இல்லற வாழ்வை இனிதாக்கும் அணைத்தெழுந்த நாயகர்
நல்ல வரன் அமையாமல் வருந்துபவர்களும், கருத்து வேறுபாட்டால் பிரிந்த தம்பதிகளும், இந்த நாயகரை வழிபட்டால் நிம்மதியான இல்லறம் அமையும் என்பது நம்பிக்கை.
சிவபெருமானின் சாபத்திற்கு ஆளாகி, பசுவாக பிறந்த பார்வதி தேவி சாப விமோசனம் பெற்ற தலம் திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் ஆலயம். பசுவின் வடிவில் இங்கு தவம் இருந்த அம்பாளுக்கு சிவபெருமான் காட்சி தந்து தன்னுடன் அணைத்துக் கொண்டு விமோசனம் கொடுத்தார். 'கோ'வாகிய பசுவுக்கு விமோசனம் தந்தவர் என்பதால் கோமுக்தீஸ்வரர் என்று இத்தல இறைவனுக்குப் பெயர் வந்தது.
கோவில் பிரசாரத்தில் தெற்கு நோக்கிய சன்னதியில் உற்சவ மூர்த்தியான அணைத்தெழுந்த நாயகர் இருக்கிறார். ஈசனும் உமையும் தம்பதி சமேதராக 'அணைத்தெழுந்த கோலத்துடன்' காட்சி தருகிறார்கள். சிவபெருமான் அம்பாளை அணைத்த கோலத்தில் இருந்தாலும் அம்பாள் மீது கைகள் படாதவாறு சிற்பம் வடிவமைக்கப்பட்டிருப்பது சிறப்பு அம்சம். சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டான இதுபோன்ற கல்யாண சுந்தரர் கோலத்தினை, வேறு தலங்களில் காண்பது அரிது. ஆகவே, இந்த திருக்கோலத்தை தரிசிப்பது மிகவும் விசேஷம்.
இந்த அம்மையும் அப்பனும், தங்களை வழிபடும் அன்பர்களுக்கு இல்லற வாழ்வினை இனிமையாக்கித் தருகின்றார்கள். நல்ல வரன் அமையாமல் வருந்துபவர்களும், கருத்து வேறுபாட்டால் பிரிந்த தம்பதிகளும், இந்த நாயகரை வழிபட்டால் நிம்மதியான இல்லறம் அமையும் என்பது நம்பிக்கை.
இங்கு மூன்று சூரியர்கள் இருப்பது மிகவும் விஷேம். சிவபெருமானே சகல தோஷங்களுக்கும் நிவாரணமாக இருப்பதால் இங்கு நவகிரக சன்னதி கிடையாது. தமிழகத்திலேயே உயரமான விஸ்வரூப நந்தி இங்குதான் உள்ளது. இங்கு பிரதோஷம் மிக விசேஷம். ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் 3,000 பாடல்கள் இயற்றியதாகக் கூறப்படும் திருமூலர் இங்குதான் வாழ்ந்து ஜீவசமாதி அடைந்தார். பூசம் நட்சத்திரக்காரர்கள் இத்தலத்தில் வந்து வழிபட்டால், வாழ்வு வளம்பெறும்.