சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று ஆருத்ரா தரிசனம்


சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று ஆருத்ரா தரிசனம்
x
தினத்தந்தி 27 Dec 2023 12:11 AM GMT (Updated: 27 Dec 2023 12:30 AM GMT)

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசன விழா தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

கடலூர்,

உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசன விழா தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. 'சிவ சிவ' கோஷங்களுடன் தேர்களை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்த நிலையில், இன்று (புதன்கிழமை) விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசன விழா நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று அதிகாலை சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகாபிஷேகமும், 6 மணி முதல் 10 மணி வரை திருவாபரண அலங்காரமும், பஞ்ச மூர்த்தி வீதி உலாவும் நடைபெறுகிறது.

பஞ்சமூர்த்திகள் வீதி உலா வந்த பின்னர், பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீநடராஜமூர்த்தியும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளும் புறப்பட்டு நடனப்பந்தலில் நடனமாடி ஆருத்ரா தரிசன காட்சியளித்து சித்சபா பரவேசம் செய்கின்றனர். பின்னர் 28-ந்தேதி முத்துப்பல்லக்கு வீதி உலா காட்சியுடன் விழா முடிவுக்கு வருகிறது.


Next Story