தன்னைத் தானே பூஜித்துக் கொண்ட ஐயாறப்பர்


தன்னைத் தானே பூஜித்துக் கொண்ட ஐயாறப்பர்
x

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் உள்ள ஐயாறப்பர் திருக்கோவிலைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

மூலவர்: ஐயாறப்பர், பஞ்ச நதீஸ்வரர்

அம்மன்: அறம்வளர்த்த நாயகி, தர்மசம்வர்த்தினி

தல விருட்சம்: வில்வம்

தீர்த்தம்: சூரிய புஷ்கரணி, காவிரி

* கயிலாயம் சென்று சிவனை தரிசிக்க எண்ணினார், திருநாவுக்கரசர். ஆனால் வயோதிகம் அவரை வேதனைப்படுத்தியது. இதனால் கயிலை செல்லும் வழியில் மானசரோவர் ஏரியில் மூழ்கும்படி சிவன் உத்தரவிட்டார். அங்கு மூழ்கிய திருநாவுக்கரசர், திருவையாறு தலத்தில் உள்ள சூரிய புஷ்கரணியில் எழுந்தார். அங்கு அவருக்கு கயிலாய காட்சியை அருளினார்.

* இந்த ஆலயத்தில் பணியாற்றிய அர்ச்சகர் மன்னனின் தண்டனையில் இருந்து தப்பிப்பதற்காக, சிவபெருமானே அர்ச்சகர் வடிவில் வந்து தனக்குத்தானே பூஜை செய்து கொண்ட சிறப்புமிக்க தலம் இது.

* சிவபெருமானின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 51-வது தலமாகும். அதே போல் அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது 'தர்ம சக்தி பீடம்' ஆகும்.

* நவக்கிரகங்களில் இது சூரிய தலமாகும். இத்தலத்தில் சூரிய பகவான் வழிபாடு செய்துள்ளதாக தல வரலாறு சொல்கிறது. இத்தல சூரியன், மேற்கு திசை நோக்கி உள்ளார்.

* எல்லா நாட்களும் நல்ல நாட்கள்தான் என்பதை அனைவருக்கும் வலியுறுத்தும் வகையில், இத்தல அம்மனுக்கு அஷ்டமி திதி அன்று இரவு திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது.

* இத்தல அம்பாள், பெருமாளின் அம்சமாக கருதப்படுகிறாள். எனவே திருவையாறு எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பெருமாளுக்கு கோவில்களே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

* இங்கு மூலவர் சன்னிதியை சுற்ற தடை உள்ளது. இத்தல மூலவரான ஐயாறப்பர் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். அவரது ஜடாமுடி கருவறையின் பின்பக்கம் பரந்து விரிந்து கிடப்பதாக ஐதீகம். ஈசனின் ஜடாமுடியை யாரும் மிதித்துவிடக்கூடாது என்பதால் இந்த தடை உள்ளது.

* இத்தல தட்சிணாமூர்த்தியை, மகாவிஷ்ணு வழிபாடு செய்துள்ளார். எனவே இவருக்கு 'ஹரி உரு சிவயோக தட்சிணாமூர்த்தி' என்று பெயர். இந்த தட்சிணாமூர்த்தி, தன் காலடியில் முயலகனுக்கு பதிலாக ஆமையை மிதித்தபடி காட்சி தருகிறார்.

* இந்த ஆலயத்தின் வெளிப்பிரகாரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று கொண்டு, 'ஐயாறப்பா' என்று உரக்கக் குரல் கொடுத்தால், ஏழு முறை திரும்பி கேட்கும் அதிசயம் நிகழ்கிறது.

* பொதுவாக ஆஞ்சநேயருக்குத்தான் வடைமலை சாத்தி வழிபடுவார்கள். ஆனால் ஐயாறப்பர் ஆலயத்தில் தெற்கு கோபுர வாசலில் வீற்றிருக்கும் ஆட்கொண்டேஸ்வரருக்கு வடை மாலை சாத்தப்படுகிறது.

* இத்தலத்தில் பிறந்த நந்திகேசரை, சிவபெருமான் அம்பிகையின் பால், நந்தி வாய் நுரை நீர், அமிர்தம், சைவ தீர்த்தம், சூரிய புஷ்கரணி தீர்த்தம் ஆகிய ஐந்தும் கொண்டு அபிஷேகித்தார். இதனால் இத்தல இறைவன் 'ஐயாறப்பர்' ஆனார். திருவையாறில் காவிரி, அதன் கிளை நதிகளான குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வட்டாறு ஆகிய 5 நதிகள் பாய்வதால், 'ஐயாறப்பர்' என்ற பெயர் வந்ததாகவும் சொல்வார்கள்.

* திருமணத் தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, கல்வியில் சிறந்து விளங்க இத்தல இறைவனையும், இறைவியையும் வணங்கலாம்.

* தஞ்சாவூரில் இருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, திருவையாறு திருத்தலம்.


Next Story