எட்டு விதமான சொர்க்கம்...

இறைவனின் நல்லடியார்களின் ஒரே குறிக்கோள், இந்த உலக வாழ்க்கைக்கு பிறகு வரும் மறுமை வாழ்க்கையில் சொக்கம் செல்ல வேண்டும் என்பது தான். ஒரு மனிதனிடம் 5 விதமான தன்மைகள் இருந்தால் அவன் சொர்க்கம் செல்ல முடியும் என்று அபுல்லைத் (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அவை வருமாறு:-
1) ஒரு மனிதன் உலக வாழ்க்கையின் போது அனைத்து வகையான தீமையான காரியங்களில் இருந்தும் தன்னை தடுத்துக்கொள்ள வேண்டும்.
2) உலக வாழ்வில் தனது வருமானம் குறைவாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு அதற்குள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும். இதை விட்டுவிட்டு தவறான வழியில் செல்வத்தை தேடக்கூடாது.
3) தன் வாழ்நாள் முழுவதும் இறைவனை வணங்கி வழிபாடு செய்வதில் ஒரு மனிதன் பேராசை கொள்ள வேண்டுமே தவிர பிற பொருட்களின் மீது அல்ல . இதன் மூலம் இறைவனிடம் பாவ மன்னிப்பு பெறவும், இறைவனின் அன்பைப்பெறவும் முயற்சி செய்ய வேண்டும்.
4) நல்லவர்களின் தோழமையை அதிகரிக்க வேண்டும். அதாவது நல்லவர்களைத் தேடிச்சென்று அவர்களுடன் நட்பு கொள்ளவேண்டும். அவர்களுடன் சேர்ந்து நல்லவற்றையே செய்ய வேண்டும்.
5) மரணம் என்பது வலி, வேதனை இன்றி அமைதியானதாக இருக்க வேண்டும். யாருக்கும் பாரமாக தொந்தரவாக நமது மரணம் அமையக்கூடாது. அத்தகைய மரணத்தை இறைவனிடம் கேட்க வேண்டும். அதோடு நமது பாவங்களை எல்லாம் மன்னித்து சொர்க்கத்தை தருமாறும் இறைவனை மன்றாடிக்கேட்க வேண்டும். இந்த 5 தன்மைகள் ஒரு மனிதனிடம் இருந்தால் அவன் சொர்க்கம் செல்ல முடியும். நபிகளார் (ஸல்) அவர்கள் கூறும்போது,
'நீங்கள் இறைவனிடம் சொர்க்கத்தை கேளுங்கள். அதிலும் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்னும் சொர்க்கத்தை கேளுங்கள்' என்றார்கள். (நூல்: மிஷ்காத்)
இறைவன் கூறும்போது, 'நபியே , இந்த சொர்க்கம் கிடைப்பதற்காக உலக மக்கள் அனைவருக்கும் சுபச்செய்தி கூறுபவராக உம்மை நாம் அனுப்பினோம்' என்று குறிப்பிடுகிறான்.
நபிகளாரும் இதை ஏற்று சொர்க்கம் உள்பட இறைவனின் திருப்பொருத்தத்தை மனிதர்கள் பெறுவதற்கான வழிமுறைகளை சுபச்செய்திகளாக எடுத்துரைத்தார்கள். அதோடு இறைவன் வகுத்த வழியில் வாழ்ந்தும் காட்டினார்கள். நபிகளாரின் வாழ்க்கை மக்களுக்கு உதாரணமாக அமைந்தது.
எட்டு விதமான சொர்க்கம்...!
இறைவன் தனது அடியார்களுக்காக எட்டு விதமான சொர்க்கத்தை உருவாக்கி வைத்திருக்கிறான்.
அவை வருமாறு:-
தாருல் ஜலால்: வெண்முத்து, பவளம் ஆகியவற்றால் கட்டப்பட்ட மாளிகை.
தாருஸ் ஸலாம்: சிகப்பு மரகத கற்களால் அமைந்த பெரிய மாளிகை .
ஜன்னத் துல் மஃவா: பச்சை நிற மரகத கற்களால் கட்டப்பட்ட மாளிகை .
ஜன்னத் துல் குல்த் : மஞ்சள் நிற மரகதகற்களால் உருவான மாளிகை .
ஜன்னத் துல் நயீம்: பளபளக்கும் வெ ள்ளியால் அமைந்த மாளிகை .
தாருல் கரார்: சிவந்த நிறமுடை ய தங்கத்தால் கட்டப்பட்ட மாளிகை .
ஜன்னத் துல் பிர்தவ்ஸ்: எல்லா விதமான விலை உயர்ந்த கற்களால் கட்டப்பட்ட மாளிகை . இதனுள் கஸ்தூரி வாசம் நிரம்பி வழியும்.
ஜன்னத் துல் அத்ன் : தங்கம்-வெள்ளி ஆகியவற்றால் அமைந்த மாளிகை .
உலக வாழ்வை இறைவழியிலும், இறைத் தூதர் காட்டிய வழியிலும் ஒருவர் அமைத்துக்கொண்டால், அவர் இந்த எட்டு சொர்க்கங்களையும் பெற்று இனிய வாழ்வை மறுமையிலும் அனுபவிக்கலாம்.
மவுலவி வடகரை ஏ. முகம்மது இஸ்மாயில் காஷிபி, சென்னை.






