ஆச்சரியம் தரும் தெய்வச் சிலைகள்


ஆச்சரியம் தரும் தெய்வச் சிலைகள்
x

நம் நாட்டில் உள்ள ஆலயங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்பைப் பெற்றிருப்பதை தல வரலாறு நமக்கு உணர்த்தும். அதோடு சில ஆலயங்களும்.. அதில் உள்ள தெய்வச் சிலைகளும், அதன் வரலாறுகளும் நமக்கு ஆச்சரியத்தையும், வியப்பையும் அளிக்கக்கூடியதாக இருக்கும்.

ஆச்சரியம் தரும் சிலை வடிவங்களில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

ஐந்து வளைவுகளுடன் வேணுகோபாலர்

செங்கல்பட்டில் இருந்து மெய்யூர் செல்லும் வழியில் சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது களியபேட்டை. இங்கே லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோவில் இருக்கிறது. இங்குள்ள வேணுகோபால சுவாமியின் திருவடிவம் சிறப்புக்குரியது. இவர், ருக்மணி - சத்யபாமா சமேதராக நான்கு திருக்கரங்களுடன் அருள்புரிகிறார். மேல் இரு கரங்களில் சங்கு மற்றும் சக்கரம் தாங்கியுள்ளார். கீழ் இரு கரங்களில் புல்லாங்குழலைப் பிடித்தபடி சேவை சாதிக்கிறார். இந்த திருவடிவம் விஜயநகர மன்னர்களின் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்டது. நின்றகோலத்தில் அருளும் வேணுகோபாலரின் திருவடிவம் பெரும்பாலும் இரண்டு அல்லது மூன்று வளைவுகளை (த்விபங்கம் அல்லது த்ரிபங்கம்) கொண்டதாக இருக்கும். ஆனால் இங்குள்ள வேணுகோபாலனின் வடிவம் ஐந்து வளைவுகளுடன் (பஞ்சபங்கம்) காணப்படுகிறது. புராதனச் சிறப்புமிக்க இந்த வேணுகோபாலர், புத்திர பாக்கியம் அருளும் புனிதராக அருள்கிறார்.

தலையில் சக்கரத்துடன் நந்தி

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது, வேந்தன்பட்டி கிராமம். இங்குள்ள நெய் நந்தீஸ்வரர் கோவிலில் ஆச்சரியம் மிக்க விஷயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள நந்திக்கு நெய் அபிஷேகம் செய்யப்படும். அந்த நெய்யின் மீது எறும்போ, ஈயோ அமர்வதில்லை. இந்த நந்தியின் தலை மீது ஒரு சக்கரம் உள்ளது. இந்த சக்கரத்தில் இருந்து வெளிப்படும் அதிர்வுகள்தான் நந்தியின் மீது ஈ, எறும்பு தீண்டாததற்கு காரணம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஆனால் அதையும் தாண்டிய ஆச்சரியம் என்னவென்றால், நந்தியின் மீது சாத்தப்படும் நெய்யானது. கோவிலுக்குள் இருக்கும் ஒரு கிணற்றில் சேகரிக்கப்படுகிறது. அங்கும் ஒரு பூச்சியும் மொய்ப்பதில்லை.

புன்னகைக்கும் பெருமாள்

சென்னை கோயம்பேட்டின் அருகே உள்ளது, நெற்குன்றம் என்ற ஊர். இங்கு சுமார் 400 ஆண்டுகள் பழமையான கரிவரதராஜப் பெருமாள் திருக்கோவில் இருக்கிறது. இந்த கோவிலில் உள்ள பெருமாள் சிலை, பார்ப்பதற்கு சாதாரணமாகவே தோற்றமளிக்கும். கண்கள் மூடிய நிலையில், உதடுகள் குவிந்த நிலையில் காணப்படும். பெருமாளுக்கு தீபாராதனை காட்டும் வேளையில், கருவறைக்குள் உள்ள விளக்குகளை அணைத்து விடுவர். அப்போது பெருமாள் முகத்தின் அருகே தீபாராதனை வெளிச்சம் படும்போது, மூடியிருந்த கண்கள் திறந்திருப்பது போலவும், உதடுகள் திறந்து சிரிப்பது போலவும் தோற்றம் காட்டுவது ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக இருக்கிறது.

1 More update

Next Story