சமயத்தில் கைகொடுத்த இரும்புக் கை


சமயத்தில் கைகொடுத்த இரும்புக் கை
x

கைகேயி தன்னுடைய கட்டைவிரலை, அச்சாணியாக பயன்படுத்தி தேர் நிலை தடுமாறாமல் பாதுகாத்தாள். கைகேயி விரல், தசரதரின் தேருக்கு அச்சாணியாக மாறியது.

ஒரு முறை தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்றது. அந்தப் போரில் தேவர்களின் சார்பில் பங்கேற்றார், தசரதர். அந்தப் போரில் தானும் பங்கேற்க விரும்பினாள், தசரதரின் மனைவிகளில் ஒருவரான கைகேயி. அவள் தேர் ஓட்டுவதில் கெட்டிக்காரி என்பதால், கைகேயியையும் தன்னுடன் அழைத்துச் சென்றிருந்தார், தசரதர்.

தேவர்களுக்கும் அசுரர்களுக்கு போர் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது தசரதரின் தேர் அச்சாணி முறிந்து, தேர் கவிழும் நிலை ஏற்பட்டது. அப்போது கைகேயி தன்னுடைய கட்டைவிரலை, அச்சாணியாக பயன்படுத்தி தேர் நிலை தடுமாறாமல் பாதுகாத்தாள். இதனால் அசுரர்களுடன் தொடர்ந்து போரிட்டு, தேவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார், தசரதர். இந்தப் போரில் தன்னுடைய வெற்றிக்கு உறுதுணையாக இருந்த காரணத்தால், கைகேயிக்கு இரண்டு வரங்களை அளித்தார், தசரதர். ஆனால் தேவைப்படும்போது அந்த வரங்களை கேட்டுப் பெற்றுக்கொள்வதாக கைகேயி கூறிவிட்டாள். அந்த இரண்டு வரங்களைத் தான், பின்னாளில் 'தன் மகன் பரதன் நாடாள வேண்டும்' என்றும், 'ராமன் 14 ஆண்டுகள் வனத்திற்குச் செல்ல வேண்டும்' என்றும் இரண்டு வரங்களாக கேட்டாள். அதனால்தான் ராமாயண காவியம் பூர்த்தியாகி நமக்கு கிடைத்தது என்பது வேறு கதை.

இங்கே நாம் பார்க்கப் போவது, நம் மனதில் எழும் ஒரு சந்தேகத்திற்கான பதில். பெண்களின் கை மென்மையானது, மலர் போன்றது என்பார்கள். ஆனால் ஒரு தேரின் அச்சாணியாக செயலாற்றும் அளவுக்கு கைகேயியின் விரல்கள் இரும்பாக மாறிப்போனது எப்படி? என்ற கேள்வி இங்கே தோன்றும். அந்த கதையை இங்கே பார்ப்போம்.

கைகேயி சிறுமியாக இருந்தபோது, நடந்த சம்பவம் அது. ஒரு முறை துர்வாசரைப் போன்ற முனிவர் ஒருவர் கேகய நாட்டின் அரண்மனைக்கு வந்தார். அப்போது கைகேயி சிறுமியாக இருந்தாள். ஒரு நாள் அந்த முனிவர் உறங்கியபோது, கைகேயி சிறுபிள்ளைக்கே உரிய குறும்புத் தனத்தால், முனிவரின் முகத்தில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி விட்டாள். தூங்கி எழுந்த முனிவரைக் கண்ட அரண்மனைப் பணியாளர்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவர்களின் சிரிப்புக்கான காரணத்தை அறிந்ததும், முனிவரின் கோபம் அதிகரித்தது.

அதைக் கண்டு பயந்து போன கைகேயி, "முனிவரே.. விளையாட்டுத்தனமாக நான் செய்த செயலை மன்னிக்க வேண்டும்" என்று வேண்டினாள். கைகேயியின் தந்தையும் முனிவரிடம் மன்றாடினார். "தவசீலரே.. கைகேயி தங்களுக்கு பணிவிடை செய்து, பரிகாரம் தேடுவாள்" என்றாா். அதற்கு முனிவர் ஒப்புக்கொண்டார். அதன்படி கைகேயி பல காலம் முனிவருக்கு பணிப் பெண் போல இருந்து அனைத்து விதமான பணிவிடைகளையும் செய்து கொடுத்தாள். அதுவரை அரண்மனையில் வசித்த முனிவர், பின்னர் காட்டிற்கு தவம் செய்ய புறப்பட்டார். அப்போது தனக்கு இதுநாள் வரை பணிவிடை செய்த கைகேயிக்கு வரம் அளிக்க விரும்பினார். மேலும் அவரே "தேவைப்படும் நேரத்தில் உன்னுடைய கரங்கள் இரும்பின் வலிமையைப் பெறும்" என்றார். அதன்படியே கைகேயி விரல், தசரதரின் தேருக்கு அச்சாணியாக மாறியது.


Next Story