இறைவன் விரும்புகிற தான-தர்மம்


இறைவன் விரும்புகிற தான-தர்மம்
x

உங்கள் விண்ணப்பம் இறைவனை நோக்கிப் பறந்திட விரும்புகிறீர்களா? அதற்கு இரண்டு இறக்கைகளை உருவாக்குங்கள்: ‘ஒன்று நோன்பு, மற்றொன்று தர்மம் செய்தல்’ என்கிறார் தூய அகஸ்டின் அவர்கள்.

தவக்காலங்களை ஆசரிக்கின்ற இறைமக்கள் கடைபிடிக்க வேண்டிய மூன்று கடமைகள் தர்மம் செய்தல், இறைவேண்டல், நோன்பு இருத்தல் என்பவைகளாகும். இவைகளில் 'தர்மம் செய்தலை' (மத்தேயு 6:1-4) ஆண்டவர் இயேசு முதன்மையானதாகக் குறிப்பிடுகிறார்.

யூதர்கள் செய்யவேண்டிய மிக முக்கிய செயல்களில் ஒன்று தர்மம் செய்தலாகும். இது இறைவேண்டல், மனந்திரும்புதலைப் போன்று பாவத்திற்கான பரிகாரங்களில் ஒன்று.

இறைமக்களின் தர்மம்

யூதர்களின் நூலான மிஷ்னா தோராவில் (அதிகாரம் 10:7-14) ஏழைகளுக்குக் கொடுப்பது பற்றிய பல்வேறு சட்டங்களைக் காணலாம். பெறுபவர் தன்னிறைவு அடையும்படி கொடுத்தல், கொடுத்தலும், பெறுதலும் அடையாளம் தெரியாமல் இருத்தல், கேட்பதற்கு முன், கேட்டவுடன் கொடுப்பது, கெஞ்சாமல் கொடுப்பது, குறைவாயினும் மகிழ்ச்சியுடன் கொடுப்பது. ஏழைகளுக்கு தர்மம் செய்தலை இஸ்ரவேலருக்கு கட்டளைகளாகவே கடவுள் கொடுத்திருக்கிறார்.

'நீங்கள் பயிரிட்டதை அறுவடை செய்யும் போது, வரப்பு ஓரக்கதிரை அறுக்க வேண்டாம். அரிக்கட்டினை மறந்து வயலிலே விட்டுவந்தால், அவற்றை எடுக்கத் திரும்பிப்போகாதே. திராட்சைத்தோட்டத்தில் பின்னறுப்பு வேண்டாம். சிந்திக்கிடக்கும் பழங்களைப் பொறுக்கவேண்டாம்'. (லேவியர் 19:9,10).

'ஒலிவ மரத்தை உதிர்க்கும்போது உதிராததைப் பறிக்காதே. அவற்றை எல்லாம் எளியோருக்கும், அன்னியருக்கும், அனாதைக்கும், கைம்பெண்ணுக்கும் விட்டுவிடு. பத்திலொரு பகுதி செலுத்தும் ஆண்டில், விளைச்சலில் பத்திலொரு பாகத்தையும் அவர்கள் உன் வாயில்களுக்குள்ளே உண்டு நிறைவு அடையும்படி அவர்களுக்கு கொடு' என்கிறார்.

'மன்னர் அகஸ்வேரின் காலத்தில் பூரிம் பெருவிழாவில் இஸ்ரவேலர் தம் பகைவரின் தொல்லையினின்று விடுதலை பெற்ற பெருமகிழ்வைக் கொண்டாடும் போதும் ஏழைகளுக்கு உணவளிக்கவும் திட்டமிட்டார்கள்'. (எஸ்தர் 9:22).

மறைவாகச் செய்வோம்

ஆண்டவர் இயேசு, இறைவன் விரும்புகிற தர்மம் செய்தலைக் குறித்து மிகத் தெளிவாகக் கூறுகிறார். மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள்முன் உங்கள் அறச்செயல்களைச் செய்யாதீர்கள். ஏனெனில் உங்கள் விண்ணகத் தந்தையிடம்இருந்து உங்களுக்கு கைம்மாறு கிடைக்காது என எச்சரிக்கிறார். 'நீங்கள் தர்மம் செய்யும் போது உங்களைப் பற்றி தம்பட்டம் அடிக்காதீர்கள். மக்கள் புகழ வேண்டுமென்று வெளிவேடக்காரரைப் போல் தொழுகைக்கூடங்களிலும், சந்துகளிலும் நின்று தர்மம் செய்யாதீர்கள்.

ஏனெனில் அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள்'. (மத்தேயு6:1,2)

அன்பில்லாமல் ஒருவர் தனக்குண்டானவைகளை எல்லாம் அன்னதானம் செய்ய முடியும். தர்மப்பிரபு, தயாளன் என்றெல்லாம் பெயரெடுப்பதே இச்செயலின் உள்நோக்கமாகும்.

அப்படிப்பட்ட செயல் கொடுப்பவருக்குப் புகழ்ச்சியாகவும், அதே சமயத்தில் பெற்றுக்கொள்பவரின் கண்ணியத்துக்கும் சுயமரியாதைக்கும் இழுக்காகவும் அமையும்.

ஆனால் ஏழைகளின் கண்ணியம், சுயமரியாதை காக்கப்பட வேண்டுமாதலால் இச்செயல்கள் ரகசியமாயிருத்தல் அவசியம்.

ஆதலால் தான் ஆண்டவர் இயேசு, "நீங்கள் தர்மம் செய்யும்போது உங்கள் வலக்கை செய்கிறதை இடக்கை அறியாதபடி செய்யுங்கள். உங்கள் தர்மம் மறைவாயிருந்தால், மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்" (மத்தேயு 6:3,4) என்கிறார்.

மறவாமல் செய்வோம்

'அன்றியும் நன்மை செய்யவும், தான தர்மம் பண்ணவும் மறவாதீர்கள். இப்படிப்பட்ட பலிகளின் மேல் கடவுள் பிரியமாயிருக்கிறார்'. (எபி 13:16).

திருச்சபை வரலாற்றின் தொடக்க நாட்களில் திருத்தூதர்கள் இத்திருத்தொண்டை மிகச் சிறப்பாக செய்தனர். திருத்தூதர் பவுலும், பர்னபாவும் தர்ம ஊழியத்தை செய்தனர். கைம்பெண்கள், ஏழை-எளியோர் அன்றாடம் கவனிக்கப்பட வேண்டுமென்று தான் திருச்சபையின் மூப்பர்கள் தெரிந்தெடுக்கப்பட்டனர். தர்மசகாயம் செய்யவும், தர்ம ஊழியத்தைத் தாங்கவும் திருத்தூதர் பவுல் பல திருச்சபை மக்களை கேட்டுக் கொள்கிறார்.

மக்கதோனியா நாட்டுத் திருச்சபையார் மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்படுகையில், கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும் தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே, மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள். அவர்கள் தங்கள் திராணிக்குத் தக்கதாகவும், தங்கள் திராணிக்கு மிஞ்சியும் கொடுத்தார்கள். நாங்கள் நினைத்ததற்கு மேலாகவும் கொடுத்தார்கள்.

'மற்றெல்லாக் காரியங்களிலும் நீங்கள் பெருகியிருக்கிறது போல, இந்த தர்ம காரியத்திலும் பெருகவேண்டும்'. (2 கொரிந்தியர் 8:2-3,7)

இத்திருத்தொண்டினால் பல இறைமக்களின் தேவை நிறைவு செய்யப்படுகிறது. பலர் நன்றி யின் நிறைவாக கடவுளைப் போற்றிப் புகழ்வார்கள். அவர்கள் உங்கள் மீது நெருங்கிய ஈடுபாடு கொண்டு உங்களுக்காக இறைவனிடம் வேண்டுவர் என கொரிந்து நகர மக்களைக் கேட்டுக்கொள்கிறார்.

இறைமகன் இயேசு நம் வாழ்வின் மீட்புக்காய் கொடுக்கப்பட்ட மாபெரும் அருட்கொடை. பிறருக்கு கொடுப்பதால் இறைவன் நமக்குத் தருவார் என்ற எதிர்பார்ப்போடல்ல, நம் வாழ்வு, நல்வாழ்வு, நல்பாதுகாப்பு யாவும் இறைவன் நமக்குத் தந்துகொண்டிருக்கிற பெருங்கொடை என்ற நன்றியுணர்வுடன் தர்மம் செய்வோம்.


Next Story