நர்த்தன கிருஷ்ணர் அலங்காரத்தில் சந்திர பிரபை வாகனத்தில் மலையப்பசாமி வீதி உலா

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவின் 7-வது நாளான நேற்று இரவு சந்திர பிரபை வாகனத்தில் நர்த்தன கிருஷ்ணர் அலங்காரத்தில் எழுந்தருளி உலா வந்தார்.
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 7-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 10 மணிவரை சூரிய பிரபை வாகன வீதிஉலா நடந்தது.
அனைத்துக் கிரகங்களின் அரசனாக, தலைவனாக சூரியன் விளங்குகிறார். சூரியன் விசேஷமான ஒளிக்கதிர்களை உமிழ்கிறது. தம் கதிர்களின் செல்வாக்கால், இந்தப் பிரபஞ்சத்தைக் காப்பாற்றுகிறார். தம் ஒளியால் அனைத்து உயிரினங்களும் காண்பதற்கு உதவுகிறது.
சூரியன் இயக்கத்தாலேயே உயிர்வாழிகள் பகலில் சுறுசுறுப்பாகத் தத்தமது கடமைகளை ஆற்றுகின்றன. இரவில் ஓய்வெடுக்கின்றன. சூரிய மண்டலத்துக்கு அதிபதியாக மகாவிஷ்ணுவாகிய சூரியநாராயணசாமி திகழ்கிறார்.
மட்ச நாராயணசாமி அலங்காரம்
எனவே இறைவனுடைய ஞான சக்தியான அருள் தான் சூரியன். தன்னை சரணடையும் பக்தர்களின் சூரிய தோஷம், மாய இருள் நீங்கி, ஒளிமயமான, பிரகாசமான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காக சூரிய பிரபை வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி 'மட்ச (மீன்) நாராயணசாமி' அலங்காரத்தில் எழுந்தருளி அருட்பேரொளி வீசி நான்கு மாடவீதிகளில் உலா வந்து காட்சி தந்தார். நான்கு மாடவீதிகளில் அமர்ந்திருந்த பக்தர்கள் ஏடுகுண்டல வாடா.. வெங்கட்ரமணா கோவிந்தா.. கோவிந்தா.. எனப் பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.
சந்திர பிரபை வாகன வீதிஉலா
அதைத்தொடர்ந்து நேற்று இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணிவரை சந்திர பிரபை வாகன வீதி உலா நடந்தது. சந்திரன், சூரியனுக்கு அப்பால் வெகுதூரத்தில் உள்ளது. வளர்பிறை தேவர்களுக்கு பகலாகவும், பித்ருக்களுக்கு இரவாகவும் உள்ளது. தேய்பிறை தேவர்களுக்கு இரவாகவும், பித்ருக்களுக்கு பகலாகவும் உள்ளது.
அமிர்தம் போன்ற குளிர்ந்த ஒளிக்கு சந்திரனே ஆதாரம். அதுவே, தானியங்களின் வளர்ச்சிக்கு துணைச் செய்கிறது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் சந்திரன் மனோமயன், அன்மையன், அமிர்தமயன், ஸர்வமயன் என்ற பெயர்களால் அறியப்படுகிறார். சந்திரனுக்கு மதி என்ற பெயரும் உண்டு. மதி என்றால் அறிவு என்று பொருள். மனதை இயக்கும், மனதைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அறிவு என்றும் கூறலாம். ஒருவர் அறிவாளியாகவும், நல்ல மனநிலையிலும் இருக்க காரணமான கிரகம் சந்திரனை கூறலாம்.
சந்திரன் முழு நிலவாக வானத்தில் உலா வருபவன். அவன் உலா வருகிறான் என்றால் வானமே சிலிர்த்தெழும். அவனின் பட்டொளி உலகம் முழுவதும் படரும். அதுபோலவே மகாவிஷ்ணுவாகிய மலையப்பசாமி சந்திர பிரபை வாகனத்தில் நர்த்தன கிருஷ்ணர் அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
கோவிலில் இன்று
பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணியளவில் மரத்தேரோட்டமும், இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணிவரை குதிரை வாகன வீதிஉலாவும் நடக்கிறது.






