நெல்லிமரம் இருக்கக்கூடாது என்று சொல்கிறார்கள். இது சரியா? (த.வர்ஷிகா, திருவான்மியூர்)

பதில்:- சரி இல்லை. நெல்லி மரம் திருமகளான லட்சுமிதேவியின் வடிவம். உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது, நெல்லிக்காய். ஆயுர்வேத மருந்துகளும் பல, நெல்லிக்காயில் இருந்து தயாரிக்கப்படுகிறது. நெல்லி மரத்தின் உயர்வைப் பற்றி, 'அகத்தியர் குணபாடம்' எனும் நூல் விரிவாகக் கூறுகிறது. உயர்வை அளிக்கும் நெல்லிமரம், வீட்டு வாசலில் இருக்கலாம்.

கேள்வி:- சில கோவில்களில் அர்ச்சனையின் போது, சுவாமி மீது உள்ள மாலைகளை உதிர்த்தோ, சுவாமி மீது உள்ள பூக்களை எடுத்தோ, அர்ச்சனை செய்கிறார்கள். இது சரியா? (த.நிர்மலா தேவி, கள்ளக்குறிச்சி)

பதில்:- சரியில்லை தான்! என்ன செய்ய? கோவில்களில் பூ வாங்க வழியில்லை எனும்போது, இப்படித்தானே செய்ய வேண்டியிருக்கிறது. அர்ச்சனைக்குப் பூக்கள் தட்டுப்பாடு உள்ள கோவில்கள் என்று தெரிந்தால், கோவிலுக்குச் செல்லும்போது பூக்கள் எடுத்துச் செல்லுங்கள்! இவ்வாறு செய்தால், பூசாரியோ -அர்ச்சகரோ சுவாமி மீது ஏற்கனவே உள்ள பூக்களை எடுத்து, அர்ச்சனை செய்யும்படியான நிலை உண்டாகாது.

கேள்வி:- எனக்குத் தெரிந்த கோவிலில் மூலவர் வலம்புரி விநாயகராகவும்; உற்சவர் இடம்புரி விநாயகராகவும் உள்ளது. இவ்வாறு இருப்பது தோஷம் என்று சிலர் சொல்கி றார்கள். இதற்கு விளக்கம் என்ன? (த.கலைவேந்தன், சேலம்)

பதில்:- மூலவர் எப்படி இருக்கிறாரோ, அப்படித்தான் உற்சவரும் இருக்க வேண்டும் என ஆகமங்கள் கூறுகின்றன.


Next Story