நம்பிக்கை வீண் போகாது


நம்பிக்கை வீண் போகாது
x

மனித வாழ்வு முழுமையாக நம்பிக்கையின் அடிப்படையில் இயங்குகிறது.

வாழ்க்கையில் ஏற்படும் தோல்விகள், இழப்புகள், வலிகள், துயரங்கள் போன்றவற்றை பகிர இயலாமல் திகைக்கின்ற வேளையில் எங்கோ மிளிர்கின்ற நம்பிக்கையின் ஒளிச்சிதறல் தான் நம் வாழ்வை உயிர்ப்போடு மீண்டும் இயங்கச் செய்கிறது. சோர்ந்து போன உள்ளங்களை திடப்படுத்தி, பெலப்படுத்தி, நம்பிக்கையூட்டுவதில் அருள்நிறைந்த இறைவார்த்தைகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. திருப்பாடல் ஆக்கியோன், 'உமது திருச்சட்டம் எனக்கு இன்பம் தருவதாய் இல்லாதிருந்தால், என் துன்பத்தில் நான் மடிந்து போயிருப்பேன்' (திபா.119:92) என்கிறார்.ஆம், நாம் வாழ்வதற்கான உந்துதலைத் தருகின்ற திருவார்த்தைகளில் ஒன்று தான், 'நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண் போகாது' (நீதிமொழிகள்23:18).

உன் வருங்காலம் வளமானதாயிருக்கும்

இங்கே குறிப்பிடுகின்ற நம்பிக்கை என்பது 'எதிர்காலம் பற்றிய நம்பிக்கை'ஆகும். அதுவும் வளமான, நலமான,அமைதியும், அருளும், ஆற்றலும் நிறைந்த எதிர்காலம் வாக்கு செய்யப்படுகிறது. பாபிலோனில் பல்லாண்டுகளாக சிறைப்பட்டிருந்த இஸ்ரவேலர் விடுதலை வாழ்வுக்கான ஏங்கித் தவித்தனர். விடுதலை பெறுவதற்கான வாய்ப்புகள் அனைத்தும் மறுக்கப்பட்ட நம்பிக்கையற்ற நிலையில், இனி நாம் சீக்கிரத்தில் விடுதலை பெறமாட்டோம் என்று நினைத்து வேதனையோடு காணப்பட்டனர். அப்போது அந்த மக்களை கடவுள், இறைவாக்கினர் எரேமியாவின் மூலமாக நம்பிக்கையூட்டுகிறார். 'உங்களுக்காக நான் வகுத்திருக்கும் திட்டங்கள் எனக்குத் தெரியும். அன்றோ! அவை வளமான எதிர்காலத்தையும், நம்பிக்கையையும் உங்களுக்கு அளிப்பதற்கான நல்வாழ்வின் திட்டங்களே அன்றி, கேடு விளைவிப்பதற்கான திட்டங்கள் அல்ல',என்கிறார் ஆண்டவர்.(எரேமியா 29:11).

உன் நம்பிக்கை வீண்போகாது

கடவுளை நம்பிக்கையோடு நாடினோரின் விசுவாசம் ஒருபோதும் வீணாகப் போனதில்லை. 'என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை' (யோவேல்.2:26).

இது கடவுள் நமக்குத் தந்திருக்கும் உறுதிமொழியும் கூட. ஆண்டவர் இயேசுவை, சுகம்பெற நம்பிக்கையோடு நாடி தேடி வந்த அனைவரும் விடுதலை நிறைந்த நல்வாழ்வைப் பெற்றார்கள்.தன் அன்பு மகளுக்காக மிகப் பொறுமையோடும், மன வலிமையோடும், தளரா நம்பிக்கையுடனும் பாசப் போராட்டம் நடத்திய தாயைப் பார்த்து, 'அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்'(மத்தேயு.15:28) என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அந்த மகளின் பிணி நீங்கியது. ஆண்டவர் இயேசுவின் சுகமளிக்கும் வல்லமையின் மீதிருந்த நம்பிக்கை அளப்பரியது. மிகுந்த வேதனையோடு வந்த தாயார் அளவில்லாத மகிழ்ச்சியோடு திரும்பிச் செல்கிறார். தன் வியாதியினால் தம் சொத்து முழுவதையும் மருத்துவரிடம் செலவழித்தும்,எவராலும் குணமாக்க இயலாமல் பன்னிரு ஆண்டுகளாய் ரத்தப் போக்கினால் அவதியுற்ற ஒரு பெண்மணி, 'ஆண்டவர் இயேசுவால் மிக நிச்சயமாக எனக்கு சுகம் தரமுடியும்' என்று தன் இறுதி நம்பிக்கையாக ஆண்டவர் இயேசுவைத் தேடி வருகிறார்.'நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே போதும், நலம் பெறுவேன்' என்ற மாபெரும் நம்பிக்கையுடன் மக்கள் கூட்டம் சூழ்ந்திருந்த வேளையிலும் ஆண்டவர் இயேசுவைப் பின்தொடர்ந்து, அவரது மேலாடையின் ஓரத்தைத் தொட்டார். உடனே ரத்தப் போக்கு நின்று போயிற்று.

ஆண்டவர் அப்பெண்மணியைப் பார்த்து, 'மகளே, துணிவோடிரு; உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று' என்றார் (மத்தேயு.9:22). ஆண்டவர் இயேசு சென்ற வழியில் பார்வையற்றறோர் இருவர் வெகுதூரத்தில் நின்று கொண்டு 'தாவீதின் மகனே, எங்களுக்கு இரங்கும்'என்று கத்திக்கொண்டே அவரைப் பின்தொடர்ந்தனர். 'நான் இதைச் செய்ய முடியும் என நம்புகிறீர்களா?' என்று கேட்க அவர்கள் 'ஆம், ஐயா' என்று சொன்னார்கள். ஆண்டவர் இயேசுவைக் கண்டால் நலம்பெறுவேன் என்ற நம்பிக்கையுடனும், நலம்பெற வேண்டுமென்ற வாஞ்சையுடனும் நாடி வந்தவர்களின் கண்களைத்தொட்டு, அவர்களைப் பார்த்து 'நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும்' (மத்தேயு.9:29) என்றார். உடனே அவர்களின் கண்கள் திறந்தன.

நீங்களும், ஒருவேளை தாங்கமுடியாத வியாதியின் கொடிய வேதனைகளோடும், கடினமான வலிநிறைந்த சிகிச்சைகளைப் பெற்றுக்கொண்டும், மாற்றவியலாத பெலவீனத்தின் கடுமையான வலியின் அனுபவங்களோடும் வாழ்ந்து வரலாம். பல்வேறு மருத்துவர்களைச் சந்தித்தும், அநேகம் பணம் செலவழித்தும் வியாதியிலிருந்து சுகம் பெறாமல் மருத்துவர்களாலும், மனிதர்களாலும் கைவிடப்பட்ட நிலையிலோ, வெளியே சொல்லமுடியாத, தீர்வு காணவியலாத பெரிய பிரச்சினைகளால் மனம் சோர்ந்தவர்களாகவும் இருக்கலாம். நம்பிக்கை வீண்போகாது இன்று கடவுள் உங்களைப் பார்த்து சொல்லுகிறார், "நிச்சயமாகவே முடிவு உண்டு, உன் நம்பிக்கை வீண்போகாது". வியாதிகள், பெலவீனங்கள், பிரச்சினைகள் எல்லாவற்றைக் காட்டிலும் மிகப்பெரியவர் நம் கடவுள்.

- அருட்பணி ம.பென்னியமின், வேலூர


Next Story