வித்தியாசமான பிரசாதங்கள்


வித்தியாசமான பிரசாதங்கள்
x

ஆலயங்களில் இறைவனுக்கு படைக்கப்படும் நைவேத்தியங்களும் கூட பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படும்.

பொதுவாக ஒவ்வொரு கோவிலிலும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். பெரும்பாலும் அந்த பிரசாதம், விபூதி, குங்குமமாகத்தான் இருக்கும். ஆனால் சில ஆலயங்களில் இறைவனுக்கு படைக்கப்படும் நைவேத்தியங்களும் கூட பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படும். அவற்றில் வித்தியாசமான சில பிரசாதங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.

* பொள்ளாச்சியில் இருந்து சுமார் 14 கி.மீ. தூரத்தில் உள்ளது, ஆனைமலை மாசாணியம்மன் கோவில். இங்கு அம்மன், சயன கோலத்தில் அருள்பாலிக்கிறார். இத்தல அம்மனின் நெற்றியில் சக்கரம் உள்ளது. இந்தக் கோவிலில் பச்சிலையை பிரசாதமாகத் தருகிறார்கள். பெண்களுக்கான உடல் பிணிகள், வயிறு தொடர்பான நோய்களை நீக்கும் வல்லமை இதற்கு உண்டாம். தை அமாவாசையில் வழிபட வேண்டிய தலம் இதுவாகும்.

* டேராடூனில் இருந்து முசோரி செல்லும் சாலையில் உள்ளது, சிவபுரி. இங்கு பிரகாஷ் ஈஸ்வர் மகாதேவ் மந்திர் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் காலை வேளையில் காரச்சேவும், பூந்தியும் பிரசாதமாக தரப்படுகிறது. மதிய வேளையில் சாதம், பருப்பு வழங்குவதோடு ஐஸ்கிரீமும் தருகிறார்கள்.

* கடலூர் மாவட்டம் திருக்கூடலையாற்றூர் என்ற இடத்தில் நர்த்தனவல்லபேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஞானசக்தி அம்மன், பராசக்தி அம்மன் என்ற இரண்டு அம்மன் சன்னிதிகள் இருக்கின்றன. இதில் ஞானசக்தி அம்மன் சன்னிதியில் குங்குமமும், பராசக்தி அம்மன் சன்னிதியில் விபூதியும் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

* தெலுங்கானா மாநிலம் செகாந்திரபாத் அடுத்துள்ளது, ஸ்கந்தகிரி. இங்குள்ள ஆஞ்சநேயர் கோவிலிலும் எல்.பி.நகர் அருகில் உள்ள கர்மன்காட் அனுமன் கோவிலிலும் வெற்றிலையால் அர்ச்சனை செய்யப்படுவது வாடிக்கை. ஆயிரம், எண்ணாயிரம் என்று இங்கு அனுமனுக்கு வெற்றிலை அர்ச்சனை செய்யப்படும். இதனால் இங்கு வரும் பக்தர்களுக்கு வெற்றிலையே பிரசாதமாக வழங்கப்படுகிறது.

* நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ளது ஒருவந்தூர். இங்கு பிடாரி செல்லாண்டி அம்மன் ஆலயம் இருக்கிறது. சுயம்புவாக அருளும் இந்த அம்மனின் ஆலயத்தில் உப்பு மண்ணை, விபூதி பிரசாதமாக தருகிறார்கள். இதனை உடலில் பூசினால், வினைகள் யாவும் விலகும் என்பது நம்பிக்கை. சிவன் - பார்வதி இணைந்த வடிவமே, 'பிடாரி அம்மன்' என்று சொல்லப்படுகிறது.

* தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை கிரிவலப்பாதையில் மிளகாய் சித்தர் சமாதி உள்ளது. இங்கு வரும் பக்தர்களுக்கு, மிளகாய் வற்றல் பிரசாதமாக தரப்படுகிறது. இதை வீட்டிற்குக் கொண்டுபோய் சமையலில் பயன்படுத்தி சாப்பிட்டால் நோய் நொடிகள் அகலும் என்பது நம்பிக்கை.

* ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியில், பாலா திரிபுரசுந்தரி அம்மன் ஆலயம் உள்ளது. இந்த அம்மன் முன்பாக கலசத்தில் வைக்கப்படும் தேங்காய், ஒரு வருடம் கழித்துதான் எடுக்கப்படும். ஒரு நவராத்திரியில் வைக்கப்படும் கலசத் தேங்காயை அடுத்த நவராத்திரி பூஜையின் முதல் நாளில்தான் எடுப்பார்கள். அப்போதும் அந்த தேங்காய் கெடாமல் இருக்கும். முந்தைய நவராத்திரி பூஜையில் வைக்கப்பட்ட அந்த தேங்காய், அடுத்த வருட நவராத்திரி முதல் நாள் பூஜையில் உடைக்கப்பட்டு, அதனை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவார்கள். குழந்தை வடிவம் கொண்டவள் இந்த நெமிலி பாலா திரிபுரசுந்தரி என்பதால், இங்கு வரும் பக்தர்களுக்கு குழந்தைகளுக்குப் பிடித்த சாக்லெட்டும் பிரசாதமாக வழங்கப்படுகிறது.


Next Story