சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் 108 சங்காபிஷேகம்


சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில்  108 சங்காபிஷேகம்
x

சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் 108 சங்காபிஷேகம்

தஞ்சாவூர்

சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் 108 சங்காபிஷேகமும், கஜமுகசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியும் நடந்தது.

கந்தசஷ்டி விழா

அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி விழா கடந்த 24-ந்தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. இந்த விழா வருகிற 4-ந்தேதி வரை நடக்கிறது. விழாவையொட்டி கடந்த 25-ந்தேதி சந்திரசேகரர், அம்பாள், வள்ளி, தெய்வானை, சண்முகர், வீரகேசரி வீரபாகுடன் மலைக்கோவிலில் இருந்து படி இறங்கி உற்சவம் மண்டபத்தில் எழுந்தருதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து சந்திரசேகர், வீரபாகு மற்றும் வீரகேசரி ஆகியோர் சூரபத்மனுடன் எதிர்கொண்டு யாகசாலை பூஜையும், வீதி உலாவும் நடைபெற்றது.

108 சங்காபிஷேகம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று வள்ளி தெய்வானை சண்முகருக்கு காலை 11 மணிக்கு 108 சங்காபிஷேகமும், சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு தாயார் மீனாட்சி அம்மனுடன் சண்முகசாமி ஆட்டுக்கிடா வாகனத்தில் வந்து சக்திவேல் வாங்குதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து கிழக்கு சன்னதியில் கஜமுக சூரன் மற்றும் சிங்கமுக சூரன் ஆகியோரை வதம் செய்யும் நிகழ்ச்சியும், தெற்கு வீதியில் சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருக்கல்யாண வைபவம்

விழாவில் இன்று(திங்கட்கிழமை) காலை சண்முகர் காவேரி ஆற்றில் குருதி கழுவுதல் நிகழ்ச்சியும், இரவு தெய்வானை திருக்கல்யாண வைபவமும் நடைபெறுகிறது. தொடர்ந்து 3 நாட்களுக்கு ஊஞ்சல் உற்சவ விழா நடைபெறுகிறது. இந்த நாட்களில் சுவாமிநாதசாமிக்கு சிறப்பு அபிஷேகமும், சண்முகார்ச்சனையும் நடைபெற உள்ளது. விழாவில் கலந்துகொள்ள வரும் பக்தர்களுக்கு பஸ் வசதி, கழிவறை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. முதியோர் மற்றும் ஊனமுற்றோர் எளிதாக கீழ்ப்பிரகாரத்தில் சாமி தரிசனம் செய்யும் வகையில் தெற்கு ராஜகோபுரத்தில் இருந்து சாய்வு தளம் அமைத்து சக்கர நாற்காலியுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஏற்பாடு

முன்னதாக தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக பரமாசாரிய சுவாமிகள், சூரியனார் கோவில் ஆதீனம் 28-வது குருமகா சன்னிதானம் மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள் ஆகியோர் தரிசனம் செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை கோவில் துணை ஆணையர் உமாதேவி மற்றும் கோவில் கண்காணிப்பாளர், கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

1 More update

Next Story