கொங்கண சித்தரும்... தங்கப்புதையல் ரகசியமும்...


கொங்கண சித்தரும்... தங்கப்புதையல் ரகசியமும்...
x

பதினெட்டு சித்தர்களில் முக்கியமான சித்தரான கொங்கணர், வாசம் செய்த இந்த சூரியமலையின் அடிவாரத்தில் சித்தேஸ்வரர் கோம்பை என்ற இடத்தில் பாறையில் செதுக்கப்பட்டுள்ள ஆதிசேஷ நாக சிற்பம், குகைக்கோவிலின் வழிகாட்டியாக இருக்கிறது.

சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து சங்ககிரி செல்லும் சாலையில் வேலம்மா வலசு என்ற கிராமம் உள்ளது. இங்கிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் சூரிய மலை இருக்கிறது. மஞ்சள் அரளிச் செடிகள் பரவி வளர்ந்துள்ள இந்த மலையில் மூலிகை செடிகளுக்கு பஞ்சம் இல்லை. இந்த மலையில், கொங்கண சித்தர் சில நூற்றாண்டு காலம் தங்கி தவம் புரிந்த குகை அமைந்துள்ளது. பதினெட்டு சித்தர்களில் முக்கியமான சித்தரான கொங்கணர், வாசம் செய்த இந்த சூரியமலையின் அடிவாரத்தில் சித்தேஸ்வரர் கோம்பை என்ற இடத்தில் பாறையில் செதுக்கப்பட்டுள்ள ஆதிசேஷ நாக சிற்பம், குகைக்கோவிலின் வழிகாட்டியாக இருக்கிறது. அந்த இடத்தில் கொங்கண சித்தர் கால் பாதமும் செதுக்கப்பட்டுள்ளது.

அங்கிருந்து மலையில் பாறை மற்றும் ஒற்றையடி பாதையில் சுமார் அரைக் கிலோமீட்டர் தூரம் நடந்துசென்றால், அகன்ற குடை போன்ற பாறையின் கீழே கொங்கண சித்தர் தங்கிய குகைக்கோவில் இயற்கை எழில் சூழ அமைந்திருக்கிறது. அங்குள்ள பாதாள குகையில், கொங்கண சித்தர் வாழ்ந்து வந்ததாகவும் பல்வேறு மூலிகை இலைகளை பறித்து பல்வேறு திரவியங்கள் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அவர் வாசம் செய்ததாக கூறப்படும் இந்த இடத்தில் அவரது சிலையும் உள்ளது.

மேலும் இங்கு விநாயகர், வள்ளி-தெய்வானை சமேத முருகன், பெருமாள், கன்னிமார் சிலைகளை தொடர்ந்து கொங்கண சித்தரின் மண் சிலை உள்ளது. அடுத்து கொங்கண சித்தரின் கற்சிலையும், பாலாம்பிகை சிலையும் உள்ளது. இந்த இரு கற்சிலைக்கு மேல் சித்தரின் யோகமுத்திரை பொறிக்கப்பட்டு உள்ளது.

இந்த சிலைகளுக்கு இடது புறமாக பாதாள குகைக்கு செல்லும் அறை போன்ற இடத்திற்கு முன்பாக, தட்சணாமூர்த்தி சிலையும் உள்ளது. இந்த சிலையை கடந்து கோவிலின் ஒரு பகுதியில் குகை செல்கிறது. சுமார் 200 மீட்டர் தொலைவுக்கு செல்லும் இக்குகையில் தான் சித்தர் தவம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த குகையின் அடியில் சற்று தொலைவில் பாதாளத்தில் 'பாலி' என்று அந்த பகுதி மக்கள் அழைக்கும் சுனையும் உள்ளது. தற்போது இந்தச் சுனைப் பகுதியில் பாம்பு நடமாட்டம் உள்ளதால், சிறப்பு பூஜை நடைபெறும் பவுர்ணமி, அமாவாசை தினங்களில் மட்டும், அங்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்து சித்தருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. அந்த சுனை நீர்தான், பக்தர்களுக்கு தீர்த்தப் பிரசாதமாகவும் வழங்கப்படுகிறது.

அமாவாசை அன்று காலையிலும், பவுர்ணமி அன்று மாலையிலும் இங்கு சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது. மற்ற நாட்களில் இங்கு வரும் பக்தர்கள் சித்தர் தவம் செய்த குகைக்கோவிலில் அமர்ந்து தியானித்து செல்வதையும் காணமுடிகிறது. இத்தகைய சிறப்புமிக்க குகைக்கோவிலில் தங்கப்புதையல் உள்ளதாக கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சர்ச்சை எழுந்தது. அதாவது கொங்கண சித்தர் இரும்பை பொன்னாக்கும் ரசவாத வித்தை தெரிந்தவர் என்றும், அவர் தொட்டதை தங்கமாக்கும் சக்தி பெற்றவர் என்றும் கூறுகிறார்கள். ஒருமுறை சித்தர், இந்த பகுதியில் ஆடு மேய்த்தவர்களிடம் அவர்கள் வைத்திருந்த கம்பை வாங்கி அதை பொன்னாக்கி கொடுத்து விட்டு சென்றதாகவும் செவி வழிச் செய்தி கூறப்படுகிறது.

அதேநேரத்தில் அவருக்கு பொன்னாசை இல்லை என்பதால், அவர் வாழ்ந்த காலம் முழுவதும் உணவை யாசகம் பெற்றே உண்டு வாழ்ந்்ததாகவும் கூறுகிறார்கள். எனவே அவர் வாசம் செய்த குகைக்கோவிலில் தங்கப்புதையல் உள்ளதாக கிளம்பிய சர்ச்சையை அடுத்து, அப்போது வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் இந்த குகைக்கோவிலை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது அங்கிருந்த கல்வெட்டுகளில் உள்ள பிராமி எழுத்துக்கள் இக்குகை சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை வாய்ந்ததாக இருக்கலாம் என்பதை கண்டறிந்தனர். ஆனால் இங்கு தங்கப்புதையல் இருந்ததா? என்பதை கண்டறிய முடியவில்லை. இதனால் இந்த குகைக்கோவிலும், தங்கப்புதையல் ரகசியமும் இன்றளவும் கொங்கண சித்தருக்கே வெளிச்சம்.

இந்த சிறப்புமிக்க குகைக்கோவிலில் இருந்து சுமார் 100 அடி தூரம் மலைப்பகுதியில் நடந்து சென்றால், மற்றொரு குகைக்கோவில் உள்ளது. சுமார் 30 அடி தூரம் மிகவும் குறுகலான குகைப்பாதையில் சென்றால் அங்கு மிக சிறிய வடிவிலான சிவலிங்கம்-நந்தி சிலைகளை காணமுடிகிறது. மேலும் செம்பினால் ஆன பெருமாள்-லட்சுமி சிலைகளும் உள்ளன. இங்குள்ள சிலைகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிவனடியார்களால் வைக்கப்பட்டு வழிபட்டு வருவதாக கூறப்படுகிறது.

பழனி பால தண்டாயுதபாணி சாமிக்கு நவபாஷாண சிலையை உருவாக்கிய போகரின் சீடர்தான் கொங்கணர். இவர் தன் குருவைப் போலவே, இந்த குகையில் நவபாஷாண லிங்கத்தை வடிவமைத்து வழிபட்டதாகவும், காலவெள்ளத்தில் அந்த சிவலிங்கம் குகையில் புதைந்து விட்டதாகவும் அங்கு வரும் சிவனடியார்கள் கூறுகின்றனர்.

கொங்கணர் திருப்பதியில் ஜீவசமாதி அடைந்ததாக கூறப்படுகிறது. கொங்கணர், கேது கிரகத்தை பிரதிபலிப்பதாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது. பொதுவாக பலரது திருமண வாழ்வு தடைக்கு ராகு-கேது கிரகங்கள் காரணமாக அமைகின்றன. எனவே இங்குள்ள கொங்கணரை வழிபடுவதன் மூலம் ராகு-கேது தோஷங்கள் நீங்கி திருமணத்தடை அகலும் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை. இந்தக் குகைக் கோவிலுக்கு பெரும்பாலானவர்கள் எளிதில் சென்று வர முடியாத அளவுக்கு, குகைக்குள் நுழைந்து செல்லும் பாதை மிகவும் குறுகலாகவே உள்ளது.

அமைவிடம்

சூரியமலை கொங்கண சித்தர் குகைக்கோவிலுக்கு காரில் வர விரும்பும் பக்தர்கள், சேலத்தி்ல் இருந்து எடப்பாடிக்கு வந்து, அங்கிருந்து சங்ககிரி செல்லும் வழியில் வேலம்மா வலசு என்ற கிராமத்தின் பிரிவு சாலையில் செல்ல வேண்டும். அங்கிருந்து 5 கிலோமீட்டர் தூரம் வந்தால் சூரியமலையை அடையலாம். அதே நேரத்தில் பஸ்சில் வர விரும்புபவர்கள் சேலத்தில் இருந்து எடப்பாடிக்கு வந்து, அங்கிருந்து ஆட்டோக்களில் சூரியமலை குகைக்கோவிலுக்கு சென்று வரலாம்.


Next Story